பூரன் பகத் (Puran Bhagat) சியால்கோட் இளவரசரும் பஞ்சாபிய துறவியுமாவார். இன்று இவர் பாபா சகஜ் நாத் ஜி என வழிபடப்படுகின்றார்.

பின்னணி தொகு

பூரன் இராசா சால்பானின் முதல் மனைவி, அரசி இச்சிராவிற்குப் பிறந்தார்.[1] சோதிடர்களின் பரிந்துரைப்படி பூரன் தனது வாழ்நாளின் முதல் 12 ஆண்டுகளுக்கு அரசரிடமிருந்து பிரிக்கப்பட்டார். அரசர் தனது மகனின் முகத்தைக் காணக்கூடாது என ஆருடம் கூறியிருந்தனர். பூரனை வெளியே அனுப்பிய பிறகு அரசர் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த மற்றொரு இளம் பெண், லூனாவை, திருமணம் புரிந்தார். 12 ஆண்டுகள் தனிமையில் இருந்த பிறகு பூரன் அரண்மனைக்குத் திரும்பினார். அங்கு அழகான இளவரசர் பூரன் மீது இளவயதுள்ள லூனா காதல்வயப்பட்டாள். லூனாவின் மாற்றாள் புதல்வனாகையால் பூரனை அவளை ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்த லூனா பூரன் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக பொய்க்குற்றம் சாட்டினாள்.

பூரனின் கை கால்களை வெட்டிக் கொல்லுமாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.[2] அதன்படியே படைவீரர்கள் பூரனின் கைகளையும் கால்களையும் வெட்டிக் காட்டில் வீசினர். பிறிதொருநாள் குரு கோரக்நாத் தனது பற்றாளர்களுடன் அந்த வழியே சென்றுகொண்டிருந்தபோது கிணற்றிலிருந்து குரலைக் கேட்டனர். சுடப்படாத களிமண் பானையையும் ஒற்றைக் கயிற்றையும் கொண்டு அவர் பூரனை வெளிக்கொணர்ந்தார். பின்னர் தனது சீடனாக ஏற்றுக் கொண்டார். நாளடைவில் பூரனும் யோகியாக மாறினார்.

வழிபாடு தொகு

சாண்டியல் எனப்படும் இந்து சாதியினருக்கு முதன்மை கடவுளாக பூரன் கருதப்படுகின்றார்; அவரை பாபா சகஜ் நாத் ஜி என அழைக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குரு பூர்ணிமா அன்று சாண்டியல் இனத்தவர் கூடி பூரன் பகத்தை வழிபடுகின்றனர். பாபா சகஜ் நாத் ஜி கோயில் பாக்கித்தானில் உள்ளது. ஆனால் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு சாண்டியல்கள் சம்முவின் ஈராநகரை அடுத்த சண்டியில் அவருக்கு கோயில் எழுப்பி உள்ளனர். மற்றொரு கோயில் தின்னாநகரை அடுத்த தாராகரிலும் மூன்றாவது கோயில் டோரங்கலாவிலும் உள்ளன.

பாக்கித்தானிலிருந்து குடிபெயர்ந்துள்ள சாண்டியல் குடும்பங்கள் அங்கிருந்த கோயிலின் மண்ணைக் கொண்டுவந்து தாரகரில் உள்ளக் கோயிலைக் கட்டியுள்ளனர். குரு பூர்ணிமா அன்று இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் அவரது தரிசனம் காண மக்கள் திரள்கின்றனர்.

மேற்சான்றுகள் தொகு

  1. Ram, Laddhu. Kissa Puran Bhagat. Lahore: Munshi Chiragdeen. http://www.panjabdigilib.org/webuser/searches/displayPage.jsp?ID=1721&page=1&CategoryID=1. 
  2. Miraj, Muhammad Hassan (2012-10-08). "Pooran Bhagat". www.dawn.com. பார்க்கப்பட்ட நாள் 2016-01-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூரன்_பகத்&oldid=2090071" இலிருந்து மீள்விக்கப்பட்டது