பெட்ரோமாக்ஸ்
பெட்ரோமாக்ஸ் (Petromax, அமெ.: kerosene lamp) என்பது வளிம வலைத்திரி (மாண்டில்) மற்றும் மண்ணெண்ணெய் துணையுடன் எரியக் கூடிய ஒரு அழுத்த புகை போக்கி விளக்கு ஆகும். இது பெட்ரோமாக்ஸ் நிறுவனத்தின் ஒரு தயாரிப்பு ஆகும்.
வரலாறு
தொகுசெருமனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த ஏகுரிச் & கிரெத்சு என்ற நிறுவனத்தின் தலைவர் மாக்சு கிரெட்சு (1851–1937) என்பவர் இவ்விளக்கை முதன் முதலில் வடிவமைத்தார். பெட்ரோலியம் என்ற எரிபொருளின் பெயரும் மாக்சு என்ற கிரெத்சின் முதற் பெயரும் சேர்க்கப்பட்டு பெட்ரோமாக்சு என இவ்விளக்குக்குப் பெயரிடப்பட்டது.
அக்காலத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்த பரபீனை எரிபொருளாகக் கொண்டு ஒரு விளக்கை உருவாகக் அவர் முயன்றார். பரபீனில் இருந்து வளிமம் ஒன்றை அவர் உருவாக்கினார். இவ்வளிமம் மிக உயர்ந்த கலோரி அளவைக் கொண்டிருந்தது. அத்துடன் மிகச் சூடான நீலத் தீச்சுடரையும் தந்தது. கிரெட்சு ஆவியாக்கிய பரபீனைக் கொண்டு அழுத்த விளக்கு ஒன்றைத் தயாரித்தார். இவ்விளக்கு முதலில் மீத்தைலேற்றப்பட்ட மதுசாரத்தைக் கொண்டு சூடாக்கப்பட்டது. மூடிய கலன் ஒன்றில் பரபீன் கைப்பம்பி ஒன்றின் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது. வளிம வலைத்திரியில் இருந்து பெறப்பட்ட வெப்பம் மூலம் பரபீன் ஆவியாக்கப்பட்டது. இது பின்னர் காற்றுடன் சேர்ந்து வலைத்திரியை எரிக்கப் பயன்பட்டது. 1916 ஆம் ஆண்டளவில் இவ்விளக்கும் இத பெயரும் உலகெங்கும் பரவியது.
இன்றும் இவ்விளக்கு பயன்பாட்டில் உள்ளது. இதன் வடிவமைப்பு பின்னர் சமையல் அடுப்புகள் போன்றவை தயாரிக்கப் பயன்பட்டது. பெட்ரோமாக்சின் வடிவமைப்பு இன்று பல நாடுகளில் உள்ளூர் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் "டவர்", இந்தியாவில் பிரபாத் போன்றவை இவற்றுள் சிலவாகும்.