திருப்பலி வழிபாட்டின் கட்டமைப்பு

திருப்பலி வழிபாட்டின் கட்டமைப்பு (Structure of the Roman Rite of Mass) என்பது கத்தோலிக்க திருச்சபையில் அருட்சாதனமாகக் கொண்டாடப்படுகின்ற திருப்பலியின் பாகங்கள் ஒவ்வொன்றும் தமக்குள்ளும் பிற பாகங்களோடும் இசைவுறப் பொருந்தி அமைவதைக் குறிக்கும்.[2]

கத்தோலிக்க திருச்சபை
திருப்பலி வழிபாட்டின் கட்டமைப்பு
(இலத்தீன் வழிபாட்டு முறை)

""

திருப்பலிப் புத்தகமும் திருக்கிண்ணமும்

அ. தொடக்கச் சடங்குகள்
வருகை
பலிபீட வணக்கமும் மக்களுக்கு வாழ்த்தும்
மன்னிப்பு வழிபாடு
ஆண்டவரே இரக்கமாயிரும்
உன்னதங்களிலே
சபை மன்றாட்டு
ஆ. அருள்வாக்கு வழிபாடு
அமைதி காத்தல்
திருநூல் வாசகங்கள்
வாசகங்களுக்கு இடையில் வரும் பாடல்கள்
மறையுரை
விசுவாச அறிக்கை
பொது மன்றாட்டு
இ. நற்கருணை வழிபாடு
காணிக்கைகளைத் தயார் செய்தல்
காணிக்கை மன்றாட்டு
நற்கருணை மன்றாட்டு
திருவிருந்துச் சடங்கு:
ஆண்டவரின் செபம்
சமாதானச் சடங்கு
அப்பத்தைப் பகிர்தல்
கலத்தல்
நற்கருணை உட்கொள்ளுதல்
நன்றி மன்றாட்டு
ஈ. முடிவுச் சடங்கு
ஆதாரம்: உரோமைத் திருப்பலிப் புத்தகத்தின் பொதுப் போதனை[1]

வலைவாசல்:கிறித்தவம்

கத்தோலிக்க திருச்சபையில் பெரும்பாலோர் பின்பற்றுகின்ற "இலத்தீன் வழிபாட்டுமுறை" (Latin Rite) கடைப்பிடிக்கின்ற திருப்பலி அமைப்பு பற்றிய விதிகள் "உரோமைத் திருப்பலிப் புத்தகத்தின் பொதுப் போதனை" என்னும் அதிகாரப்பூர்வ ஏட்டில் உள்ளன. அவற்றின் சுருக்கம் இக்கட்டுரையில் தரப்படுகின்றது.[3]

அ) தொடக்கச் சடங்குகள்

தொகு

கத்தோலிக்க திருச்சபையின் மையக் கொண்டாட்டமாக அமைகின்ற திருப்பலி இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை:

  • இறைவாக்கு வழிபாடு
  • நற்கருணை வழிபாடு

என்று அழைக்கப்படுகின்றன. இவ்விரு பகுதிகளும் ஒரே ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியை உருவாக்கும் அளவுக்கு ஒன்றோடொன்று நெருங்கி இணைந்துள்ளன.

ஒருசில சடங்குகள் திருப்பலிக் கொண்டாட்டத்துக்குத் தொடக்கமாகவும், முடிவாகவும் அமைந்துள்ளன.

இவ்வாறு, திருப்பலிக் கொண்டாட்டத்தின் முதல் பகுதியாகிய இறைவாக்கு வழிபாட்டுக்கு முன்வரும் தொடக்கச் சடங்குகளில் உள்ளவை:

  • வருகை
  • வாழ்த்துரை
  • மன்னிப்பு வழிபாடு
  • "ஆண்டவரே இரக்கமாயிரும்"
  • "உன்னதங்களிலே"
  • சபை மன்றாட்டு.

ஒன்றாய்க் கூடியிருக்கும் கிறித்தவ நம்பிக்கைகொண்டோருக்குள் உள்ளரங்க ஒன்றிப்பை உருவாக்கி, அவர்களை வழிபடும் ஒரே குடும்பமாக்கி, சீரிய முறையில் இறைவனின் வார்த்தைக்குச் செவிசாய்க்கவும், தக்க வண்ணம் நற்கருணை வழிபாட்டைக் கொண்டாடவும் அவர்களைத் தயாரிப்பதே இச்சடங்குகளின் நோக்கம் ஆகும்.

வருகை

தொகு

மக்கள் ஒன்றுகூடியபின் குரு பணியாளர்களோடு வரும்பொழுது, வருகைப் பாடல் தொடங்கப்படும். கொண்டாட்டத்தைத் தொடங்கவும், கூட்டத்தின் உள்ளரங்க ஒன்றிப்பை வளர்க்கவும், அவர்களுக்கு வழிபாட்டுக் காலத்து அல்லது நடைபெறும் விழாவின் மறையுண்மையை அறிமுகப்படுத்தவும், குருவும் பணியாளரும் வரும் பவனிக்குப் பின்னணியாக அமைவதும் இவ்வருகைப் பாடலின் நோக்கமாகும்.

பலிபீட வணக்கமும் மக்களுக்கு வாழ்த்தும்

தொகு

பலிபீட முற்றத்திற்கு வந்ததும், குருவும் பணியாளர்களும் பீடத்துக்கு வணக்கம் செலுத்துவார்கள். மேலும், இவ்வணக்கத்தைக் குறிப்பிட, குருவும் திருத்தொண்டரும் பீடத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்வர்; வசதியானால் குரு பீடத்திற்குத் தூபம் காட்டுவார்.

வருகைப் பாடல் முடிந்ததும், குருவும் திருக்கூட்டத்தினர் அனைவரும் தம்மீது சிலுவை வரைந்து கொள்வர். பின்பு திருக்கூட்டத்தினரிடம் இறைவன் பிரசன்னமாயிருப்பதைக் குரு வாழ்த்துரையால் வெளிப்படுத்துவார். இவ்வாறு குரு வாழ்த்துவதாலும் அதற்கு மக்கள் பதில் அளிப்பதாலும் கூடியுள்ள திருச்சபையின் மறைபொருள் விளங்குகிறது.

மன்னிப்பு வழிபாடு

தொகு
 
அசாதாரண இலத்தீன் வழிபாட்டுமுறை திருப்பலியில் மன்னிப்பு வழிபாட்டு

மக்களை வாழ்த்தியபின் குரு அல்லது வேறு தகுதியுடைய பணியாளர் அந்நாளின் திருப்பலியைப் பற்றி மக்களுக்கு மிகச் சுருக்கமாகத் தொடக்கவுரை ஆற்றலாம். அதன்பின், குரு மன்னிப்பு வழிபாட்டுக்கு அழைப்பு விடுப்பார்; திருக்கூட்டத்தினர் அனைவரும் சேர்ந்து பொதுப்பாவ அறிக்கையிடுவர்; குரு சொல்லும் பாவமன்னிப்பு செபத்தோடு இச்சடங்கு முடிவுறும்.

"ஆண்டவரே இரக்கமாயிரும்"

தொகு

மன்னிப்பு வழிபாட்டிலேயே இடம்பெற்றிருந்தாலன்றி, "ஆண்டவரே இரக்கமாயிரும்" (பண்டைக் கிரேக்கம்Kyrie eleison) என்னும் பாடம் இப்பொழுது தொடங்கும். இதில் கிறித்தவ மக்கள் ஆண்டவரைப் புகழ்ந்து, அவருடைய இரக்கத்தை இறைஞ்சுவார்கள். எனவே இப்பாடல் வழக்கமாக எல்லாராலும் பாடப்படும். அதாவது, மக்களும் பாடகர் குழுவுமாக அல்லது மக்களும் பாடகர் ஒருவருமாக இப்பாடலைப் பாடுவார்கள்.

ஆர்ப்பரிப்பு ஒவ்வொன்றும் வழக்கமாக இருமுறை எழுப்பப்பெறும்; எனினும் மொழி, இசை, சூழ்நிலை தன்மைக்கு ஏற்ப ஆர்ப்பரிப்பின் எண்ணிக்கையைக் கூட்டலாம் அல்லது ஆர்ப்பரிப்புக்கு முன் சிறு வசனத்தைச் சேர்த்துக்கொள்ளலாம். "ஆண்டவரே இரக்கமாயிரும்" பாடப்பெறாத பொழுது அது படிக்கப்படும்.

"உன்னதங்களிலே"

தொகு
 
போர்த்துகல் நாட்டு பாத்திமா நகர் அன்னை மரியா திருத்தலத்தில் நிகழும் திருப்பலிக் கொண்டாட்டம். ஆண்டு: சூலை 2008

இப்புகழ்ச்சிப் பாடல் மிகப் பழமையானது, வணக்கத்துக்குரியது. தூய ஆவியால் ஒன்றுகூட்டப்பட்ட திருச்சபை இப்பாடலில் தந்தை இறைவனையும், செம்மறியையும் மகிமைப்படுத்தி, இரந்து மன்றாடுகிறது. இறைமக்கள் இப்பாடலைப் பாடுவர் அல்லது பாடகர் குழுவோடு சேர்ந்து மக்கள் மாறி மாறிப் பாடுவர் அல்லது பாடகர் குழு மட்டும் பாடும். பாடப்பெறாதபொழுது இதை அனைவரும் ஒன்றாகவோ மாறி மாறியோ படிக்கலாம்.

திருவருகைக் காலம், தவக் காலம் ஆகியவைகளுக்குப் புறம்பே வரும் ஞாயிற்றுக் கிழமைகள், பெருவிழாக்கள், விழாக்களிலும், இன்னும் அந்தந்த இடத்துச் சிறப்புக் கொண்டாட்ட நாள்களிலும் "உன்னதங்களிலே" பாடப்படும் அல்லது படிக்கப்பெறும்.

சபை மன்றாட்டு

தொகு

அடுத்து, குரு மக்களைச் செபிக்க அழைக்கிறார். குருவோடு அனைவரும் சேர்ந்து சிறிது நேரம் மௌனமாயிருப்பர். அச்சமயம் இறைவன் திருமுன் தாங்கள் இருப்பதை உணர்ந்து தங்கள் தேவைகளை நினைத்து அவர்கள் செபிக்கலாம். பின் குரு சபை மன்றாட்டு எனப்படும் செபத்தைச் சொல்லுவார். இது நிகழும் கொண்டாட்டத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தும். இம்மன்றாட்டு குருவின் சொற்களால் தூய ஆவியில் கிறிஸ்து வழியாகத் தந்தை இறைவனை நோக்கி செபிக்கப்படும்.

மக்கள் இம்மன்றாட்டோடு தங்களை ஒன்றுபடுத்தி, அதற்கு உடன்பாடு தெரிவித்து, ஆமென் என்னும் ஆர்ப்பரிப்பால் அதைத் தங்கள் செபமாக்கிக் கொள்வார்கள். ஆமென் என்னும் எபிரேயச் சொல் "ஆம்", "அப்படியே ஆகுக" என்னும் பொருளைத் தரும்.

திருப்பலியில் ஒரே ஒரு சபை மன்றாட்டுத்தான் சொல்லப்படும்; இந்த விதி காணிக்கைமீது மன்றாட்டு, நன்றி மன்றாட்டு ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

சபை மன்றாட்டு நீண்ட முடிவுரை கொண்டிருக்கும். அதாவது,

என முடிவுறும்.

  • தந்தையிடம் சொல்லும் செபத்தின் முடிவில், திருமகனைக் குறிப்பிட்டிருந்தால்,

என முடிவுறும்.

என முடிவுறும்.

காணிக்கைமீது மன்றாட்டு, நன்றி மன்றாட்டு என்னும் இரு செபங்களும் சுருக்கமான முடிவுரை கொண்டிருக்கும்; அதாவது,

என முடிவுறும்.

என முடிவுறும்.

என முடிவுறும்.

ஆ) அருள்வாக்கு வழிபாடு

தொகு

அருள்வாக்கு வழிபாட்டின் சிறப்பான பகுதி திருநூலிலிருந்து தேர்ந்தெடுத்த வாசகங்களும், அவைகளுக்கு இடையில் வரும் திருப்பாடல்களுமாகும். மறையுரை, விசுவாச அறிக்கை, பொது மன்றாட்டு அல்லது விசுவாசிகள் மன்றாட்டு ஆகியவை இப்பகுதியை விளக்கி முடிவுக்குக் கொணர்கின்றன.

எவ்வாறெனில், மறையுரை விளக்கும் வாசகங்களினால் இறைவன் தம் மக்களோடு உரையாடி, அவர்களுக்கு மீட்பு-ஈடேற்றம் பற்றிய மறைபொருள் நிகழ்ச்சியை வெளிப்படுத்தி, ஆன்ம ஊட்டமளிக்கிறார். கிறிஸ்து தம் வாக்கினால் விசுவாசிகள் நடுவில் பிரசன்னமாயிருக்கிறார். அருள்வாக்கை மக்கள் பாடல்களால் தமதாக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு ஊட்டம் பெற்று, பொது மன்றாட்டுப் பகுதியில் திருச்சபை அனைத்தின் தேவைகளுக்காகவும், அனைத்துலகின் மீட்புக்காகவும் மக்கள் மன்றாடுவார்கள்.

திருநூல் வாசகங்கள்

தொகு

அருள்வாக்கு வழிபாட்டின்போது முழங்கப்படுகின்ற வாசகங்களினால் அருள்வாக்கு விருந்து மக்களுக்கு அளிக்கப்படுகிறது; திருநூலின் கருவூலமும் அவர்களுக்குத் திறக்கப்படுகிறது.

பாரம்பரியத்தின்படி வாசகங்களை வாசிக்கும் பணி திருக்கூட்டத்தில் தலைமை தாங்குவோருக்கன்று, பணியாளருக்கே உரியதாகும்; எனவே, வழக்கம்போலத் திருத்தொண்டர் அல்லது அவர் இல்லையெனில் மற்றொரு குரு நற்செய்தி வாசிப்பது முறையாகும். வாசகர் ஏனைய வாசகங்களை வாசிப்பர்.

திருத்தொண்டரோ வேறு குருவோ இல்லை என்றால் திருப்பலி நிறைவேற்றும் குருவே நற்செய்தியை வாசிப்பார்.

நற்செய்தி வாசகம் மிகுந்த வணக்கத்துடன் நடைபெறும். ஏனைய வாசகங்களைவிட நற்செய்தி வாசகத்துக்குத் தனிவணக்கம் செலுத்தப்படும். நற்செய்தியை அறிக்கையிட தனி அதிகாரம் பெற்ற பணியாளர் தேவை. தம் பணியை ஆற்றுமுன், அவர் ஆசி பெற்று அல்லது இறைவேண்டல் செய்து தம்மைத் தயாரித்துக் கொள்வார். கிறித்தவத் திருக்குழுவினரோ, நற்செய்தியில் கிறிஸ்து பிரசன்னமாயிருந்து தங்களோடு பேசுவதைக் கண்டுணர்ந்து அதைத் தங்கள் ஆர்ப்பரிப்புகளால் வெளிப்படுத்துவார்கள். நற்செய்தியை அவர்கள் நின்றுகொண்டு கவனமாய்க் கேட்பார்கள். மேலும் நற்செய்திப் புத்தகத்துக்கு வணக்கம் செலுத்த நடக்கும் சடங்கு முறைகளாலும் இது விளங்கும்.

வாசகங்களுக்கு இடையில் வரும் பாடல்கள்

தொகு

முதல் வாசகத்தைத் தொடர்ந்து வருவது பதில் உரைச் சங்கீதம் அல்லது படிக்கீதம். இது அருள்வாக்கு வழிபாட்டின் முழுமைக்குரிய பகுதியாகும். வழக்கமாக வாசக நூலிலிருந்து சங்கீதம் எடுக்கப்பெறும். வாசக நூலில் அடங்கியுள்ள ஒவ்வொரு வாசகத்தோடும் ஒரு சங்கீதம் நேரடியாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. எனவே, சங்கீதத்தைத் தேர்ந்தெடுப்பது வாசகத்தைப் பொறுத்திருக்கும்.

வாசக மேடையிலிருந்தோ, தகுந்த மற்றோர் இடத்திலிருந்தோ சங்கீதப் பாடகர் அல்லது சங்கீத முதல்வர் சங்கீத அடிகளைப் படிக்க, திருக்கூட்டமனைத்தும் அமர்ந்து கருத்தூன்றிக் கேட்டுக்கொண்டிருக்கும். சங்கீதம் நேரடியாக - அதாவது பல்லவியின்றிப் படிக்கப்பட்டால் அன்றி, வழக்கம்போலத் திருக்கூட்டம் பல்லவியை எடுத்துரைக்கும்.

திருவழிபாட்டுக் காலத்திற்கேற்ப இரண்டாம் வாசகத்துக்குப் பின் "அல்லேலூயா" (எபிரேயச் சொல்; பொருள்: "ஆண்டவரைப் போற்றுங்கள்") அல்லது மற்றொரு பாடல் இடம்பெறும். "அல்லேலூயா" தவக்காலத்துக்குப் புறம்பே எல்லாக் காலங்களிலும் பாடப்பெறும். இதை எல்லாரும் சேர்ந்தோ பாடகர் குழுவோ ஒரு பாடகரோ தொடங்கலாம். மற்றொரு பாடல் என்று மேலே குறிப்பிட்டது, வாசகப் புத்தகத்தில் அல்லது படிக்கீதப் புத்தகத்தில் கண்டுள்ளபடி, நற்செய்திக்கு முன்வரும் வசனமாகவோ மற்றொரு சங்கீதம் அல்லது நெடுங்கீதமாகவோ இருக்கும்.

நற்செய்திக்குமுன் ஒரு வாசகம் மட்டும் இருக்கும்போது, (1) "அல்லேலூயா" சொல்லவேண்டிய காலமாயின், அல்லேலூயா சங்கீதத்தைப் பயன்படுத்தலாம் அல்லது சங்கீதம், வசனம் ஆகியவையோடு அல்லேலூயா பயன்படுத்தலாம் அல்லது சங்கீதத்தை மட்டுமோ அல்லேலூயா மட்டுமோ பயன்படுத்தலாம்; (2) "அல்லேலூயா" சொல்லக்கூடாத காலமாயின், சங்கீதத்தையோ நற்செய்திக்கு முன்வரும் வசனத்தையோ பயன்படுத்தலாம்.

வாசகத்துக்குப் பின்வரும் சங்கீதம் பாடப்பெறாவிடில் படிக்கப்பெறும். "அல்லேலூயா" வசனமோ நற்செய்திக்கு முன்வரும் வசனமோ பாடப்பெறாவிடில் படிக்கப்பெறும். "அல்லேலூயா" வசனமோ நற்செய்திக்கு முன்வரும் வசனமோ பாடப்பெறாவிடில், அதை விட்டுவிடலாம்.

பாஸ்கா விழாவன்றும், தூய ஆவி விழாவன்றும் தொடர் பாடல்கள் சொல்லப்படும்; ஏனைய தொடர் பாடல்களை விரும்பினால் பயன்படுத்தலாம்.

மறையுரை

தொகு

மறையுரை திருவழிபாட்டின் ஒரு பகுதி. எனவே அது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. மறையுரை கிறிஸ்தவ வாழ்வைப் பேணிவளர்க்க இன்றியமையாத ஒன்றாகும். திருநூல் வாசகங்களின் ஓர் அம்சத்தை அல்லது அன்றைய திருப்பலியின் பொதுப் பகுதியிலிருந்தோ சிறப்புப் பகுதியிலிருந்தோ தேர்ந்துகொண்ட ஒரு பாடத்தை விளக்குவதாக மறையுரை இருக்க வேண்டும். மறையுரை ஆற்றுகின்ற பணியாளர் (ஆயர், குரு, திருத்தொண்டர்) கொண்டாடப்பெறும் மறையுண்மைநிகழ்ச்சியையும் திருக்கூட்டத்தின் தேவைகளையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் கடன் திருநாள்களில் மக்கள் கூடிவந்து கொண்டாடும் எல்லாத் திருப்பலிகளிலும் மறையுரை நிகழ்த்தப்பெற வேண்டும்; ஏனைய நாள்களிலும் சிறப்பாக, திருவருகைக் காலம், தவக் காலம், பாஸ்காக் காலம் இவற்றின் வாரநாள்களிலும், மக்கள் கோவிலுக்குத் திரளாக வந்துகூடும் நாள்களிலும், நிகழ்ச்சிகளிலும் மறையுரை நிகழ்த்துவது பரிந்துரைக்கப்படுகிறது.

வழக்கமாக, திருப்பலி நிறைவேற்றும் குருவே மறையுரை ஆற்றுவார்.

விசுவாச அறிக்கை

தொகு

திருப்பலிக் கொண்டாட்டத்தில் இடம்பெறும் விசுவாசப் பிரமாணம் அல்லது விசுவாச அறிக்கை அல்லது (நம்பிக்கை அறிக்கையால்), (Creed) மக்கள் வாசகங்களிலும் மறையுரையில் கேட்டுணர்ந்த அருள்வாக்கிற்குப் பதிலளித்து உடன்பாடு தெரிவிக்க வாய்ப்பு தரப்படுகிறது. மேலும் நற்கருணை வழிபாட்டைத் தொடங்குமுன், மக்கள் விசுவாசப் போதனைகளை நினைவுகூர வாய்ப்புக் கிடைக்கிறது.

குருவும் மக்களும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெருவிழாக்களிலும் விசுவாச அறிக்கையிட வேண்டும். தவிர, தனிப்பட்ட சிறப்புக் கொண்டாட்டங்களிலும் விசுவாச அறிக்கையிடலாம்.

வழக்கம்போல் அதை எல்லாரும் சேர்ந்தோ மாறி மாறியோ பாடலாம்.

பொது மன்றாட்டு

தொகு

பொது மன்றாட்டு அல்லது விசுவாசிகள் மன்றாட்டில் மக்கள் தங்கள் குருத்துவப் பணியைச் செயல்படுத்தி எல்லாருக்காகவும் மன்றாடுவார்கள். மக்கள் கூடியிருக்கும் திருப்பலிகளில் எல்லாம் வழக்கமாக இம்மன்றாட்டு நடைபெறுவது நல்லது; இவ்வாறு, புனித திருச்சபைக்காகவும், அதிகாரம் பெற்று மக்களை ஆள்வோர்க்காகவும், பல்வேறு தேவைகளால் வருந்துவோர்க்காகவும், மக்கள் அனைவருக்காகவும், அனைத்துலக ஈடேற்றத்திற்காகவும் வேண்டுதல் பொது மன்றாட்டில் நிகழும்.

பொது மன்றாட்டில், மன்றாட்டுகளின் வரிசை வழக்கமாகப் பின்வருமாறு அமையும்:

  • திருச்சபையின் தேவைகளுக்காக
  • நாட்டை ஆள்வோர்க்காகவும் அனைத்துலகின் நலனுக்காகவும்
  • எவ்வகை நெருக்கடியாலும் வருந்துவோர்க்காக
  • அந்தந்த இடத்து மக்கள் சமுதாயத்திற்காக.

எனினும் உறுதிப்பூசுதல், திருமணம், அடக்கச் சடங்கு போன்ற தனிப்பட்ட கொண்டாட்டங்களில் மன்றாட்டுகளின் வரிசை தனிச் சூழ்நிலைக்குத் தக்கவாறு அமையலாம்.

இம்மன்றாட்டுகளை நடத்துகிறவர் திருப்பலி நிறைவேற்றும் குரு. அவர் சில வார்த்தைகளில் கிறித்தவ மக்களைச் செபிக்கும்படி அழைப்பார். மன்றாட்டுகளுக்குப்பின் இறுதி செபத்தைச் சொல்லி முடிப்பார். திருத்தொண்டர் அல்லது பாடகர் அல்லது மற்றொருவர் கருத்துகளை அறிவிப்பது நல்லது. கருத்து தெரிவிக்கப்பட்டதும் கூட்டமனைத்தும் பொதுப் பதில் மொழியாலோ மௌன செபத்தாலோ வேண்டிக்கொள்வர்.

பொது மன்றாட்டோடு திருப்பலியின் முதல் பகுதியாகிய "அருள்வாக்கு வழிபாடு" நிறைவுறுகிறது. அதைத் தொடர்ந்து நிகழவிருக்கின்ற இரண்டாம் பகுதி "நற்கருணை வழிபாடு" என்று அழைக்கப்படுகிறது. அது தொடர்பான வழிமுறைகள் கீழே தரப்படுகின்றன.

இ) நற்கருணை வழிபாடு

தொகு

இறுதி இராவுணவின்போது கிறிஸ்து பாஸ்காப் பலியையும் திருவிருந்தையும் ஏற்படுத்தினார். இதனால், குரு ஆண்டவராகிய கிறிஸ்துவின் பதிலாளியாயிருந்து, ஆண்டவரே நிறைவேற்றித் தம் நினைவாகச் செய்யும்படி சீடரிடம் கையளித்ததையே நிறைவேற்றுவதால் திருச்சபையில் சிலுவைப்பலி தொடர்ந்து பிரசன்னமாகிறது.

கிறிஸ்து அப்பத்தையும் கிண்ணத்தையும் எடுத்து, நன்றிசெலுத்தி, அப்பத்தைப் பிட்டு தம் சீடருக்கு அளித்து,

என்றார். எனவே திருச்சபை கிறிஸ்துவின் இவ்வாக்குகளுக்கும் செயல்களுக்கும் ஏற்ற பகுதிகளை அமைத்து, நற்கருணை வழிபாடு அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளது. எவ்வாறெனில்:

  • காணிக்கைகளைத் தாரிக்கும் பகுதியில், அப்பமும் தண்ணீர் கலந்த இரசமும் பீடத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன. கிறிஸ்துவும் இதே பொருள்களைத்தான் பயன்படுத்தினார்.
  • நற்கருணை மன்றாட்டில் மீட்புப்பணி அனைத்தையும் நினைவுகூர்ந்து இறைவனுக்கு மக்கள் நன்றிசெலுத்துகின்றனர். காணிக்கைகள் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன.
  • ஒரே அப்பத்தைப் பகிர்தல் விசுவாசிகளின் ஒற்றுமைக்கு அடையாளம். கிறிஸ்துவின் கைகளிலிருந்து திருத்தூதர்கள் பெற்றுக்கொண்டதுபோலவே, கிறிஸ்தவ மக்களும் நற்கருணை உட்கொள்ளும்போது ஆண்டவருடைய உடலையும் இரத்தத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள்.

காணிக்கைகளைத் தயார் செய்தல்

தொகு

நற்கருணை வழிபாட்டின் தொடக்கத்தில் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறப்போகும் காணிக்கைகள் பலிபீடத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன.

முதன்முதலாக, நற்கருணை வழிபாடு அனைத்திற்கும் மையமாக இருக்கும் பலிபீடம், அதாவது ஆண்டவரின் உணவு மேசைமீது திருமேனித்துகில் விரித்து, கிண்ணத்துணி, கிண்ணம், திருப்பலிப் புத்தகம் ஆகியவற்றைக் கொண்டுவந்து வைத்து அது தயார் செய்யப்படும்.

பின், காணிக்கைகள் கொண்டுவரப்படுகின்றன. கிறித்தவ மக்கள் அப்பத்தையும் இரசத்தையும் காணிக்கையாக அளிப்பது பாராட்டுக்குரியது. குருவோ திருத்தொண்டரோ வசதியான இடத்தில் நின்று இக்காணிக்கைகளைப் பெற்றுக்கொள்வர். பின்னர் இக்காணிக்கைகள் பீடத்தின்மீது வைக்கப்படும்.

முற்காலத்தில் நடந்ததுபோல், இன்று கிறித்தவ மக்கள் தங்கள் வீட்டிலிருந்து திருவழிபாட்டுக்கான அப்ப இரசத்தைக் கொண்டுவருவதில்லை. என்றாலும் காணிக்கைகளைக் கொண்டுவரும் சடங்கு இன்னும் ஆன்மிகப் பொருளும் ஆற்றலும் கொண்டுள்ளது.

தவிர, ஏழைகளுக்கென்றும் கோவில் பராமரிப்புக்கென்றும் கிறித்தவ மக்கள் கொண்டுவந்த அல்லது கோவிலில் காணிக்கையாகக் கொடுத்த காசையும் மற்ற கொடைகளையும் ஏற்றுக்கொள்ளலாம். இவைகளைப் பலிபீடத்திற்குப் புறம்பே தகுந்த இடத்தில் வைக்கலாம்.

காணிக்கைப் பவனியின்போது காணிக்கைப் பாடல் பாடப்பெறும். காணிக்கைகளைப் பீடத்தின்மீது வைக்கும்வரை இப்பாடல் தொடரும். இப்பாடலைப் பற்றிய விதிகள் வருகைப்பாடலைப் பற்றியவைகளைப் போன்றவை (காண்க: திருப்பலி வழிபாட்டின் கட்டமைப்பு#வருகை). காணிக்கைப் பாடல் பாடப்படாதபோது அது விடப்படும்.

பீடத்தின்மீது வைக்கப்பெற்ற காணிக்கைகளுக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டலாம். இச்சடங்கு திருச்சபையின் காணிக்கையும் மன்றாட்டும் இறைவன் திருமுன் தூபம்போல் எழுவதைக் குறிக்கும் (காண்க: திருப்பாடல்கள் 141:2). காணிக்கைகளுக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டியபின்னர் திருத்தொண்டரோ மற்றொரு பணியாளரோ குருவுக்கும் மக்களுக்கும் தூபம் காட்டலாம்.

அடுத்து, குரு கைகளைக் கழுவுவார். இச்சடங்கு அகத்தூய்மை பெறக் குரு கொண்டிருக்கும் ஆவலை வெளிப்படுத்தும்.

காணிக்கைகளைச் சடங்குமுறைப்படி பீடத்தின்மீது வைத்தபின், குரு மக்களைத் தம்மோடு சேர்ந்து செபிக்க அழைத்து, "காணிக்கைமீது மன்றாட்டு" என்னும் செபத்தைச் சொல்லுவார். இவ்வாறு காணிக்கைகளைத் தயார்செய்தல் என்னும் பகுதி முடிந்து, நற்கருணை மன்றாட்டுக்கு இறைமக்கள் தயாராகின்றனர்.

நற்கருணை மன்றாட்டு

தொகு

இப்பொழுது தொடங்கும் நற்கருணை மன்றாட்டு நன்றிசெலுத்தி அர்ச்சிக்கும் இறைவேண்டல் ஆகும். இதுவே திருப்பலிக் கொண்டாட்டம் அனைத்திற்கும் மையமும் சிகரமும் ஆகும். மக்கள் தங்கள் உள்ளங்களைப் பக்திப் பற்றுதலுடனும் நன்றியுணர்வுடனும் இறைவனை நோக்கி எழுப்பும்படி குரு அழைக்கின்றார். அவர்களைத் தம்முடன் இறைவேண்டலில் இணைத்து, முழுச் சமூகத்தின் பெயராலும் அவர் இயேசு கிறிஸ்து வழியாக விண்ணகத் தந்தையாம் இறைவனை நோக்கி மன்றாடுகிறார். வழிபடும் கூட்டத்தினர் அனைவரும் கிறிஸ்துவோடு ஒன்றித்து, இறைவனின் மாபெரும் செயல்களை நினைவுகூர்ந்து அறிக்கையிட்டுப் பலி ஒப்புக்கொடுப்பதே இம்மன்றாட்டின் கருத்து ஆகும்.

நற்கருணை மன்றாட்டின் பல்வேறு பகுதிகளைப் பின்வருமாறு பிரிக்கலாம்:

1) நன்றி செலுத்துதல் (இது குறிப்பாக தொடக்கவுரையில் விளங்கும்): இதில், புனித மக்கள் அனைவரின் சார்பாகக் குரு தந்தையாம் இறைவனை மகிமைப்படுத்தி, அவர் நிறைவேற்றிய மீட்புப் பணியனைத்தையும் நினைந்து நன்றிசெலுத்துவார் அல்லது திருவழிபாட்டுக் காலம், விழா, நாள் ஆகியவற்றிற்குப் பொருத்தமான அம்மீட்புப் பணியின் ஒரு குறிப்பிட்ட சிறப்பினை நினைந்து நன்றிசெலுத்துவார்.

2) ஆர்ப்பரித்தல்: திருக்கூட்டம் அனைத்தும் விண்ணவர்களோடு சேர்ந்து "தூயவர்" என்னும் பாடலைப் பாடும் அல்லது அதைச் செபிக்கும். நற்கருணை மன்றாட்டில் ஒரு பகுதியாக அமைந்த இந்த ஆர்ப்பரிப்பைக் குருவோடு சேர்ந்து மக்கள் அனைவரும் எழுப்புவர்.

3) தூய ஆவியின் வருகைக்காக மன்றாடுதல்: மக்களால் அர்ப்பணிக்கப்பட்ட கொடைகள் புனிதம் பெற வேண்டும், அதாவது கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறவேண்டும் என்றும், நற்கருணைப் பந்தியில் அமரப்போகிறவர்களின் மீட்புக்கு இப்பலிப்பொருள் பயன்படவேண்டும் என்றும் திருச்சபை தெய்வீக ஆற்றலைத் தனிவகையில் இறைஞ்சுகிறது.

4) நற்கருணையை ஏற்படுத்திய வரலாறும் வசீகரமும்: கிறிஸ்து இறுதி இராவுணவின்போது அப்ப இரச குணங்களுள் தம் உடலையும் இரத்தத்தையும் ஒப்புக்கொடுத்து, அவைகளைத் திருத்தூதர் உண்ண உணவாகவும் பருகப் பானமாகவும் அவர்களுக்கு அளித்தார். இம்மறைபொருள் நிகழ்ச்சியை நீடித்திருக்கச் செய்யவேண்டும் என்னும் கட்டளையையும் அவர்களுக்குக் கொடுத்துச் சென்றார். இவ்வாறு இறுதி இராவுணவின்போது கிறிஸ்து ஏற்படுத்திய பலி இங்கு கிறிஸ்துவின் வாக்குகளாலும் செயல்களாலும் நிறைவேறுகிறது.

5) நினைவுகூர்தல்: ஆண்டவராகிய கிறிஸ்துவின் கட்டளையைத் திருத்தூதர்கள் வழியாகப் பெற்றுகொண்ட திருச்சபை அதை நிறைவேற்றி, கிறிஸ்துவை, சிறப்பாக அவர்தம் புனிதமிக்க பாடுகளையும் மாட்சிமிக்க உயிர்த்தெழுதலையும் விண்ணேற்றத்தையும் நினைவுகூருகின்றது.

6) ஒப்புக்கொடுத்தல்: மேற்குறிப்பிட்டவாறு நினைவுகூரும்போது திருச்சபை - சிறப்பாக வழிபாடு நடத்த ஓரிடத்தில் கூடிவருகின்ற திருச்சபை - தூய ஆவியால் விண்ணகத் தந்தைக்கு மாசற்ற பலிப்பொருளை ஒப்புக்கொடுக்கிறது. இந்நேரத்தில் கிறிஸ்தவ மக்கள் மாசற்ற பலிப்பொருளை ஒப்புக்கொடுப்பதோடு அமையாது, தங்களையே ஒப்புக்கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இறுதியில் இறைவனே எல்லாருக்கும் எல்லாமாய் இருக்குமாறு கிறிஸ்துவை இடைநிலையாளராகக் கொண்டு, இறைவனோடும் தங்களுக்குள்ளும் ஒருமைப்பாட்டை நாளுக்குநாள் வளர்த்து நிறைவு எய்தவேண்டுமென்றும் திருச்சபை விரும்புகிறது.

7) வேண்டுதல்கள்: விண்ணக, மண்ணகத் திருச்சபை அனைத்தும் கூடி நற்கருணைப்பலி கொண்டாடுகிறது என்றும், கிறிஸ்துவின் உடலாலும் இரத்தத்தாலும் கிடைத்த ஈடேற்றத்திலும் மீட்பிலும் பங்குகொள்ளுமாறு அழைக்கப்பெற்ற திருச்சபைக்காகவும், அதன் உறுப்பினரான வாழ்வோர், இறந்தோர் அனைவருக்காகவும் நற்கருணைப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறது என்றும் இவ்வேண்டுதல்கள் வெளிப்படுத்துகின்றன.

8) இறுதிச் சிறப்புப் புகழுரை: இறைவனைப் போற்றி மகிமைப்படுத்தும் இப்புகழ்ச்சி உரை மக்களின் "ஆமென்" என்னும் ஆர்ப்பரிப்பால் உறுதிசெய்யப்பட்டு நிறைவுறுகிறது.

அனைவரும் பக்தியுடனும் அமைதியுடனும் கவனமாகக் கேட்டு, சடங்கில் குறிப்பிட்ட ஆர்ப்பரிப்புகள் வழியாகப் பங்குகொள்ளவேண்டும் என நற்கருணை மன்றாட்டின் அமைப்பு வலியுறுத்துகிறது.

திருவிருந்துச் சடங்கு

தொகு

நற்கருணைக் கொண்டாட்டம் பாஸ்கா விருந்தை உண்பதாகும். எனவே, ஆண்டவரின் கட்டளைப்படி, தகுதியுள்ள விசுவாசிகள் அவருடைய உடலையும் இரத்தத்தையும் ஆன்ம உணவாகப் பெற்றுக்கொள்ளவேண்டும். அப்பத்தைப் பகிர்தலும் விசுவாசிகளை நற்கருணைப் பந்திக்கு நேரடியாக அழைத்துச் செல்கின்ற மற்ற தயாரிப்புச் சடங்குகளும் இதையே நோக்கமாகக் கொண்டுள்ளன:

1) ஆண்டவரின் வேண்டல்: இச்செபத்தில் அன்றாட உணவுக்காக மன்றாடுகிறோம். அது கிறிஸ்தவர்களுக்கு நற்கருணை உணவையும் குறிக்கும். மேலும், இந்த மன்றாட்டில் பாவ மன்னிப்புக்காக வேண்டுதல் செய்யப்படுகிறது. ஏனெனில் புனிதமானவை புனிதமானவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இறைவேண்டல் செய்ய குரு அழைப்பு விடுப்பார். விசுவாசிகள் அனைவரும் அவரோடு சேர்ந்து இம்மன்றாட்டைச் சொல்லுவர். இதன் வழக்கமான தமிழ் வடிவம் இதோ:

இதே மன்றாட்டு தற்காலத் தமிழ் வடிவத்தில் கீழ்வருமாறு அமையும்:

பின்பு குரு மட்டும் "ஆண்டவரே தீமைகள் அனைத்தினின்றும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகிறோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலைபெற்று, யாதொரு கலக்கமுமின்றி நலமாயிருப்போமாக. நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்" என்னும் வேண்டலைத் தொடர்ந்து சொல்வார்.

மக்கள், "ஏனெனில் அரசும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே" என்னும் புகழுரை கூறி முடிப்பார்கள். இச்சேர்க்கை இயேசு கற்பித்த இறைவேண்டலின் இறுதி மன்றாட்டை விரிவுபடுத்தி, தீமைகள் அனைத்தினின்றும் விசுவாசிகள் குடும்பத்திற்கு விடுதலை வேண்டுகிறது.

இந்த இறைவேண்டலுக்கு அழைப்பு, மன்றாட்டு, அதன் பிற்சேர்க்கை, சேர்க்கையின் முடிவாக மக்கள் சொல்லும் புகழுரை ஆகிய அனைத்தையும் பாடலாம் அல்லது தெளிவான குரலில் சொல்ல வேண்டும்.

2) சமாதானச் சடங்கு: இயேசு கற்பித்த இறைவேண்டல் பகுதியைத் தொடர்ந்து சமாதானச் சடங்கு நிகழும். ஒரே அப்பத்தில் பங்குகொள்ளுமுன், விசுவாசிகள் திருச்சபைக்காகவும் மனித குடும்பம் அனைத்துக்காகவும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் இறைஞ்சி மன்றாடுவார்கள். தமக்குள்ளும் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.

இவ்வாறு ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தும் முறையை மக்களின் பழக்க வழக்கங்களுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ப, ஆயர் குழுக்கள் வரையறுக்கும்.

3) அப்பத்தைப் பகிர்தல்: இறுதி இராவுணவின்போது கிறிஸ்து இவ்வாறு செய்தார். எனவே திருத்தூதர்கள் காலத்தில் நற்கருணைக் கொண்டாட்டம் முழுவதும் "அப்பப் பகிர்வு" எனப் பெயர் பெற்றது. இச்சடங்கு நற்கருணை வழங்கப் பயன்படுகிறது. மேலும் கிறிஸ்துவே உயிர்தரும் ஒரே அப்பமாயிருக்க, திருவிருந்தில் பங்குகொள்ளும் நாம் பலராயினும் ஒரே உடலாக மாறுகிறோம் என்பதையும் உணர்த்துகிறது (காண்க: 1 கொரிந்தியர் 10:17).

4) கலத்தல்: குரு அப்பத்தின் ஒரு சிறு பகுதியைத் திருக்கிண்ணத்தில் இடுகிறார்.

5) உலகின் பாவம் போக்கும் செம்மறி: அப்பத்தைப் பகிர்ந்து கலத்தல் நடக்கும்போது, பாடகர் குழுவால், அல்லது மக்கள் பதிலளிக்க, பாடகர் ஒருவரால் இம்மன்றாட்டு பாடப்படும் அல்லது சொல்லப்படும். அப்பப் பகிர்வு முடியும்வரை தேவைக்கு ஏற்ப இம்மன்றாட்டை மீண்டும் மீண்டும் சொல்லலாம். இறுதியாக "எங்களுக்கு அமைதி அருளும்" என்று முடிவுறும்.

6) நற்கருணை உட்கொள்ளுதல்: கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் பயனுள்ள வகையில் உண்டு பருகக் குரு அமைதியாகச் செபித்துத் தம்மைத் தயாரிப்பார். அப்பொழுது இறைமக்களும் தங்களைத் தயாரிப்பார்கள்.

அடுத்து நற்கருணை அப்பத்தைக் குரு விசுவாசிகளுக்குக் காண்பித்து, அவர்களைக் கிறிஸ்துவின் திருப்பந்திக்கு அழைப்பார். விசுவாசிகளோடு சேர்ந்து நற்செய்திச் சொற்களைப் பயன்படுத்தி, தாழ்ச்சி முயற்சி செய்வார்.

அதே திருப்பலியில் வசீகரம் செய்யப்பெற்ற அப்பத்திலிருந்து விசுவாசிகள் திருவுடலைப் பெற்றுக்கொள்வதும், அனுமதிக்கப்பட்ட பொழுதெல்லாம் திருக்கிண்ணத்தில் பங்குகொள்வதும் மிக விரும்பத்தக்கனவாகும். இவ்வாறு நடைபெறும் திருப்பலியில் பங்கேற்பதே திருவிருந்தாம் என அருட்சாதன முறையில் மிகச் சிறப்பாக விளங்கும்.

குருவும் மக்களும் நற்கருணை உட்கொள்ளும்போது திருவிருந்துப் பாடல் பாடப்படும். ஒரே குரலாக எழும் இப்பாடல் நற்கருணை உட்கொள்வோரின் ஆன்மிக ஒற்றுமையைக் காட்டுகிறது; உள்ளத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது; நற்கருணை உட்கொள்ளப் பவனியாகச் செல்பவர்களைச் சகோதர அன்பில் இணைக்கிறது. குரு நற்கருணை உட்கொள்ளும் போது திருவிருந்துப் பாடல் தொடங்கி, தேவைக்கு ஏற்ப விசுவாசிகள் நற்கருணை வாங்கி முடியுமட்டும் நீடிக்கும். திருப்பந்திக்குப் பின்னும் பாடல் ஒன்று இருக்குமானால், திருவிருந்துப் பாடல் தக்க காலத்தில் முடிய வேண்டும்.

பாடல் எதுவும் இல்லையென்றால், விசுவாசிகள் அனைவரும் அல்லது அவர்களுள் ஒரு சிலர் திருப்பலிப் புத்தகத்தில் தரப்பட்டுள்ள திருவிருந்துப் பல்லவியைப் படிப்பர் அல்லது வாசகர் ஒருவர் அதைப் படிப்பார். இன்றேல், குருவே, தாம் நற்கருணை உண்டபின், விசுவாசிகளுக்கு நற்கருணை வழங்குமுன் படிப்பார்.

நற்கருணை வழங்கியபின் குருவும் விசுவாசிகளும், சூழ்நிலைக்கு ஏற்ப, சிறிது நேரம் மௌனம் காத்து மன்றாடுவார்கள். விரும்பினால் திருக்கூட்டம் அனைத்தும் ஒரு பாடலோ, சங்கீதமோ, புகழ்ப் பாடலோ பாடலாம்.

7) நன்றி மன்றாட்டு: நற்கருணை விருந்தின் இறுதியில் நன்றி மன்றாட்டு நிகழும். கொண்டாடிய மறைபொருள் நிகழ்ச்சியின் பலன்களுக்காகக் குரு நன்றி மன்றாட்டில் வேண்டுவார். மக்கள் "ஆமென்" எனக் குரல் எழுப்பி, மன்றாட்டைத் தங்களுடையதாக்கிக் கொள்வார்கள்.

முடிவுச் சடங்கு

தொகு

திருப்பலிக் கொண்டாட்டத்தின் முடிவுச் சடங்கு பின்வருமாறு அமையும்:

  • குரு மக்களை வாழ்த்தி ஆசி கூறுவார். குறிப்பிட்ட நாள்களிலும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலும் இவ்வாழ்த்தும் ஆசியும் "மக்கள்மீது செபம்" அல்லது வேறு சிறப்பான ஆசியுரை வழியாக வெளியிடப்படும்.
  • ஆண்டவரை வாழ்த்திப் புகழ்ந்தவர்களாய், நற்பணி புரிந்து வாழப் பிரியாவிடை பெற்றுத் திருக்கூட்டம் அனுப்பப்படுகிறது. முடிவுச் சடங்குக்கான பாடம் கீழ்வருமாறு:

திருப்பலியின் தொடக்கத்தில் செய்ததுபோல, அதன் முடிவிலும் குரு பீடத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்வார். பின்பு பணியாளருடன் பீடத்துக்கு வணக்கம் செலுத்திவிட்டுச் செல்வார். இறுதிப் பாடல் பாடப்பெறலாம். பின்னர் மக்கள் கலைந்துசெல்வர்.

ஆதாரங்கள்

தொகு
  1. The General Instruction of the Roman Missal. Copyright © 2011, United States Conference of Catholic Bishops, Washington, DC. All rights reserved.
  2. திருப்பலி வழிபாட்டின் பாகங்கள்
  3. "திருப்பலிக் கொண்டாட்ட விதிகள்". Archived from the original on 2011-11-18. பார்க்கப்பட்ட நாள் 2011-11-22.

மேலும் காண்க

தொகு