பெத்தானியா
பெத்தானியா (Bethany) என்பது புதிய ஏற்பாட்டில் மரியா, மார்த்தா, இலாசர் ஆகியோரின் வீடும், "தொழுநோயாளர் சீமோன்" என்பவரின் வீடும் இருந்த நகரமாகக் குறிப்பிடப்படும் இடம் ஆகும்[1].
இயேசுவின் காலத்தில் பேச்சு மொழியாக வழங்கிய அரமேய மொழியில் இது בית עניא, (Beth anya = பெத் ஆனியா) என்று வரும். இதற்கு "துன்பத்தின் வீடு" என்பது பொருள். இயேசு எருசலேம் நகருக்குள் அரசர் போல நுழைந்த பிறகு இந்த ஊரில் தங்கியிருந்தார் என்றும், தமது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு இவ்வூரிலிருந்து விண்ணகம் சென்றார் என்றும் புதிய ஏற்பாட்டுக் குறிப்புகள் உள்ளன.
பெத்தானியா எங்கு உள்ளது?
தொகுபாலஸ்தீன நாட்டில், மேற்குக் கரை என்னும் பகுதியில் உள்ள "அல்-எய்சரியா" (Al-Eizariya அல்லது al-Izzariya [அரபி: العيزريه]) என்னும் இன்றைய ஊரே முற்காலத்தில் பெத்தானியா என்று அழைக்கப்பட்ட இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது. "அல்-எய்சரியா" என்பதற்கு "இலாசரின் இடம்" என்பது பொருள். இந்த இடத்தில் இலாசரின் கல்லறை உள்ளதாக நம்பப்படுகிறது.
பெத்தானியா எருசலேமிலிருந்து கிழக்காக ஒன்றரை மைல் (2 கி.மீ) தொலையில், ஒலிவ மலையின் தென்கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது. அங்கு அடையாளம் காட்டப்படுகின்ற மிகப் பழைய வீடு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தியது. அதுவே விவிலியத்தில் புதிய ஏற்பாட்டில் வருகின்ற மரியா, மார்த்தா, இலாசர் என்போரின் வீடு என்று கூறப்படுகிறது. இங்கே பெருந்திரளான மக்கள் திருப்பயணிகளாகச் செல்கின்றனர்.
அல்-எய்சரியாவில் உள்ள கல்லறை இலாசர் அடக்கம் செய்யப்பட்ட இடமாக கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்தே கருதப்பட்டு வந்துள்ளது. யூத வரலாற்றாசிரியர் செசரியா நகர் எவுசேபியுஸ் (கி.பி. சுமார் 330) என்பவரும் "போர்தோ நகர் திருப்பயணி" (கி.பி. சுமார் 333) என்பவரும் இத்தகவலைத் தருகின்றனர்.
ஸானேக்கியா (1899) என்பவர், பண்டைய பெத்தானியா ஒலிவ மலையின் உயரப் பகுதியில் தென்கிழக்காகவும், பெத்பகே என்னும் இடத்திற்கு அருகில், அல்-எய்சரியாவிலிருந்து சிறிது தொலையில் அமைந்திருந்தது என்றும் கருத்துத் தெரிவித்தார்.
பெத்தானியா என்னும் பெயரின் பொருள்
தொகுபெத்தானியா என்பதன் பொருள் யாது என்பது குறித்து அறிஞரிடையே கருத்து வேறுபாடு உள்ளது. ஜோசப் பார்பர் லைட்ஃபுட் என்பவர் பெத்தானியா "அத்திப்பழ வீடு" என்று பொருள்படும் என்றார். இதற்கு "அனியாவின் வீடு" அல்லது "அனனியாவின் வீடு" என்று பொருள் என்பது இன்னொரு விளக்கம் (இது பெத்தேலுக்கு அருகில் இருந்ததாக நெகேமியா 11:32 குறிப்பிடுகிறது).
பொதுவாக ஏற்கப்பட்ட விளக்கம் இது: பெத்தானியா என்பது "துயர இல்லம்" அல்லது "துன்பத்தின் வீடு" எனப் பொருள்படும். கி.பி. நான்காம் நூற்றாண்டில் புனித ஜெரோம் என்பவர் இந்த விளக்கம் தந்தார். இதை "ஏழையர் வீடு" அல்லது "ஏழைகளுக்கு உதவும் வீடு" எனவும் பொருள்படுவதாகக் கருதலாம். இந்த விளக்கத்தின்படி, பெத்தானியாவில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஓர் இல்லம் இருந்திருக்கலாம். "ஏழை" என்னும் சொல் வறியவர்களை மட்டுமன்றி, நோயுற்றோர், எருசலேமுக்கு வந்த திருப்பயணிகள் போன்றோரையும் குறித்திருக்கலாம்.
பெத்தானியாவில் ஏழைகளுக்கும் நோயுற்றோருக்கும் அளிக்கப்பட்ட ஆதரவு
தொகுப்ரையன் கேப்பர் (Brian J. Capper) என்னும் அறிஞரும் பிறரும் பெத்தானியாவில் ஏழை எளியவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டதைக் கோடிட்டுக் காட்டுகின்றனர். இக்கருத்தின் அடிப்படை புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களிலேயே உள்ளது. மாற்கு நற்செய்தி, பெத்தானியாவில் சீமோன் என்னும் தொழுநோயாளர் இருந்ததைக் குறிப்பிடுகிறது (மாற்கு 14:3-10). இயேசு பெத்தானியாவில் இருந்தபோது, அவருடைய நண்பராகிய இலாசர் மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்ததாக அறியவந்தார் (காண்க: யோவான் 11:1-12:11).
கும்ரான் அருகே அமைந்த குகைகளிலிருந்து கண்டெடுக்கப்பட்ட "திருக்கோவில் சுருளேடு" என்னும் ஆதாரத்திலிருந்து பெறப்பட்ட தகவல்: நோயுற்றவர்களையும் தொழுநோயால் வாடியவர்களையும் கவனிப்பதற்காக எருசலேமின் கிழக்குப் பகுதியில் மூன்று இல்லங்கள் அமைய வேண்டும். தூய்மையற்ற எதுவும் எருசலேம் திருநகருக்கு மூவாயிரம் முழம் தூரம் வரை காணப்படல் ஆகாது என்று அந்த ஏட்டில் கூறப்படுகிறது. பெத்தானியா என்ற ஊர் எருசலேமிலிருந்து பதினைந்து ஸ்தாதியம் தொலைவில் இருந்ததாக யோவான் கூறுகிறார் (யோவான் 11:18). இது ஏறக்குறைய மூன்று கிலோமீட்டரைக் குறித்தது. எனவே, தூய்மையற்றவர்களாகக் கருதப்பட்ட தொழுநோயாளர்கள் போன்றோர் எருசலேமிலிருந்து சரியான தொலையில், பெத்தானியாவில் இருந்தார்கள் என்று தெரிகிறது. இது தவிர, நற்செய்தியில் வருகின்ற பெத்பகு (காண்க: மத்தேயு 21:1) எனனும் ஊர் ஒலிவ மலையின் உயர்பகுதியில் அமைந்ததால் அங்கிருந்து எருசலேம் கோவில் கண்ணுக்கு அழகாய்த் தோற்றமளித்தது. ஆனால் பெத்தானியா அம்மலையின் அடிவாரத்தில் இருந்ததால் அங்கிருந்து எருசலேம் கோவிலைப் பார்க்கவியலாது. இதுவும் தூய்மையற்றவர்களாகக் கருதப்பட்ட தொழுநோயாளர் போன்றோர் பெத்தானியாவில் இருந்திருக்கலாம் என்றும், அவர்கள் கோவிலின் பார்வைக்கு அப்பால் இருந்தனர் என்றும் கூறுவதற்கு அடிப்படையாக உள்ளது.
எனவே, கும்ரான் பகுதியில் குடியேறிய "எஸ்ஸேனியர்" என்னும் துறவியர் அல்லது அவர்களைப் போன்ற மரபுடைய யூத சமயத்தவர் பெத்தானியாவில் தொழுநோயாளர் உட்பட பிற நோயாளரையும் கவனிக்க மருத்துவ/நலவாழ்வு இல்லங்களை அமைத்திருப்பார்கள் என்று ஊகிக்கலாம். அக்காலத்தில் ஏரோது மன்னன் (கி.மு. 36 - கி.மு. 4) எஸ்ஸேனியருக்கு ஆதரவு அளித்ததையும் இவண் குறிப்பிடலாம்.
ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் ஆதரவான இல்லம் பெத்தானியாவில் இருந்த பின்னணியில் இயேசு, "ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கிறார்கள்" (மத்தேயு 26:11; மாற்கு 14:7) என்று கூறியிருப்பார் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
பெத்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட "எலும்புப் பாதுகாப்புப் பெட்டகங்களில்" காணப்படுகின்ற பெயர்களில் கலிலேயப் பெயர்கள் பல உள்ளன. இவர்கள் வடக்கிலிருந்த கலிலேயாவிலிருந்து வந்து எருசலேம் அருகே பெத்தானியாவில் தங்கியிருப்பார்கள். இதனால் கலிலேயர்களாகிய இயேசுவின் சீடர்களும் அங்குப் போய் தங்கியிருக்கலாம். நீண்ட பயணத்துக்குப் பின் எருசலேமில் நுழைவதற்கு முன் தங்கியிருக்க ஏழைமக்களுக்கு பெத்தானியாவில் வசதி செய்து கொடுக்கப்பட்டது எனலாம்.
இவ்வாறு பெத்தானியாவில் ஏழைமக்களுக்கும் நோயாளருக்கும் உதவிட இல்லங்கள் இருந்ததற்கான அடிப்படை உறுதியாகவே உள்ளது.
பெத்தானியா பற்றிய புதிய ஏற்பாட்டுக் குறிப்புகள்
தொகுபுதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களில் பெத்தானியாவோடு தொடர்புடைய ஐந்து நிகழ்ச்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் பெத்தானியா என்னும் பெயர் பதினொரு முறை வருகிறது.
- பெத்தானியாவில் வாழ்ந்த இலாசர் என்பவர் இறந்துபோக, இயேசு அவருக்கு மீண்டும் உயிர்கொடுத்த நிகழ்ச்சி: யோவான் 11:1-46
- இயேசு ஆடம்பரமாக எருசலேமுக்குள் நுழைந்தபோது அருகிலிருந்த பெத்தானியாவிலிருந்து அங்கு புறப்பட்டுச் சென்ற நிகழ்ச்சி: மாற்கு 11:1; லூக்கா 19:29
- அந்நிகழ்ச்சியை அடுத்துவந்த வாரத்தில் இயேசு பெத்தானியாவில் தங்கியிருந்த நிகழ்ச்சி: மத்தேயு 21:17; மாற்கு 11:11-12
- பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் என்பவரின் வீட்டில் இயேசு உணவருந்தியபோது மரியா இயேசுவை நறுமணத் தைலத்தால் பூசிய நிகழ்ச்சி: மத்தேயு 26:6-13; மாற்கு 14:3-9; யோவான் 12:1-8
- இயேசு பெத்தானியாவிலிருந்து விண்ணகம் சென்ற நிகழ்ச்சி: லூக்கா 24:50
மேற்கூறிய நிகழ்ச்சிகள் தவிர, இன்னொரு தடவை இயேசு மரியா, மார்த்தா ஆகியோரின் இல்லத்திற்குச் சென்றார் என்று லூக்கா 10:38-42 குறிப்பிடுகிறது. ஆனால் அங்கு "பெத்தானியா" என்னும் சொல் இல்லை.
யோவான் 11:1-46
தொகு“ | பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர்...மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார். இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார். பின்னர் தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்" என்று கூறினார்...இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கனவே நான்கு நாள் ஆகியிருந்தது. பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது...மார்த்தா இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன்.இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்" என்றார். இயேசு அவரிடம், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார். மார்த்தா அவரிடம், "இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான்.என்பது எனக்குத் தெரியும்" என்றார். இயேசு அவரிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?" என்று கேட்டார். மார்த்தா அவரிடம், "ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" என்றார்...இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" என்றார். மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள்.அழுவதையும் கண்ட இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, "அவனை எங்கே வைத்தீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "ஆண்டவரே, வந்து பாரும்" என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்...இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. "கல்லை அகற்றி விடுங்கள்" என்றார் இயேசு...இயேசு உரத்த குரலில், "இலாசரே, வெளியே வா" என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். | ” |
மாற்கு 11:1-2; லூக்கா 19:28-29
தொகு“ | இயேசு தம் சீடரோடு ஒலிவ மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, "உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்..." என்றார். | ” |
“ | இவற்றைச் சொன்ன பின்பு இயேசு அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர் நெருங்கி வந்த போது இரு சீடர்களை அனுப்பினார். | ” |
மத்தேயு 21:17; மாற்கு 11:11-12
தொகு“ | பின்பு இயேசு அவர்களை விட்டு அகன்று நகரத்திற்கு வெளியே உள்ள பெத்தானியாவுக்குச் சென்று அன்றிரவு அங்கே தங்கினார் (மத்தேயு 21:17). | ” |
“ | இயேசு எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். அவர் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஏற்கனவே மாலை வேளையாகி விட்டதால், பன்னிருவருடன் பெத்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று..." (மாற்கு 11:11-12). | ” |
மத்தேயு 26:6-13
தொகுஇயேசு பெத்தானியாவுக்குச் சென்றபோது தொழுநோயாளர் சீமோன் என்பவரின் வீட்டில் உணவு அருந்திய வேளையில் ஒரு பெண் அவரது காலடியை நறுமணத் தைலத்தால் பூசினார். இந்நிகழ்ச்சி மாற்கு 14:3-9 பகுதியிலும், யோவான் 12:1-8 பகுதியிலும் மேலதிகமாகக் காணப்படுகின்றது.
“ | இயேசு பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது விலையுயர்ந்த நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் அவரிடம் வந்து அதை அவர் தலையில் ஊற்றினார். இதைக் கண்ட சீடர்கள் கோபமடைந்து, "இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே" என்றார்கள். இதை அறிந்த இயேசு, "ஏன் இந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே. ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கிறார்கள். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப் போவதில்லை. இவர் இந்த நறுமணத்தைலத்தை எனது உடல்மீது ஊற்றி எனது அடக்கத்திற்கு ஆயத்தம் செய்தார். உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இப்பெண் செய்ததும் எடுத்துக்கூறப்படும்; இவரும் நினைவுகூரப்படுவார் என்று நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறினார் (மத்தேயு 26:6-13). | ” |
லூக்கா 24:50-53
தொகு“ | பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெருமகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள். | ” |
யோர்தானுக்கு அப்பாலுள்ள பெத்தானியா (யோவான் 1:28)
தொகுபெத்தானியா என்னும் பெயர் கொண்ட இன்னொரு ஊரும் யோவான் நற்செய்தியில் உள்ளது. அது யோர்தான் ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்திருந்தது என்று யோவான் 1:28இல் உள்ளது. இந்த ஊர் எங்குள்ளது என்று தெளிவாகத் தெரியவில்லை.
“ | பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் யோவானிடம், "நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரே அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?" என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், "நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை" என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார் (யோவான் 1:24-28). | ” |