பெண்ணிய மெய்யியல்
பெண்ணிய மெய்யியல் (Feminist philosophy) என்பது பெண்ணியப் பார்வையில் மெய்யியலை அணுகுவதைக் குறிக்கிறது. இது மெய்யியல் முறைகள் மூலமாக பெண்ணியக் கருத்துக்களுக்கு வலுவூட்டுவதையும் மரபுவழி மெய்யியல் கருத்துக்களை பெண்ணியக் கோணத்திலிருந்து மீள்மதிப்பீடு அல்லது விமரிசிப்பதை அடக்கியுள்ளது.[1]
பெண்ணிய மெய்யியல் குறித்த ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லை. பெண்ணிய மெய்யியலாளர்கள், மெய்யியலாளர்களாக ஆய்வுவழி மெய்யியல் அல்லது ஐரோப்பிய மெய்யியலை பின்பற்றுவதும், அவற்றுள் பல்வேறு வேறுபாடான கருதுகோள்களைக் காண்போராகவும், பெண்ணியவாதிகளாக பல்வேறு வேறுபாடான பெண்ணிய அணுகுமுறைகளைக் கொண்டோராகவும் உள்ளனர்.[1]
மெய்யியலின் பல வழமையானச் சிக்கல்களுக்கு பெண்ணியம் புதிய அணுகுமுறையை ஈந்துள்ளது. காட்டாக, நாம் எவ்வாறு அறிகிறோம் என்பதைக் குறித்த கருதுகோள்களும் பகுத்தறிவு குறித்த கருத்துக்களும் ஆண்களின் கற்பிதங்களின் அடிப்படையில் பெறப்பட்டவை என்றும் பெண்களின் குரல் ஒதுக்கப்பட்டன என்றும் பெண்ணிய அறிகை மெய்யியலாளர்கள் கருதுகின்றனர். சிலர்[2] மரபுவழி மெய்யியலின் பிடிவாதமான விவாதப்பாணியை ஆண்களைக் குவியப்படுத்திய, குடும்பத்தலைவரை மையப்படுத்திய அணுகுமுறையாக விமரிசிக்கின்றனர். இத்தகைய விமரிசனத்தை பெண்ணிய மெய்யியலாளர்கள் சிலர் ஏற்பதில்லை; தாக்குகின்ற விவாதப்பாணி பெண்களின் குணத்திற்கும் ஏற்றவையே என்பது இவர்களது கூற்றாகும்.