புராகவ்ன் என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு நகரத்தின் பெயர். புராகவ்ன் மோரிகான் மாவட்டத்தில் உள்ள புராகான் தாலுகாவில் அமைந்துள்ளது. பிரம்மபுத்திராவின் தென்கரையில் புராகவ்ன் அமைந்துள்ளது.

சொற்பிறப்பியல்

தொகு

புராகான் என்ற பெயர் அசாமிய மொழி சொல்லான புர் (ভূৰ) என்பதிலிருந்து பெறப்பட்டது, இதன் பொருள் மரம், வாழை மரம், மூங்கில், ஆநணல் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட ஒரு தெப்பம் ஆகும். காவ்ன் என்ற சொல்லுக்கு கிராமம் என்று பொருள். கடந்த காலங்களில், இதன் பூர்வீக மக்கள் இந்த புர் என்ற மிதக்கும் தெப்பத்தைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினர். இதனால் பின்னர், இந்த இடம் புராகான் என அறியப்பட்டது.[1]

பல நூற்றாண்டுகளாக புராகவ்ன் மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் பிரம்மபுத்திரா ஆற்றுக்கு அருகில் உள்ள வளமான நிலத்தில் இந்த நகரம் அமைந்திருப்பதையும் இந்தப் பெயர் குறிக்கலாம்.

நிலவியல்

தொகு

புராகான் இந்திய மாநிலமான அசாமின் மோரிகான் மாவட்டம், லஹரிகாட் கோட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது மாவட்டத் தலைமையகமான மோரிகானுக்கு வடக்கே 21 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[2]

புராகான், மோரிகான் மற்றும் சோனிட்பூர் மாவட்ட எல்லையில் உள்ளது. சோனிட்பூர் மாவட்டத்தின் தெகியாஜூலி அதன் வடக்கே உள்ளது. புராகான், மற்றொரு மாவட்டமான நாகான் எல்லையிலும் உள்ளது.[3]

புராகவ்ன் பிரம்மபுத்ரா ஆற்றின் கரையில் பசுமையான காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. சுமார் 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 57 மீட்டர் உயரத்தில் உள்ளது.

வரலாறு

தொகு

லச்சித் போர்புகனின் நாட்களில், தர்ராங்கின் மற்றொரு இரு இளவரசர்களான ராம் சிங் மற்றும் பீம்சிங் ஆகியோர் சமவெளி நிலங்களைத் தேடி பிரம்மபுத்திராவைக் கடந்து சென்றனர். பீம் சிங் ஓரிடத்தில் நிலைத்தபின்னர் ராம் சிங் தனது வீட்டிற்கு திரும்பிச் சென்றுவிட்டார். பீம் சிங்கை உள்ளூர் மக்களுக்கு பிடிக்கவில்லை, எனவே அவர் பிரம்மபுத்திராவை விட்டு வெளியேறி மோரி பீல் அருகே குடியேறினார். இந்த இடம் மோரிகான் என்று அறியப்பட்டது.[4]

மயாங் இராச்சிய வம்சத்தில் குறிப்பிடப்பட்ட தரவுகளின்படி, இந்த இராச்சியத்தின் 23 வது மன்னரின் ஆட்சி காலத்தில் (கி.பி. 1779-88), ராம்ஜெய சிங் என்ற இளவரசர் தற்போதைய பூராகான் அருகே உள்ள பாபகதிக்கு வந்து கச்சாரி ராச்சியத்தை நிறுவினார்.[5]

பொருளாதாரம்

தொகு

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, புராகவ்ன் முதன்மையாக ஒரு விவசாய நகரமாகும். இப்பகுதியின் வளமான மண் மற்றும் சாதகமான காலநிலை நெல், சணல் மற்றும் தேயிலை போன்ற பயிர்களை பயிரிடுவதற்கு ஏற்றதாக அமைகிறது. இந்த நகரம் கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் உட்பட பல சிறிய அளவிலான தொழில்களுக்கு தாயகமாக உள்ளது.

உலகின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றான பிரம்மபுத்திரா நதி, புராகான் வழியாக பாய்கிறது, இது நகர மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. பொருட்கள் மற்றும் மக்கள் செல்வதற்கான முக்கியமான போக்குவரத்து பாதையாகவும் இந்த நதி உள்ளது.

கலாச்சாரம்

தொகு

புராகவ்ன் கலாச்சாரம் அசாமிய கலாச்சாரம் மற்றும் மரபுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

புராகவோனின் மிக முக்கியமான கலாச்சார நிகழ்வுகளில் ஒன்று பிஹு திருவிழா ஆகும், இது வருடத்திற்கு மூன்று முறை கொண்டாடப்படுகிறது - போஹாக் பிஹு, கடி பிஹு மற்றும் மாக் பிஹு. இந்த திருவிழாக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன மற்றும் பிஹு நடனம் போன்ற பாரம்பரிய நடனங்கள் இத்திருவிழாக்களில் நடைபெறுகின்றன.

புராகவ்ன் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர், முதன்மையான உள்ளூர் உணவுகள் அரிசி மற்றும் மீனைக் கொண்டுள்ளன. புராகவோனின் பிரபலமான சில உணவுகளில் மசோர் தேங்கா, ஒரு கசப்பான மீன் குழம்பு மற்றும் அரிசி மாவு மற்றும் தேங்காய் ஆகியவற்றால் செய்யப்பட்ட பாரம்பரிய அசாமிய இனிப்பு வகை பித்தா ஆகியவை அடங்கும்.

புராகவோனின் உள்ளூர் மொழி அசாமி. இந்தியும் ஆங்கிலமும் பரவலாக பேசப்படுகின்றன. இந்த நகரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன, அவை இப்பகுதியில் கல்வி மற்றும் கல்வியறிவை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.

குறிப்பு

தொகு
  1. http://www.xobdo.org/dic/ভূৰ
  2. https://morigaon.gov.in/portlets/district-at-a-glance
  3. https://dailyassamnews.com
  4. https://morigaon.gov.in/frontimpotentdata/district-profile
  5. "Brief History of Morigaon District, Past and Present". Vikaspedia. Dr Hatem Ali.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புராகான்&oldid=3861091" இலிருந்து மீள்விக்கப்பட்டது