புலியூர் கிருஷ்ணசாமி துரைசாமி
புலியூர் கிருஷ்ணசுவாமி துரைசுவாமி (Puliyur Krishnaswamy Duraiswami) (1912-1974) என்பவர் இந்திய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ எழுத்தாளர் மற்றும் இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் சுகாதார சேவைகள் துறையின் தலைமை இயக்குநராகப் பணியாற்றியவர் ஆவார்.[1] இங்கிலாந்தின் அரச அறுவைச்சிகிச்சை கல்லூரியின் சாக மற்றும் தேசிய மருத்துவ அறிவியல் அகாதமியின் நிறுவனர் ஆவார்.[2] எலும்பியல் பற்றிய பல கட்டுரைகளை இவர் வெளியிட்டுள்ளார். ராபர்ட் ஜோன்ஸ் பதக்கம் மற்றும் பிரித்தானிய எலும்பியல் துறையின் குடியரசுத் தலைவர் தகுதி விருதைப் பெற்றவர் ஆவார்.[3] மருத்துவ அறிவியலுக்கான இவரது பங்களிப்பிற்காக, 1966ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு நாட்டின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூசண் விருதை வழங்கியது.[4]
புலியூர் கிருஷ்ணசாமி துரைசாமி Puliyur Krishnaswamy Duraiswami | |
---|---|
பிறப்பு | புலியூர் , இந்தியா | 23 ஏப்ரல் 1912
இறப்பு | 11 மார்ச்சு 1974 | (அகவை 61)
பணி | முடவியல் |
செயற்பாட்டுக் காலம் | 1942–1974 |
அறியப்படுவது | முடவியல் ஆராய்ச்சி மருத்துவக் கல்வி |
விருதுகள் | பத்ம பூசண் பிரித்தானிய முடவியல் ஆய்வாளர் சங்கம், இராபர்ட் ஜோன்சு பதக்கம் தலைவர் விருது |
வாழ்க்கை
தொகுதுரைசாமி 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் புலியூரில் பிறந்தார். இவர் 1936 மற்றும் 1942இல் சென்னை பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டங்களைப் பெற்றார்.[3] 1942ஆம் ஆண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராகத் தனது பணியைத் தொடங்கி ஓராண்டுக் காலம் பணிபுரிந்த பின், இரண்டாம் உலகப் போரின் பிற்பகுதியில் ஆயுதப்படையில் இணைந்து 1947 வரை அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார். 1948-ல், இவர் லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் கூட்டுறவு நிதியின் மூலம் இங்கிலாந்துக்குச் சென்றார்.[5] அங்கு இவர் பல்கலைக்கழகத்தின் அறுவை சிகிச்சைப் பிரிவின் துறையிலேயே தங்கினார்.[6] இவர் பொது அறுவை சிகிச்சைக்கான முதுநிலைப் பட்டம் பெற்றார். பின்னர், 1949-ல் அறுவை சிகிச்சை நிபுணராக இங்கிலாந்தின் அரச அறுவை சிகிச்சை நிறுவனத்தில் பெற்றார்.[7] தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்து, இவர் 1951-ல் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தினை முதன்முறையாக எலும்பியல் துறையில் பெற்றார்.[3] பின்னர், இவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் எலும்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். இவர் இங்கிலாந்தில் ஐந்து ஆண்டுகள் தங்கியதால், லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் ஹண்டேரியன் பேராசிரியர் பதவி மற்றும் பிரித்தானிய எலும்பியல் சங்கத்தின் இரண்டு பதக்கங்கள், ராபர்ட் ஜோன்ஸ் பதக்கம் மற்றும் தலைவரின் தகுதி விருது உட்படப் பல கௌரவங்களைப் பெற்றார்.
இந்தியாவில்
தொகுதுரைசாமி 1953-ல் இந்தியாவுக்குத் திரும்பி , தில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் எலும்பியல் அறுவை சிகிச்சைத் துறையின் தலைவராகச் சேர்ந்து, சப்தர்ஜங் மருத்துவமனையின் செயற்கைக்கோள் மையமாக, புது தில்லியில் உள்ள எலும்பியல் மருத்துவக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றினார்.[3] 1954-ல், இவர் இந்நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஆனால் 1960-ல் மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக மருத்துவமனையின் முக்கிய நடவடிக்கைகளைக் கவனிக்கும் பொறுப்பினை ஏற்றார். 1974-ல் இவர் இறக்கும் வரை இந்தப் பதவியை வகித்தார்.[8] எலும்பியல் மற்றும் மறுவாழ்வு தொடர்பான விடயங்களில் இந்திய அரசின் சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநராகவும் இவர் பதவி வகித்தார். இந்த நேரத்தில் இவர் கிராமப்புறங்களில் நடமாடும் மருத்துவ அலகுகள் என்ற கருத்தை முன்மொழிந்து செயல்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 1961-ல் தேசிய மருத்துவ அறிவியல் அகாதமி நிறுவப்பட்டபோது, இந்த அகாதமியினை நிறுவியவர்களில் ஒருவராக இருந்தார்.[2] எலும்பியல்[5][9] துறையில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இந்தியாவில் 5000 ஆண்டுக்கால எலும்பியல் எனும் வரலாற்றுக் கட்டுரையும் எழுதியுள்ளார்.[10]
பத்ம பூசண் விருது
தொகுதுரைசாமிக்கு 1966ஆம் ஆண்டு இந்திய அரசு நாட்டின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூசண் விருதை வழங்கியது.
இறப்பு
தொகுதுரைசாமி, 1974 மார்ச் 11 அன்று பெருமூளை ரத்தக்கசிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல்களால் இறந்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Report of the Regional Committee" (PDF). WHO. 2016. பார்க்கப்பட்ட நாள் 18 March 2016.
- ↑ 2.0 2.1 "NAMS Fellow". National Academy of Medical Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் 18 March 2016.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "Duraiswami, Puliyur Krishnaswami (1912 - 1974)". The Royal College of Surgeons of England. 2016. பார்க்கப்பட்ட நாள் 18 March 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
- ↑ 5.0 5.1 P. K. Durainswami (November 1952). "Experimental Causation of Congenital Skeletal Defects and its Significance in Orthopedic Surgery". The Journal of Bone and Joint Surgery 32B (4). http://www.bjj.boneandjoint.org.uk/content/jbjsbr/34-B/4/646.full.pdf.
- ↑ "Alumni Relations". University of Liverpool. 2016. பார்க்கப்பட்ட நாள் 18 March 2016.
- ↑ "Obituary" (PDF). National Academy of Medical Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் 18 March 2016.
- ↑ P. K. S. (1974). "In Memoriam Professor Puliyur Krishnaswami Duraiswami (1912-1974) And Dr. B. P. Bhatnagar (1917-1973)". Indian Journal of Orthopaedics 8 (2): 161–163. http://www.ijoonline.com/article.asp?issn=0019-5413;year=1974;volume=8;issue=2;spage=161;epage=163;aulast=P.K.S.;type=0.
- ↑ P. K. Duraiswami (September 1958). "Treatment of Tuberculosis of the Spine". Ind J.Tub. V (4): 133–135. http://lrsitbrd.nic.in/IJTB/Year%201958/September%201958.pdf. பார்த்த நாள்: 2023-09-30.
- ↑ "5000 years of orthopaedics in India". Clin Orthop Relat Res 75 (2): 69–80. March 1971. பப்மெட்:4929008.