புறமணம்

ஒரு இன மக்கள், தங்கள் இனம், சாதி, கலத்தைத் தவிர்த்து பிற இனத்தில் திருமணம் செய்தல்

புறமணம் என்பது ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழுவுக்குள்ளேயே மணம் செய்து கொள்ளாமல், வேறு குழுக்களைச் சேர்ந்தவர்களை மணம் செய்து கொள்ளும் முறை ஆகும். இம்முறையில், இரத்த உறவு கொண்டவர்களையும், ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களையும் மணம் செய்து கொள்வது தடை செய்யப்படலாம். ஒரே கால்வழி குடிவழி என்பவற்றைச் சேர்ந்தவர்கள் இரத்த உறவு கொண்டவர்கள் என்பதால் பல சமுதாயங்களில் இக் குழுக்களுக்கு உள்ளே திருமணங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. தமிழ் நாட்டில், குலம், கோத்திரம், வம்சம், கூட்டம் போன்ற பிரிவுகளும் இத்தகைய இரத்த உறவுக் குழுக்களே.

பழங்குடிச் சமுதாயங்களிலே காணப்படும் குலங்கள் (clan) பெரும்பாலும் புறமணக் குழுக்களாகவே உள்ளன. ஒரு குறிப்பிட்ட குலம் இரத்தவழி உறவினர்களுடைய குழுவாக அமைவதால், ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் குலத்துக்கு வெளியே வேறு குலங்களில் மணம் செய்து கொள்கிறார்கள். எனினும் குலங்களையே ஒரு அகமணக் குழுவாகக் கொண்ட சமுதாயங்களும் இருக்கவே செய்கின்றன.

தோற்றம் பற்றிய கோட்பாடுகள்

தொகு

புறமண முறையின் தோற்றம் பற்றிப் பல விதமான கோட்பாடுகள் உள்ளன. எட்வார்ட் வெஸ்டர்மார்க் (Edvard Westermarck) என்பவர், இரத்த உறவினருக்கிடையே மணங்களைத் தவிர்ப்பதன் தொடர்ச்சியாகவே புறமண முறை உருவானதாகக் கருதுகின்றார்.

ஜே. எஃப். மக்லென்னான் (J.F. McLennan)[1] என்பவர், புறமணத்தின் தோற்றத்துக்குத் குறிப்பிட்ட குழுக்களுக்குள் திருமணத்துக்கான பெண்கள் குறைவாக இருந்ததே காரணம் என்கிறார். இதனால் ஆண்கள் வேறு குழுக்களில் மணம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் அதுவே வழக்கமாக நிலைத்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

மண ஒப்பந்தக் கோட்பாட்டை (Alliance Theory) அறிமுகப்படுத்திய குளோட் லெவி-ஸ்ட்ராஸ் (Claude Levi-Strauss), சில குழுக்கள் தங்கள் உறுப்பினர்களைக் குழுவுக்கு வெளியே மண உறவு வைத்துக் கொள்ள ஊக்குவித்திருக்க வேண்டும் என்கிறார். சில குழுக்களின், பொருளாதார, பண்பாட்டுத் தேவைகளுக்கு மிகவும் அவசியமாக இருந்த இத் துறைகளிலான கொடுக்கல் வாங்கல்களை மேம்படுத்த இது வேண்டியிருந்தது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணைகள்

தொகு
  • பக்தவச்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2003 (திருத்திய பதிப்பு).

குறிப்புகள்

தொகு
  1. McLennan, JF (1888). "The Origin of Exogamy". The English Historical Review 3 (9): 94-104. https://archive.org/details/sim_english-historical-review_1888-01_3_9/page/94. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறமணம்&oldid=4176858" இலிருந்து மீள்விக்கப்பட்டது