பெரிய வியாழன்

பெரிய வியாழன் அல்லது புனித வியாழக்கிழமை (Holy Thursday - Maundy Thursday) என்பது கிறித்தவர்கள் இயேசு கிறித்துவின் இறுதி நாள்களை நினைவுகூர்ந்து உயிர்ப்பு ஞாயிறுக்கு முன் வரும் வியாழன் அன்று கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது பெரிய வாரம் அல்லது புனித வாரம் (Holy Week) என்று அழைக்கப்படுகின்ற நாள்களில் வருகின்ற வியாழக்கிழமை ஆகும்.[1] நற்செய்திகளில் கூறியுள்ளது போன்று, திருத்தூதர்களுடனான இயேசுவின் இறுதி இராவுணவு, மற்றும் கால்களைக் கழுவுதல் ஆகிய நிகழ்வுகளை கிறித்தவர்கள் இந்நாளில் நினைவுகூருகின்றனர்.[2] இவ்விரவு கடைசித் தடவையாக இயேசு தனது சீடர்களுடன் கழித்த நாளாகும். அவர் நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் அவர்களுக்குக் கூறினார். இது புனித வாரத்தின் ஐந்தாவது நாளாகும். இதற்கு முந்திய நாள் புனித புதன், இதற்கு அடுத்த நாள் புனித வெள்ளி ஆகும்.[3]

பெரிய வியாழன்
Simon ushakov last supper 1685.jpg
இயேசு இறுதி இரவுணவு அருந்துகிறார்; திருப்பட ஆக்குநர்: சைமன் உஷாக்கோவ்; ஆண்டு: 1685.
பிற பெயர்(கள்)புனித வியாழன்
கடைபிடிப்போர்கிறித்தவர்கள்
வகைகிறித்தவம் / பொது விடுமுறை
முக்கியத்துவம்பாதங்களைக் கழுவும் சடங்கு; நற்கருணை (திருவிருந்து)
அனுசரிப்புகள்மாலைச் சிறப்புத் திருப்பலி; நற்கருணை ஆராதனை
நாள்Easter − 3 days
2022 இல் நாள்ஏப்ரல் 14 (மேற்கு) ஏப்ரல் 21 (கிழக்கு)
2023 இல் நாள்ஏப்ரல் 6 (மேற்கு) ஏப்ரல் 13 (கிழக்கு)
2024 இல் நாள்மார்ச் 28 (மேற்கு) மே 2 (கிழக்கு)
தொடர்புடையனபுனித வாரம்

விழாக் கொண்டாட்டம்தொகு

பெரிய வியாழன் இயேசு தாம் துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்திய நாள் தம் சீடர்களோடு இரவுணவு அருந்திய நிகழ்ச்சியை நினைவுகூர்கிறது. இந்நிகழ்ச்சி மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தி நூல்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது.

இவ்விழா ஆண்டுதோறும் மார்ச் 19 இலிருந்து ஏப்ரல் 22 முடிய உள்ள ஏதாவது ஒரு வியாழனன்று கொண்டாடப்படும். இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை கொண்டாடுகின்ற ஞாயிறு எந்நாளில் நிர்ணயிக்கப்படுகிறதோ அதைச் சார்ந்து பெரிய வியாழனும் நிர்ணயிக்கப்படும். கத்தோலிக்க திருச்சபை உட்பட மேலைத் திருச்சபைகள் கிரகோரி நாட்காட்டியின் படியும், கீழைத் திருச்சபைகள் ஜூலியன் நாட்காட்டியின் படியும் இந்நாளை நிர்ணயிக்கின்றன. 2011ஆம் ஆண்டு எல்லாக் கிறித்தவ சபைகளும் இயேசுவின் உயிர்த்தெழுதலை ஏப்பிரல் 24ஆம் நாள் கொண்டாடியதால் பெரிய வியாழன் ஏப்பிரல் 21ஆம் நாள் கொண்டாடப்பட்டது.

2012ஆம் ஆண்டில் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா மேலைத் திருச்சபைகள் கணிப்புப்படி ஏப்பிரல் 8ஆம் நாள் ஞாயிறன்றும், கீழைத் திருச்சபைகளின் கணிப்புப்படி ஏப்பிரல் 15ஆம் நாளும் கொண்டாடப்படுகின்றது. அதற்கு ஏற்ப, பெரிய வியாழன் ஏப்பிரல் 5ஆம் நாள் அல்லது 12ஆம் நாள் வரும்.

2013ஆம் ஆண்டு மார்ச்சு 28ஆம் நாள் பெரிய வியாழன் கொண்டாட்டத்தின்போது, 2013 மார்ச்சு 13ஆம் நாள் புதிய திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற திருத்தந்தை பிரான்சிசு உரோமை நகரில் உள்ள "கசால் தெல் மார்மோ" சிறைச்சாலைக்குச் சென்று திருப்பலி நிறைவேற்றி, அங்கு அடைபட்டிருக்கின்ற பன்னிரு கைதிகளின் காலடிகளைக் கழுவுவார்.[4]

பெரிய வியாழன் கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் வருகின்ற "உயிர்த்தெழுதல் முப்பெரும் விழாவின்" (Easter Triduum) முதல் நாள் ஆகும். இரண்டாம் நாள் புனித வெள்ளி (Good Friday), மூன்றாம் நாள் புனித சனி (Holy Saturday) என்று அழைக்கப்படுகின்றன. இம்மூன்று நாள்களிலும் கிறித்தவர்கள் தங்கள் மறைசார்ந்த புனித நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றனர்.

கத்தோலிக்க விதிமுறைகள்தொகு

கத்தோலிக்க திருச்சபையின் மிகப் பழமையான வழக்கப்படி, இறைமக்கள் பங்குபெறாத திருப்பலிகள் எல்லாம் இன்று தடை செய்யப்படும்.[5] மாலை வேளையில், வசதியான நேரத்தில், இரவுணவுத் திருப்பலி கொண்டாடப்படும். அதில் குருக்கள், திருப்பணியாளர்கள் எல்லாரும் தத்தம் பணி புரிவார்கள். திருத்தைலத் திருப்பலி அல்லது மக்கள் நலனுக்காக வேறு திருப்பலி ஒப்புக்கொடுத்த குருக்கள் மீண்டும் மாலையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றலாம். இறைமக்களின் நலனைக் கருதி, கோயிலிலோ சிற்றாலயங்களிலோ, மாலையில் அல்லது மிகமிகத் தேவையானால் காலையில், மற்றொரு திருப்பலி ஒப்புக்கொடுக்க ஆயர் அனுமதி வழங்கலாம். மாலைத் திருப்பலியில் பங்கேற்க யாதொரு வழியும் அற்றவர்களுக்கு மட்டும் காலைத் திருப்பலிக்கு அனுமதி தரலாம்: இத்தகைய அனுமதி ஒருசிலரின் தனி வசதிக்காக அளிக்கக்கூடாது. மேலும், மாலையில் நடக்கும் முக்கியமான திருப்பலிக்கு இது ஊறுவிளைவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். திருப்பலியில் மட்டும் இறைமக்களுக்கு நற்கருணை வழங்கலாம்: நோயாளிகளுக்கு எந்த நேரத்திலும் திருவுணவு வழங்கலாம்.

விழா நிகழ்ச்சிகள்தொகு

பெரிய வியாழனன்று மூன்று முக்கிய நிகழ்வுகள் நினைவுகூரப்படுகின்றன:

 • இயேசு இறுதி இரவுணவு அருந்தி, நற்கருணையை ஏற்படுத்தல்
 • இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவுதல்
 • இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தல்

இயேசு இறுதி இரவுணவு அருந்தி, நற்கருணையை ஏற்படுத்தல்தொகு

இயேசு தம் வாழ்நாள்களில் பல முறை சாதாரண மக்களோடு, குறிப்பாக சமுதாயத்தால் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்ட மக்களோடு கூட அமர்ந்து உணவு உண்டார் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் உள்ளது. கூடியிருந்து உணவு அருந்துவது மக்களோடு தம்மை ஒன்றுபடுத்திக்கொள்வதின் அடையாளம் ஆகும். மேலும் அது ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள நட்புக்கும் அறிகுறி ஆகும். யூதர்கள் ஆண்டுதோறும் கொண்டாடிய "பாஸ்கா" விழாவின்போது ஒன்றாகக் கூடி வந்து விருந்து கொண்டாடி, தம்மை எகிப்து நாட்டு அடிமை நிலையிலிருந்து விடுவித்து, வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு இட்டுச்சென்ற கடவுளுக்கு நன்றி செலுத்துவது வழக்கம். இயேசுவும் பாஸ்கா விழாவைத் தம் சீடரோடு சேர்ந்து கொண்டாடினார்.

அப்போது இயேசு அப்பத்தை எடுத்து, இறைபுகழ் கூறி, அதைப் பிட்டுத் தம் சீடருக்குக் கொடுத்து, "இது எனது உடல்" என்று கூறினார். அதுபோலவே இரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, தம் சீடர்களுக்குக் கொடுத்து, "இது எனது உடன்படிக்கையின் இரத்தம்" என்றார். பின்னர் சீடர்கள் அந்த அப்பத்தை உண்டு, இரசத்தைப் பருகினர்.

இவ்வாறு, சீடர்கள் இயேசுவின் உடலை உண்டு, அவரது இரத்தத்தைப் பருகினர் என்பது மறைசார்ந்த ஓர் உண்மை ஆகும். இந்நிகழ்ச்சியின் வழியாக இயேசுவின் சீடர் தம் குருவும் ஆண்டவருமாகிய இயேசுவோடு நெருங்கிய பிணைப்புக் கொண்டுள்ளது வெளிப்படுகிறது. இயேசுவைக் கடவுளின் திருமகனாகக் கிறித்தவர்கள் ஏற்பதால், இயேசுவின் சாவையும் உயிர்த்தெழுதலையும் நினைவுகூர்கின்ற நிகழ்ச்சியாகிய நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது இந்த இறுதி இரா உணவை மீண்டும் மீண்டும் கொண்டாடுகிறார்கள்; இயேசுவோடு ஆன்மிக முறையில் ஒன்றுபடுகிறார்கள். அதே சமயம் இக்கொண்டாட்டத்தில் கலந்துகொள்வோர் தாம் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகள் என்பதையும் உணர்ந்தறிகிறார்கள்.

இயேசு தம் சீடர்களின் கால்களைக் கழுவுதல்தொகு

இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவிய நிகழ்ச்சியை யோவான் விவரிக்கிறார். இயேசு தம் சீடர்களின் மதிப்புக்கும் வணக்கத்துக்கும் உரியவராக இருந்த போதிலும், ஓர் அடிமையின் (வேலையாளின்) பணியாகிய காலடி கழுவும் செயலைச் செய்தார். இதன் மூலம் ஒருவர் ஒருவருக்குப் பணிசெய்கின்ற மனநிலையைத் தம் சீடர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று இயேசு செயல் முறையில் காட்டினார்.

பெரிய வியாழனன்று, கிறித்தவக் கோவில்களில் இந்நிகழ்ச்சி நடைபெறும். வழக்கமாக, வழிபாடு நிகழ்த்துகின்ற குரு அல்லது திருப்பணியாளர் தம் சமூகத்திலிருந்து பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களது காலடிகளில் நீரை ஊற்றிக் கழுவி, அவற்றைத் துவாலையால் துடைப்பார். சில கோவில்களில் மக்களே ஒருவர் ஒருவருக்குக் காலடிகளைக் கழுவுவர். சிலர் பிறரது கைகளைக் கழுவுவர்.

அடையாள முறையில் நிகழ்கின்ற இச்சடங்கின் பொருள், கிறித்துவில் நம்பிக்கை கொள்ளும் மக்கள் பிறரை அடக்கி ஆளவேண்டும் என்னும் பாணியில் செயல்படாமல் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பிறருக்குப் பணி செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும்.

2013, மார்ச்சு 13ஆம் நாள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிசு, 2013, மார்ச்சு 25 வியாழக்கிழமை மாலைத் திருப்பலியை ஒரு இளையோர் சிறைச்சாலையில் நிகழ்த்தினார். உரோமை நகரில் உள்ள அச்சிறைச்சாலை "கசால் தெல் மார்மோ" என்னும் பெயர் கொண்டது. அங்கு பெரும்பாலும் நாடோடி இனத்தைச் சார்ந்தவர்களும் வட ஆப்பிரிக்க பகுதிகளைச் சார்ந்தவர்களுமான இளையோர் 46 பேர் தாங்கள் செய்த குற்றங்களுக்குத் தண்டனையாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 12 பேர்களின் காலடிகளைத் திருத்தந்தை பிரான்சிசு கழுவித் துடைத்து முத்தமிட்டார். இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவிய நிகழ்ச்சியின் நினைவாக இச்சடங்கு கொண்டாடப்பட்டது. சீடர் ஒவ்வொருவரும் பணிசெய்யும் மனநிலை கொண்டிருக்க வேண்டும் என்பதை இச்சடங்கு உணர்த்துகிறது. இச்செய்தியைத் திருத்தந்தை பிரான்சிசு அச்சடங்கின்போது வழங்கினார்.[6]

இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தல்தொகு

பணிசெய்வதே கிறித்துவின் சீடருக்கு அடையாளமாக இருக்கவேண்டும் என்பது இன்னொரு விதத்தில் கிறித்தவ சபைகளால் கொண்டாடப்படுகிறது. அதாவது, இயேசுவின் திருவுடல், திரு இரத்தம் ஆகியவற்றைத் திருப்பலியின்போது கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, இயேசுவின் பெயரால் செயல்படுவதற்கு இயேசு திருத்தூதர்களையும் சீடர்களையும் தேர்ந்துகொண்டது போல, வரலாற்றில் தொடர்ந்து பணியாளர்களைத் தேர்ந்துகொள்கிறார் என்பது கிறித்தவ நம்பிக்கை. இத்தகைய பணியாளர்களே "குருக்கள்" (Priests, Ministers, Pastors) என்று வெவ்வேறு கிறித்தவ சபைகளில் அழைக்கப்படுகிறார்கள். கத்தோலிக்க சபையும் கீழைச் சபைகளும் இயேசு குருத்துவத்தைத் தாம் துன்புற்று இறப்பதற்கு முந்திய நாள் ஏற்படுத்தி, நற்கருணைக் கொண்டாட்டத்தை நிகழ்த்தும் பொறுப்பையும் மக்களுக்குக் கடவுளின் செய்தியை அறிவித்து, அவர்களுக்குப் பணிசெய்யும் பொறுப்பையும் குருக்களிடம் ஒப்படைத்தார் என்று நம்புகின்றன.

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஒவ்வொரு ஆண்டும் கத்தோலிக்க குருக்களுக்கு ஒரு சிறப்புச் செய்தி வழங்கும் பழக்கத்தைத் தொடங்கிவைத்தார். அவருக்குப் பின் பதவி ஏற்ற பதினாறாம் பெனடிக்டும் அவ்வழக்கத்தைத் தொடர்ந்தார்.

திருத்தந்தை பெனடிக்டின் பணித்துறப்பைத் தொடர்ந்து 2013, மார்ச்சு 13ஆம் நாள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிசு 2013, மார்ச்சு 25, பெரிய வியாழன்று காலையில் புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்த்திய "எண்ணெய் அர்ச்சிப்புத் திருப்பலியில்" (Chrism Mass) அவரோடு பங்கேற்ற 1600க்கும் அதிகமான குருக்களுக்குக் கீழ்வரும் செய்தியை வழங்கினார்:

2014இல் திருத்தந்தை பிரான்சிசு நிகழ்த்திய பாதம் கழுவும் சடங்குதொகு

இயேசு கிறித்து, இராவுணவு உண்ட வேளையில் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவி, அவர்கள் ஒருவர் ஒருவருக்குப் பணியாளர்களாக இருக்க வேண்டும் என்றொரு பாடம் புகட்டினார். அதை ஆண்டுதோறும் நினைவுகூர்கின்ற சடங்கு கொண்டாடப்படுகிறது.

வத்திக்கான் நகரில் திருத்தந்தை பிரான்சிசு காலடிகளைக் கழுவுகின்ற சடங்கினை 2014, மார்ச்சு 17ஆம் நாள், பெரிய வியாழனன்று நிகழ்த்தினார். அப்போது, 2013ஆம் ஆண்டில் நடந்ததுபோலவே, திருத்தந்தை பிரான்சிசு சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு வாழ்கின்ற மக்களைத் தேடிச்சென்று அவர்களுடைய காலடிகளைக் கழுவி, ஒருவர் ஒருவருக்குப் பணிசெய்ய வேண்டிய தேவையைச் செயல்முறையில் காட்டினார்.

உரோமை நகரில் அமைந்துள்ள டோன் ஞோக்கி மையம் (Don Gnocchi Center) என்ற நிறுவனத்துக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிசு அங்குள்ள முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர் பன்னிருவரின் முன் சென்று முழந்தாளிட்டு, அவர்களின் காலடிகளைக் கழுவி, துணியால் உலர்த்தி, முத்தமிட்டார். அவர்களுள் சிலர் சக்கர இருக்கைகளில் இருந்தனர். சிலருடைய கால்கள் பெருமளவு வீக்கமுற நிலையில் இருந்தன. அவர்களுள் ஆண்களும் பெண்களும் இருந்தனர். ஒருவர் லிபிய நாட்டு முசுலிம் பெண்மணி.

"இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவியதன் வழியாக நமக்கு ஒரு செய்தியைத் தருகின்றார். நாமும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட, மறக்கப்பட்ட மக்களுக்குப் பணிசெய்கின்ற மனிதர்களாக இருக்கவேண்டும்" என்று திருத்தந்தை பிரான்சிசு கூறினார்.[8]

திருத்தந்தை காலடிகளைக் கழுவிய நபர்களுள் சிலர்:

 • கேப் வர்டி நாட்டைச் சார்ந்த 16 வயது இளைஞர். சென்ற ஆண்டு வாகன விபத்தில் இவருக்கு கால் அசைவு இல்லாமற்போயிற்று.
 • 19 வயது நிறைந்த ஒரு ஊனமுற்றவர்.
 • 39 வயதான, மூளை இயக்கம் சார்ந்த வாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்.
 • 86 வயதான, நடக்க இயலா முதியவர்.

"ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்" (யோவான் 13:14) என்று இயேசு கூறியதற்கு ஏற்ப, இச்சடங்கு வழியாக, ஒவ்வொருவரும் பிறருக்குப் பணிசெய்வதில் கருத்தாயிருக்க வேண்டும் என்னும் செய்தி வழங்கப்படுகிறது.

விவிலிய ஆதாரங்கள்தொகு

பெரிய வியாழன் கொண்டாட்டத்துக்கு அடிப்படையாக உள்ள நற்செய்திப் பகுதிகளும் பிற பகுதிகளும் இவை:

இவற்றுள் 1 கொரிந்தியர் 11:23-25 என்னும் பகுதி காலத்தால் முற்பட்டது (கி.பி. 57) என்பது அறிஞர் கருத்து.

1 கொரிந்தியர் 11
23-25
மத்தேயு 26
26-30
யோவான் 13
1-17; 34-35

மேலும் காண்கதொகு

குறிப்புகள்தொகு

 1. "General Norms for the Liturgical Year and the Calendar, 19". 2009-04-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-04-02 அன்று பார்க்கப்பட்டது.
 2. Gail Ramshaw (2004). Three Day Feast: Maundy Thursday, Good Friday, and Easter. Augsburg Books. https://books.google.com/books?id=Tbb9axN6qFwC&pg=PA33. பார்த்த நாள்: 11-04-2009. 
 3. Leonard Stuart (1909). New century reference library of the world's most important knowledge: complete, thorough, practical, Volume 3. Syndicate Pub. Co.. https://books.google.com/books?id=uZFRAAAAYAAJ&pg=PT125. பார்த்த நாள்: 11-04-2009. 
 4. சிறைக் கைதிகளின் காலடிகளைக் கழுவுதல் சடங்கு
 5. "General Instruction of the Roman Missal, with adaptations for England and Wales" (PDF). Catholic Bishops' Conference of England & Wales. 2009-04-11 அன்று பார்க்கப்பட்டது.
 6. திருத்தந்தை பிரான்சிசு கைதிகளின் காலடிகளைக் கழுவுதல்
 7. திருத்தந்தை பிரான்சிசு குருக்களுக்கு வழங்கிய செய்தி
 8. 2014 பெரிய வியாழனன்று திருத்தந்தை பிரான்சிசு ஊனமுற்றோர் காலடிகளைக் கழுவுகிறார்

வெளி இணைப்புதொகு

ஆதாரங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_வியாழன்&oldid=3564913" இருந்து மீள்விக்கப்பட்டது