மெனோக்கியோ
மெனோக்கியோ (Menocchio) என அழைக்கப்படும் டொமெனிக்கோ இசுக்கன்டெல்லா (Domenico Scandella) (1532 - 1599) 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஆலை உரிமையாளர். மரபுக்கு எதிரான இவரது சமயக் கருத்துக்களுக்காக இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மத மறுப்புக் குற்றத்துக்காக 1599 இல் எரித்துக் கொல்லப்பட்டார். இவரது வாழ்க்கை, நம்பிக்கைகள் என்பன பற்றிய தகவல்கள் விசாரணைப் பதிவுகளில் இருந்து கிடைக்கின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டே கார்லோ கின்சுபர்க் "வெண்ணெய்க்கட்டியும் புழுக்களும்" (The Cheese and the Worms) என்னும் நூலை எழுதினார்.[1][2][3][4]
வரலாறு
தொகுஇவரது பெற்றோர் சுவானே, மெனேகா என்போராவர். சண்டையிட்டதற்காக நகரை விட்டுக் கடத்தப்பட்டிருந்த இரண்டு ஆண்டுகள் தவிர இவர் இத்தாலியில் உள்ள மொன்டரியாலே என்னும் நகரிலேயே வாழ்ந்துவந்தார். இவர் வாசிக்கக் கற்றுக்கொண்டு, மதம், வரலாறு என்பன தொடர்பான சமகால நூல்கள் பலவற்றை வாசித்தார். இவற்றில் இருந்து, தனது மதம் சார்ந்த கருத்துக்களை வளர்த்துக்கொண்டார். இவரது கருத்துக்கள் அக்காலத்துக் கத்தோலிக்கப் பழமையியத்தில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு விலகி இருந்தன.
இவர் மத மறுப்புக் குற்றச்சாட்டின் பேரில் 1583ல் முதல் தடவையாக விசாரிக்கப்பட்டார். 1584 இல் தனது கூற்றுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். ஆனாலும், 20 மாதங்கள் சிறையில் இருந்தார். 1586 இல் விடுவிக்கப்பட்ட அவர் திருந்திவிட்டதாகச் சொல்லப்பட்டது. இவர் தொடர்ந்தும் வீட்டுக் காவலில் இருந்ததுடன், இவரது குற்றத்துக்கு அடையாளமாக எரியும் சிலுவைச் சின்னத்தைத் தனது உடையில் அணிந்துகொள்ள வேண்டியும் இருந்தது. தொடர்ந்தும் இவர் தனது நம்பிக்கைகள் பற்றிப் பலரிடம் பேசியதால், 1598 இல் இவர் மீண்டும் கைதானார். இவர் மத மறுப்புக் கொள்கையை உருவாக்குபவர் என அறிவிக்கப்பட்டு 1599ல் எரித்துக் கொல்லப்பட்டார்.
விசாரணையில், ஒருவன் தனது அயலவனுக்குக் கேடு விளைவிப்பதே குற்றம் என்றும், மதத்தைக் குறைத்துப் பேசுவது அப்படிப் பேசுபவரைத் தவிர வேறெவருக்கும் கேடு விளைவிக்காது எனவும் வாதித்தார். இயேசு மனிதனில் இருந்து பிறந்தவர் எனவும், மேரி கன்னி அல்ல எனவும், பாப்பாண்டவருக்கு இறைவன் எவ்வித அதிகாரத்தையும் கொடுக்கவில்லை, ஆனால், ஒரு நல்ல மனிதருக்கு முன்மாதிரியாக அவர் விளங்குகிறார் எனவும், இயேசு மனித மீட்புக்காக இறக்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Levine, D., & Vahed, Z. (2001). Ginzburg's Menocchio: Refutations and Conjectures. Histoire sociale/Social History, 34(68).
- ↑ Scandella, D., & Tedeschi, A. (1995). The Trials of Menocchio: The Complete Transcripts (1583-1599). A. Del Col (Ed.). Center for Medieval and Early Renaissance Studies, State University of New York at Binghamton.
- ↑ William Monter.THE CANONIZATION OF DOMENICO SCANDELLA, ALIAS MENOCCHIO Bibliothèque d'Humanisme et Renaissance T. 63, No. 3 (2001), pp. 621-623
- ↑ Zambelli, P. (1979). 'UNO, DUE, TRE, MILLE MENOCCHIO'-SPONTANEOUS GENERATION (OR THE PERSONAL COSMOGONY OF A 16TH-CENTURY MILLER). Archivio storico italiano, 137(499), 51-90.
- ↑ Ginzburg, Carlo (1980). The Cheese and the Worms: The Cosmos of a Sixteenth-Century Miller. Baltimore: The Johns Hopkins University Press. pp. 39, 27, 17, 12.