புனித சூசையப்பர் திருத்தலம், பணகுடி
தமிழகத்தின் தூத்துக்குடி மறைமாவட்டத்தில் உள்ள புனித சூசையப்பர் திருத்தலம்[1] பணகுடியில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் பங்கு ஆலயமாக விளங்குகிறது. சுமார் 850 கிறிஸ்தவ குடும்பங்கள் இந்த ஆலயத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான மக்கள் திருப்பயணமாக இந்த திருத்தலத்திற்கு வருகை தருகின்றனர். புனித சூசையப்பரின் உதவியால் பல்வேறு நன்மைகளைப் பெறுவதாக இவர்கள் நம்புகின்றனர்.
புனித சூசையப்பர் திருத்தலம் | |
---|---|
திருத்தலத்தின் முகப்பு தோற்றம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பணகுடி, தமிழ்நாடு |
சமயம் | கத்தோலிக்கம் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1976 |
நிலை | திருத்தலம் |
இணையத் தளம் | StJosephShrine |
புனித சூசையப்பர்
தொகுபணகுடி திருத்தல பங்கு மக்களின் பாதுகாவலராக இருப்பவர் புனித சூசையப்பர். இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான யோசேப்பே, தமிழில் புனித சூசையப்பர் என்று அழைக்கப்படுகிறார். இப்பெயருக்கு வளன்மை அல்லது செழிப்பு என்பது பொருள். எனவே இவருக்கு, வளனார் என்ற பெயரும் உண்டு.
யோசேப்பு தாவீது அரசரின் வழிமரபில் தோன்றியவர். நாசரேத்தில் வாழ்ந்து வந்த இவர் தச்சுத் தொழில் செய்து வந்தார். தாவீது குலத்து கன்னிப் பெண்ணான மரியாவுடன் யோசேப்புக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வேளையில், மரியா தூய ஆவியின் வல்லமையால் இறைமகனைக் கருத்தாங்கும் பேறு பெற்றார். மரியா திடீரென கருவுற்றதால் யோசேப்பு குழப்பம் அடைந்தார். நேர்மையாளரான இவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கி விட நினைத்தார். மரியா கடவுளின் திருவுளத்தால் இறைமகனை கருத்தாங்கி இருப்பதை வானதூதர் வழியாக அறிந்த இவர் மரியாவை ஏற்றுக் கொண்டார். இயேசு பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலும், அவரைக் கோவிலில் ஒப்புக்கொடுக்க எருசலேம் சென்ற நேரத்திலும், ஏரோது அரசன் அவரைக் கொல்லத் தேடியபோதும் மரியாவையும், குழந்தை இயேசுவையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் யோசேப்பு பாதுகாத்தார். பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட பொழுது, யோசேப்பு மிகுந்த கவலையுடன் தேடி அலைந்து அவரைக் கண்டுபிடித்தார். தச்சுத் தொழிலில் வந்த வருமானம் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றினார். இயேசுவுக்கும் அத்தொழிலைக் கற்றுக்கொடுத்தார். மரியாவுக்கு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் யோசேப்பு விளங்கினார். சிறந்த வாய்மையும் பொறுமையும் கொண்ட யோசேப்பு, திருக்குடும்பத்தை சிறப்புற தலைமைதாங்கி வழிநடத்தினார். இயேசு தனது இறையரசுப் பணியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவும் மரியாவும் அருகில் இருக்க யோசேப்பு பாக்கியமான மரணம் அடைந்தார்.
புனித சூசையப்பர் அகில உலகத் திருச்சபை, கற்பு, தொழிலாளர்கள், கல்வி, திருமணம், குடும்பங்கள், நல்ல மரணம் ஆகியவற்றுக்கு பாதுகாவலராக விளங்குகிறார். பணகுடி திருத்தலத்தின் பெருவிழா தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பர் திருவிழா (மே 1) அன்று கொண்டாடப்படுகிறது.
திருத்தல வரலாறு
தொகுகி.பி.1870களில் அருட்தந்தை கிரகோரி, பணகுடியில் 5 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் புனித சூசையப்பருக்காக ஒரு ஆலயத்தை எழுப்பினார்.[2] அந்த பழைய ஆலயத்தில் 1891 - 1892 காலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. அக்காலத்தில் இப்பகுதி காவல்கிணறு பங்கோடு இணைந்திருந்தது. 1938ஆம் ஆண்டு திருஇருதய அருட்சகோதரர்கள் பணகுடியில் ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கினர். 1939 டிசம்பர் 24 அன்று, அருட்தந்தை சூசைநாதர் தலைமையில் புனித சூசையப்பர் ஆலயம் தனிப் பங்காக உருவானது. அவர் காலத்தில் குருக்கள் இல்லம் கட்டப்பட்டது. 1945ல் அருட்தந்தை டிவோட்டா முயற்சியால் மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் மடம் இப்பங்கில் அமைக்கப்பட்டது. 1947ல் அருட்தந்தை ரெம்ஜியூஸ் காலத்தில் 36 அடி உயர கல் கொடிமரம் நடப்பட்டது. 1954ல் அருட்தந்தை சேவியர் தூண்டுதலால் மரியாயின் சேனை தொடங்கப்பட்டது. 1962ஆம் ஆண்டில் அருட்தந்தை லூர்துமணி முயற்சியால் புனித சூசையப்பர் தேர் செய்யப்பட்டது. அருட்தந்தை தேவசகாயம் பர்னாந்து (1969-72) காலத்தில், புனித சூசையப்பர் நற்பணி மன்றம் உருவாக்கப்பட்டது. அருட்தந்தை செங்கோல்மணி (1972-81) காலத்தில், தற்போதைய ஆலயம் கட்டப்பட்டு 1976ல் தூத்துக்குடி ஆயர் மேதகு அமலநாதர் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது. 1990ஆம் ஆண்டு அருட்தந்தை பன்னீர்செல்வம் முயற்சியால் வேளாங்கண்ணி அன்னை கெபி கட்டப்பட்டது. அதே ஆண்டில் புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள் பணகுடியில் ஆங்கிலப் பள்ளியைத் தொடங்கினர். அருட்தந்தை தேவசகாயம் (1994-99) காலத்தில், 1995ல் ஆலய கோபுரத்தின் உச்சியில் இயேசுவின் திருஇதய சொரூபம் நிறுவப்பட்டது; வளனார் கலையரங்கமும் கட்டப்பட்டது. 2001ல் அருட்தந்தை ஜான் போஸ்கோ காலத்தில் ஆலயத்தின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. 2001 டிசம்பர் 5 அன்று, அருட்தந்தை இசிதோர் பங்குத்தந்தையாக இருந்தபோது பணகுடி புனித சூசையப்பர் ஆலயம் திருத்தலமாக உயர்த்தப்பட்டது. பாலர் சபை, நற்கருணை வீரர் சபை, மாதா சபை, வளன் இளைஞர் சபை, மரியாயின் சேனை, திருக்குடும்ப சபை ஆகிய சபைகளும், 26 அன்பியங்களும் பங்கில் செயல்பட்டு வருகின்றன.
சிறப்பு நிகழ்வுகள்
தொகுபுத்தாண்டு கொண்டாட்டம்: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் நாள், திருத்தல வளாகத்தில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
வாரத்தின் புதன்கிழமைகள்: புனித சூசையப்பர் நாளான புதன்கிழமைகளில், புனித சூசையப்பர் நவநாள் செபங்களுடன் மாலை திருப்பலி சிறப்பிக்கப்படுகிறது. மாதத்தின் முதல் புதனன்று காலையிலும் சிறப்பு திருப்பலி கொண்டாடப்படுகிறது.
மார்ச் மாதம்: புனித சூசையப்பர் வணக்க மாதமான மார்ச் மாதம் முழுவதும் சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஊர் அசனம்: ஒவ்வொரு ஆண்டும் புனித வார புதன்கிழமை மாலையில் ஊர் அசன விழா கொண்டாடப்பட்டு, பங்குபெறும் மக்கள் அனைவருக்கும் அசன விருந்து வழங்கப்படுகிறது.
திருத்தலத் திருவிழா: ஆண்டுதோறும் ஏப்ரல் 22ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் புனித சூசையப்பர் திருவிழா, பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு தொழிலாளர் தினமான மே 1ந்தேதி முடிவடைகிறது. எட்டாம் திருவிழா அன்று நற்கருணை பவனியும், ஒன்பதாம் பத்தாம் திருவிழாக்களில் தேர் பவனியும் சிறப்பான விதத்தில் நடைபெறுகிறது. தவக்காலம் குறுக்கிடும் ஆண்டுகளில் திருவிழா ஓரிரு நாட்கள் தாமதமாகத் தொடங்கும்.
ஆதாரங்கள்
தொகு- ↑ திருத்தல அமைவிடம்
- ↑ "திருத்தலம் பற்றி". Archived from the original on 2012-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-09-14.