அகமணம்
அகமணம் (Endogamy) என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, வகுப்பு அல்லது இனப்பிரிவுகளுக்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் முறையைக் குறிக்கிறது. சாதிப்பிரிவுகள் காணப்படும் இந்தியா போன்ற நாடுகளில் சாதி ஒரு அகமணக் குழுவாகத் தொழிற்படுகிறது. தமிழர்களைப் பொறுத்தவரையிலும் கூடப் பெரும்பாலும் சாதி அகமணக் குழுவாக உள்ளது. மேல் நாடுகளில், சாதிப்பிரிவுகள் இல்லாத சமுதாயங்களில், வர்க்கம் அல்லது வகுப்பு அகமணக் குழுவாக இருப்பதைக் காணலாம். இவ்வாறு அகமணமுறை சார்ந்திருந்த பல சமூகங்களில் தற்காலத்தில் இதன் செல்வாக்குக் குறைந்து வருகின்றபோதும், வேறு சில சமுதாயங்களில் இம்முறை இன்றும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதைக் காணலாம். பழங்குடிச் சமுதாயங்களில் ஒவ்வொரு குழுவும் ஒரு அகமணக் குழுவாக உள்ளன.[1][2][3]
அகமண முறை குழுவுக்குள், நெருக்கத்தையும் பிணைப்பையும் ஊக்குவிக்கின்றது. பண்டைக் காலத்திலிருந்தே புலம் பெயர்ந்து வாழும் சமுதாயங்களில் அகமண முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. இது குழுவுக்குள் ஒற்றுமையை ஊக்குவித்து, அக்குழுக்களுக்கு உரிய வளங்களின் மீதான கட்டுப்பாட்டையும் தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது. இது வேறு பெரும்பான்மைக் குழுக்கள் மத்தியில் வாழும் சிறுபான்மையினர் தங்கள் சொந்தப் பழக்கவழக்கங்களுடன் நீண்டகாலம் புதிய இடங்களில் தாக்குப் பிடிக்கக்கூடிய சூழ்நிலையை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கிறது எனலாம். இந்தியாவில் வாழும் பார்சிகள், வட ஈராக்கியப் பகுதிகளில் வாழும் இஸ்லாமியர் அல்லாத சமூகத்தினராகிய யாசிடிகள் என்போர் சிறுபான்மை அகமணக் குழுக்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
புவியியல் சார்பான அகமணக் குழுக்களும் காணப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்பவர்கள் தங்களுக்குள் மணம் புரிந்து கொள்ளும் முறை நிலப்பரப்புச் சார்ந்த அகமணம் (Territorial Endogamy) எனப்படும். இதைவிடச் சில ஊர்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஊருக்கு வெளியே மணம் செய்துகொள்வதில்லை இது ஊர் அகமணம் (Village Endogamy) எனப்படுகின்றது.
தங்களுக்குள் அகமண முறையைக் காலங்காலமாக பின்பற்றும் குழுவிடமும் மரபியல் பரவல் குறைந்துபோகும். மக்கள்தொகை மரபியல் ஆய்வில் இவை முறையே மக்கள்தொகை முட்டுப்பாடு (population bottleneck) மற்றும் ஸ்தாபக நிகழ்வு (founder event) கோட்பாடு என அழைகப்படுகிறது. இதே முறையைப் பின்பற்றினால் காலப்போக்கில் மரபியல் பரவல் மேலும் சுருங்கும். அகமண முறையின் காரணமாக மரபியல் பரவல் செழிக்க முடியாமல் தேங்கிய நிலைக்கு உள்ளாகும்போது ஒடுங்கு-மரபணுப் பிறழ்ச்சி வழி ஏற்படும் பரம்பரை நோய்கள் (recessive genetic diseases) கூடும். மரபியல் பரவல் ஒடுங்கினால் அது மரபியல் நோய்களுக்கு இட்டுச்செல்லும்.
மரபணு நோய்கள்
தொகுஇந்தியாவின் ஐதராபாதில் உள்ள சி.சி.எம்.பி-சி.எஸ்.ஐ.ஆர். (CCMB-CSIR) எனும் ஆய்வு நிறுவனத்தைச் சார்ந்த குமாரசாமி தங்கராஜும் ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியை சார்ந்த டேவிட் ரெய்ச்சு ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வில் ஜம்மு காஷ்மீரைச் சார்ந்த குஜ்ஜர் சமுதாயம், உத்தர பிரதேசத்தைச் சார்ந்த பனியா, தெலங்கானா பகுதியின் ரெட்டி சமூகம், தமிழகத்தில் பிராமணர்கள், கள்ளர்கள், அருந்ததியர்கள், புதுச்சேரியை சார்ந்த யாதவர்கள் முதலானோரிடையே ஸ்தாபக நிகழ்வின் தாக்கம் தூக்கலாக இருக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.
முப்பது லட்சம் மக்கள்தொகையைக் கொண்டிருந்தாலும் அகமண முறையின் காரணமாக வலுபெற்ற ஸ்தாபக நிகழ்வு தொடர்ச்சியாக தெலங்கானா வைசிய சமுதாயத்தில் ‘பிசிஎச்ஈ’ (BChE - butyrylcholinesterase) எனும் அரிய மரபணு நோய் மற்ற சமுதாயங்களைவிட கூடுதலாக உள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Worldwide search for asthma clue". BBC News. 9 December 2008 இம் மூலத்தில் இருந்து 23 November 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111123092415/http://news.bbc.co.uk/2/hi/health/7766656.stm.
- ↑ "Endogamy Part 1: Exploring Shared DNA | Legacy Tree Genealogists". 13 October 2016.
- ↑ "Syria's Ruling Alawite Sect". 14 June 2011.
- ↑ த. வி. வெங்கடேஸ்வரன் (27 செப்டம்பர் 2017). "மரபணு நோயைப் பெருக்கும்அகமணத் திருமணங்கள்: என்ன தீர்வு?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help)