புலமைத்துவ வரலாறு
புலமைத்துவ வரலாறு (Intellectual history) என்பது, எண்ணங்கள், சிந்தனையாளர்கள் பற்றிய வரலாறு ஆகும். எண்ணங்களை உருவாக்கி அவற்றைப்பற்றிக் கலந்துரையாடி, எழுதி, அல்லது வேறு விதங்களின் அவற்றோடு தொடர்புள்ள மக்களின் அறிவை விலக்கிவிட்டு இவ்வரலாற்றைக் கருத்தில் எடுக்க முடியாது. வரலாற்றாளர்களால் பயிலப்படும் புலமைத்துவ வரலாறு மெய்யியலாளர் பயிலும் மெய்யியல் வரலாற்றுக்கு இணையானது என்பதுடன், எண்ணங்களின் வரலாற்றுக்கு நெருக்கமானது. இதன் மையப்பொருள் என்னவெனில், எண்ணங்கள், அதை உருவாக்குபவர்களும், பயன்படுத்துபவர்களுமான மக்களிடம் இருந்து விலகித் தனியாக வளர்ச்சியடைவதில்லை என்பதுடன், எண்ணங்களைத் தனியாக அல்லாது, அவற்றை உருவாக்கும் பண்பாடு, வாழ்க்கை, வரலாறு ஆகியவற்றின் சூழலிலேயே ஆய்வு செய்யவேண்டும் என்பதுமாகும்.[1]
புலமைத்துவ வரலாறு, கடந்தகால எண்ணங்களை அவற்றில் சூழலில் வைத்து ஆராய்வதன் மூலம் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இங்கே "சூழல்" என்பது அரசியல், பண்பாட்டு, புலமைத்துவ, சமூகச் சூழல்களைக் குறிக்கலாம். ஒருவர் ஒரு உரையைக் காலவரிடைச் சூழலிலோ அல்லது சமகாலப் புலமைத்துவ நேரச் சூழலிலோ வாசிக்க முடியும். இவ்விரு வகையான சூழ்நிலையாக்கமும் புலமைத்துவ வரலாற்றாளர்களால் கைக்கொள்ளப்படுவதே. அதேவேளை ஒன்றிலிருந்து மற்றது வேறாக நிற்பனவும் அல்ல. பொதுவாக, புலமைத்துவ வரலாற்றாளர்கள் கடந்த காலத்தின் கருத்துருக்களையும், உரைகளையும் பலதரப்பட்ட சூழல்களில் வைத்துப் பார்க்க முயல்கிறார்கள்.
புலமைத்துவ வரலாறு என்பது புலமையாளர்களின் வரலாறு அல்ல. இது எழுத்துக்களில் வெளிப்படுத்தப்படும் எண்ணங்களை ஆய்வு செய்வதால், காட்சிச் சான்றுகளையும் சொற்களல்லாத சான்றுகளையும் பயன்படுத்துகின்ற பிற பண்பாட்டு வரலாறுகளில் இருந்து வேறுபடுகின்றது. கடந்த காலத்துக்குரிய எந்தவொரு எழுத்துமூலமான தடயமும் புலமைத்துவ வரலாற்றுக்கான பொருளாக இருக்கலாம். "புலமையாளன்" என்னும் கருத்துரு மிகவும் அண்மைக் காலத்தைச் சேர்ந்தது. இது சிந்தனையோடு தொழில்முறையில் தொடர்புடைய ஒருவரைக் குறிக்கிறது. ஆனால், தனது சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்காக எழுதும் எவரும் புலமைத்துவ வரலாற்றுக்கான கருப்பொருளாக இருக்கமுடியும். ஒழுங்குமுறை சாராத ஒரு சிந்தனையாளர் தொடர்பான புலமைத்துவ வரலாற்றுக்கு, கார்லோ கின்சுபர்க் என்பவரின் ஆக்கமான "வெண்ணெய்க்கட்டியும் புழுக்களும்" (The Cheese and the Worms) என்னும் நூலில் உள்ள, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலிய ஆலை உரிமையாளர் மெனோக்கியோ பற்றிய புகழ்பெற்ற ஆய்வை சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.