பாத்திமா அன்னை

தூய பாத்திமா அன்னை என்ற பெயர், போர்ச்சுக்கல் நாட்டின் பாத்திமா நகரில் 1917 மே 13 முதல் 1917 அக்டோபர் 13 வரை லூசியா சான்டோஸ், ஜெசிந்தா மார்த்தோ, பிரான்சிஸ்கோ மார்த்தோ என்ற மூன்று சிறாருக்கு அன்னை மரியா அளித்த காட்சியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும்.[1] இந்த உலகின் பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த காட்சிகளில் சிறப்பு வாய்ந்ததாக பாத்திமா நகர் காட்சியும் விளங்குகிறது. இரண்டாம் உலகப் போர், ரஷ்ய நாட்டின் மனமாற்றம் ஆகியவை பற்றி பாத்திமா அன்னை வழங்கிய முன்னறிவிப்புகள் அப்படியே பலித்ததால், பாத்திமா காட்சி மிகவும் பிரபலம் அடைந்தது.[2] பாத்திமா அன்னையின் திருவிழா மே 13ந்தேதி கொண்டாடப்படுகிறது,

பாத்திமா அன்னை
பாத்திமா அன்னை திருவுருவம், பாத்திமா நகர், போர்ச்சுக்கல்
இடம்பாத்திமா, போர்ச்சுக்கல்
தேதி13 மே — 13 அக்டோபர் 1917
சாட்சிகள்லூசியா சான்டோஸ், ஜெசிந்தா மார்த்தோ, பிரான்சிஸ்கோ மார்த்தோ
வகைமரியாவின் காட்சிகள்
கத்தோலிக்க ஏற்பு1930, திருத்தந்தை 11ம் பயஸ் காலம்
ஆலயம்பாத்திமா அன்னை ஆலயம், பாத்திமா, போர்ச்சுக்கல்.

வானதூதரின் காட்சிகள்

தொகு

1916ஆம் ஆண்டு வசந்த காலத்தில், போர்ச்சுக்கல் நாட்டின் பாத்திமா பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களான லூசியா சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்த்தோ, பிரான்சிஸ்கோ மார்த்தோ ஆகியோருக்கு முன்பாக ஒரு வானதூதர் தோன்றி, தன்னை சமாதானத்தின் தூதர் என்று அறிமுகம் செய்தார். மேலும் அவர், "நான் போர்ச்சுக்கல் நாட்டின் காவல் தூதர், நீங்கள் பாவிகளுக்காக செபிக்க வேண்டும்" என்றும் சிறார் மூவரிடமும் கூறினார்.

1917 மே 13ந்தேதி, அதே வானதூதர் மீண்டும் சிறார் மூவர் முன்னும் தோன்றிய வானதூதர் கையில் நற்கருணையை ஏந்தி இருந்தார். அவரது கையில் இரசக் கிண்ணமும், அதன் மேலே அந்தரத்தில் மிதந்தவாறு நற்கருணை அப்பமும் காட்சி அளித்தன. நற்கருணையில் பிரசன்னமாகி இருக்கும் இயேசு கிறிஸ்துவிடம் கூறுமாறு பின்வரும் செபத்தை வானதூதர் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.

“என் கடவுளே,
நான் உம்மை விசுவசிக்கிறேன், நான் உம்மை ஆராதிக்கிறேன்,
நான் உம்மை நம்புகிறேன், நான் உம்மை நேசிக்கிறேன்.
உம்மை விசுவசிக்காதவர்களுக்காகவும், உம்மை ஆராதிக்காதவர்களுக்காகவும்,
உம்மை நம்பாதவர்களுக்காகவும், உம்மை நேசிக்காதவர்களுக்காகவும்
உம்மிடம் மன்னிப்பு கேட்கின்றேன்.”

இறுதியாக, “இயேசு மற்றும் அன்னை மரியாவின் இதயங்கள் நம் மன்றாட்டுகளுக்கு செவி கொடுக்கக் காத்திருக்கின்றன” என்று கூறி வானதூதர் அவர்கள் முன்னிருந்து மறைந்தார்.

மரியாவின் காட்சிகள்

தொகு

அந்த தூதர் மறைந்தவுடன் சிறிது நேரத்தில், சிறார்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கோவா டா இரியாவின் ஒரு புதர் செடியின் மீது ஒளிமயமான ஒரு மேகம் வந்து இறங்கியது.[3] அந்த மேகத்தின் மேல் அன்னை மரியா தோன்றி காட்சி அளித்தார். லூசியா சான்டோஸ், ஜெசிந்தா மார்த்தோ, பிரான்சிஸ்கோ மார்த்தோ ஆகிய மூன்று பேரும் அந்த காட்சியைக் கண்டனர்.

மரியன்னை அவர்களிடம், "நான் செபமாலை அன்னை" என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். மேலும், அந்த மூன்று சிறாரும், தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 13ந்தேதி அதே இடத்திற்கு வர வேண்டும் என்று மரியா கட்டளை இட்டார். ஜூலை 13ந்தேதி, அன்னை மரியா காட்சி அளித்தபோது சிறுவர்களுக்கு நரகத்தின் கொடிய வேதனைகளைக் காண்பித்தார். "பாவிகள் மனம் திரும்ப செப, தவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றும் மரியன்னை அறிவுறுத்தினார்.[4]

 
பாத்திமாவில் நிகழ்ந்த சூரியனின் அற்புதத்தை வெளியிட்ட இலுஸ்ட்ராக்கோ போர்ச்சுக்யூசா செய்தித்தாள், நாள்: 29 அக்டோபர் 1917.

மக்கள் நரகத்தில் விழாமல் இருக்க, "ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும். எல்லாரையும் விண்ணகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்கு சிறப்பாக உதவி புரியும்" என்ற செபத்தை செபிக்குமாறு மரியா கற்றுக்கொடுத்தார்.[5] காட்சியை உறுதிப்படுத்தும் வகையில் அக்டோபர் 13ந்தேதி சூரியனில் ஓர் அதிசயம் நிகழும் என்றும் அவர் முன்னறிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் 13ந்தேதி, லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ்கோ மூவரும் அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். எனவே அன்றைய தினத்துக்கு பதிலாக, மரியாவின் விண்ணேற்பு நாளான ஆகஸ்ட் 15ந்தேதி சிறார் மூவரும் அன்னையின் காட்சியைக் கண்டனர்.[3] மக்கள் பலரும் அன்னையின் அற்புதத்தைக் காண இச்சிறாரைப் பின்தொடர்ந்தனர்.

மேலும் அன்னை தனது காட்சிகளின்போது, மனிதரின் தீய நடத்தையையும் இறைவனின் கோபத்தையும் வெளிப்படுத்தினார். மரியா காட்சி அளித்த வேளையில் நிகழ்ந்து கொண்டிருந்த முதல் உலகப் போர் விரைவில் முடியப் போவதாகவும், மக்கள் தொடர்ந்து பாவம் செய்தால் அதைவிடக் கொடிய உலகப் போர் மூளும் என்றும் அன்னை எச்சரிக்கை செய்தார். வானில் காரணமின்றி தோன்றும் ஓர் ஒளியே அந்த போருக்கு அடையாளமாக இருக்கும் என மரியன்னை முன்னறிவிப்பு செய்தார்.

கிறிஸ்தவர்கள் செபித்தால் மக்களிடையே (குறிப்பாக ரஷ்யாவில்) மனமாற்றம் நிகழும் என்றும், கிறிஸ்துவை அறியாதவர்கள் விரைவில் மனம் திரும்புவார்கள் என்றும் அன்னை மரியா மொழிந்தார். தலை வணங்கி கடவுளிடம் மன்னிப்புக் கேட்குமாறும், கிறிஸ்துவின் திருச்சிலுவை முன் மண்டியிட்டு செபிக்குமாறும் மரியன்னை அறிவுறுத்தினார். "இறுதி காலத்தில் மக்கள் கடவுளின் கட்டளைகளை மதிக்காமல் நடப்பர், மக்களிடையே மனக்கசப்பும் வெறுப்பும் நிலவும், மனிதர்கள் உலகையே அழிக்கும் பயங்கர ஆயுதங்களைக் கண்டுபிடிப்பர்" என்றும், "இயற்கை சக்திகளால் சிறிது சிறிதாக அழிவுகள் ஏற்பட கடவுள் அனுமதிப்பார். குளிர்ந்த இரவில் ஏற்படும் கொடிய நிலநடுக்கத்திற்கு பின் உலகத்தில் பேரழிவுகள் தொடங்கும், கடவுளுக்கு விருப்பமான மக்கள் மட்டுமே அதில் தப்பி பிழைப்பர்" என்றும் அன்னை மரியா கூறினார்.

1917 அக்டோபர் 13ந்தேதி, அன்னையின் காட்சியைக் காண சுமார் 70 ஆயிரம் பேர் கூடி இருந்ததாக நம்பப்படுகிறது.[6] அப்போது வானில் வியத்தகு அதிசயங்கள் தோன்றின. வானில் இருந்து பல வண்ணங்கள் தோன்றி மக்கள் மேல் ஒளிர்ந்தன. பெரிய மழைப் பெய்த வேளையிலும் அன்னை மரியா காட்சி அளித்த புதரும் 3 சிறார்கள் இருந்த இடமும் மட்டும் உலர்ந்தே காணப்பட்டன. மக்கள் பலரும் அன்னை தோன்றிய ஒளிரும் மேகத்தைக் கண்டனர். அப்போது அவர் சிறாரிடம், "மக்கள் செபிக்க வேண்டும்; பாவத்தினால் கடவுளின் உள்ளத்தை புண்படுத்தக்கூடாது" என்று மிகவும் வலியுறுத்தி கூறினார். மக்களின் மனமாற்றத்திற்காக செபமாலை செபிக்கப்பட வேண்டுமென்றும், இறுதியில் தனது மாசற்ற இதயம் வெற்றி பெறும் என்றும் மரியன்னை மொழிந்தார்.

சூரியனின் அற்புதம் நிகழ்ந்தபோது, சூரியன் மக்களின் கண்களுக்கு குளிர்ந்த நிலவு போன்று தோன்றியது. அது பம்பரம் போல சுழன்றவாறு, சிறிது நேரம் குடிகாரனை போல அங்கும் இங்கும் தள்ளாடியது. இவற்றை அங்கிருந்த அனைவரும் பார்த்தனர். இந்த செய்தி போர்ச்சுக்கல் நாட்டு பத்திரிகைகள் அனைத்திலும் நிழற்படங்களுடன் வெளிவந்தது.

மூன்று இரகசியங்கள்

தொகு
 
லூசியா சான்டோஸ், பிரான்சிஸ்கோ மார்ட்டோ, ஜெசிந்தா மார்ட்டோ, 1917.

முதல் இரகசியம்: அன்னை மரியா பாத்திமாவில் காட்சி அளித்தபோது, மக்கள் பாவத்தில் இருந்து மனந்திரும்பவில்லை என்றால் மீண்டும் ஓர் உலகப் போர் தோன்றும் என்றும், காரணமின்றி இரவு வானில் தோன்றும் ஓர் ஒளியே அதற்கு அடையாளமாக இருக்கும் என்றும் கூறினார்.[7][8] அன்னை முன்னறிவித்த அந்த ஒளி, 1938 ஜனவரி 25ந்தேதி வானில் தோன்றி, பூமியின் வட அரைக்கோளம் முழுவதும் ஒளிர்ந்தது.[7][8] அதைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் மூண்டது.

இரண்டாம் இரகசியம்: அன்னை மரியா பாத்திமாவில் காட்சி அளித்தபோது ரஷ்யா தனது மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டுமென்றும், ரஷ்யா கம்யூனிசக் கொள்கைகளில் இருந்து மனந்திரும்ப கிறிஸ்தவர்கள் அனைவரும் செபிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். திருத்தந்தை 12ம் பயஸ் முதலில் உலகத்தையும், 1952 ஜூலை 7ந்தேதி சாக்ரோ வெர்ஜென்ட்டே (Sacro Vergente) என்ற தனது திருத்தூது மடல் வழியாக ரஷ்யாவையும் மரியாவின் மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணித்தார்.[9] 1984ல் திருத்தந்தை 2ம் ஜான் பால் உலகத்தை மீண்டும் மரியாவின் மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணித்தார். 1990களில் ரஷ்யா கம்யூனிசக் கொள்கைகளில் இருந்து மனந்திரும்பியது.

மூன்றாம் இரகசியம்: அன்னை மரியா பாத்திமாவில் காட்சி அளித்தபோது, இறுதி காலத்தில் மக்கள் கடவுளை மறந்து தீய வழிகளில் ஆர்வமாக இருப்பார்கள் என்றும், தீவிரவாதமும், வன்முறைகளும், பயமும் அதிகரிக்கும் என்றும்,[10] கத்தோலிக்க திருச்சபையும் திருத்தந்தையும் அதிகம் துன்புற வேண்டியிருக்கும் என்றும், கடவுள் பல்வேறு துன்பங்களை உலகில் அனுமதிப்பார் என்றும், உண்மை கடவுள் மீது உறுதியான நம்பிக்கை கொள்வோர் அழிவில் இருந்து தங்களை காத்துக்கொள்வர் என்றும், இறுதியில் தனது மாசற்ற இதயம் வெற்றிபெறும் என்றும் அறிவித்தார்.

இந்த இரகசியங்கள் லூசியா சான்டோசின் குறிப்புகளின்படி, கத்தோலிக்க திருச்சபையால் வெளியிடப்பட்டன. இரகசியங்களின் செய்தி சில வேளைகளில் வேறுவிதமாகவும் கூறப்படுகிறது. இந்த மூன்று இரகசியங்களைத் தவிர மற்றும் சில செய்திகளையும் அன்னை வழங்கினார். ஜெசிந்தாவும், பிரான்சிஸ்கோவும் சிறு வயதிலேயே இறந்துவிடுவர் என்றும், தனது செய்தியைப் பரப்ப லூசியா பல ஆண்டுகள் உயிரோடு இருப்பார் என்றும் மரியன்னை முன்னறிவித்திருந்தார். அதுவும் அவ்வாறே நிகழ்ந்தது.

1981 மே 13ந்தேதி பாத்திமா அன்னையின் திருவிழா அன்று, திருத்தந்தை 2ம் ஜான் பால் அலி ஆக்கா என்ற துருக்கிய இளைஞனால் துப்பாக்கியால் சுடப்பட்டபோது, தான் அன்னையின் கரங்களால் பாதுகாக்கப்பட்டதை உணர்ந்ததாக அவர் கூறினார். அவரது உடலில் பாய்ந்த துப்பாக்கித் தோட்டா, பின்பு பாத்திமா அன்னையின் கிரீடத்தில் பதிக்கப்பட்டது. திருத்தந்தை 2ம் ஜான் பால் துப்பாக்கியால் சுடப்பட்ட இந்த சம்பவம், பாத்திமாவின் மூன்றாவது இரசியத்தின் நிறைவேறுதலாக கருதப்படுகிறது.

பாத்திமா பேராலயம்

தொகு
 
பாத்திமா அன்னை பேராலயம், போர்ச்சுக்கல்.

லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ் ஆகியோர் மரியாவின் காட்சிகளை கண்ட நாட்கள் முதலே, பாத்திமா காட்சிகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணியைத் திருச்சபை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும் 1917 அக்டோபர் 13ந்தேதி காட்சியின்போது, நிகழ்ந்த சூரியனின் அற்புதத்தை எழுபதாயிரம் மக்கள் கண்டது இந்த காட்சியின் உண்மைத்தன்மைக்கு மேலும் வலுசேர்த்தது. பாத்திமா காட்சிகளுக்கு பிறகு, கத்தோலிக்க திருச்சபை மக்களிடையே புனித வாழ்வு மலர பல்வேறு செப, தவ முயற்சிகளை மேற்கொண்டது. செபமாலை செபிக்கும் ஆர்வத்தை கிறிஸ்தவர்களிடையே அதிகரித்தது.

பல்வேறு விசாரணைகளுக்கு பின்பு, 1930 அக்டோபர் மாதத்தில் பாத்திமா காட்சிகளின் உண்மைத்தன்மை திருச்சபையால் உறுதிசெய்யப்பட்டது. திருத்தந்தை 11ம் பயஸ், பாத்திமா அன்னையின் வணக்கத்திற்கு அனுமதி வழங்கினார். இதன் மூலம் பாத்திமா நகர், அன்னை மரியாவின் பக்தர்கள் வந்து செல்லும் புனித இடமாக மாறியது.

அதன் பிறகு அன்னை மரியா காட்சி அளித்த புதரின் அருகில் மரியாவின் பெயரில் பெரிய ஆலயம் ஒன்று கட்டி எழுப்பப்பட்டது. வானதூதர் காட்சி அளித்த இடத்தில் நினைவு சிற்பமும், மரியன்னை காட்சி அளித்த இடத்தில் நினைவு சிற்றாலயமும் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் உலகெங்கும் இருந்து இலட்சக்கணக்கான திருப்பயணிகள் பாத்திமா அன்னை பேராலயத்தை நாடிச் செல்கின்றனர்.

திருத்தந்தை 2ம் ஜான் பால் பாத்திமாவுக்கு மூன்றாவது முறையாக திருப்பயணம் மேற்கொண்டபோது, 2000 மே 13 அன்று ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ ஆகியோருக்கு அருளாளர் பட்டம் வழங்கினார்.[11] 2010 மே 13ந்தேதி திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பாத்திமா பேராலயத்தை நேரில் தரிசித்து, அன்னை மரியாவிடம் செபித்தார்.[12]

ஆதாரங்கள்

தொகு
  1. "Catholic Online: Apparitions of Our Lady of Lourdes First Apparition". Archived from the original on 2005-04-12. பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
  2. "The Message of Fatima – An attempt to interpret the "secret" of Fatima". Congregation of the Doctrine of the Faith. பார்க்கப்பட்ட நாள் 2009-10-30.
  3. 3.0 3.1 (De Marchi 1952)
  4. Lucia Santos, Memoir 2, p. 93 in Fatima in Lucia's Own Words, entire text online, page found 2010-12-11.
  5. Walsh, p. 220.
  6. Estimates of the crowd size range from "thirty to forty thousand" by Avelino de Almeida, writing for the Portuguese newspaper O Século (De Marchi, John (1952). The True Story of Fatima. St. Paul, Minnesota: Catechetical Guild Entertainment Society.), to one hundred thousand, estimated by Dr. Joseph Garrett, Professor of Natural Sciences at Coimbra University (De Marchi 1952, p. 177), both of whom were present that day (De Marchi 1952, pp. 185–187). The accepted figure is 70,000.
  7. 7.0 7.1 Petrisko, Thomas W., Rene Laurentin, and Michael J. Fontecchio, The Fatima Prophecies: At the Doorstep of the World, p. 48, St. Andrews Productions 1998
  8. 8.0 8.1 Hessaman, Michael The Fatima Secret, Random House 2008
  9. PIUS PP. XII, Epist. apost. Sacro vergente anno de universae Russorum gentis Immaculato Mariae Cordi consecratione, [Ad universos Russiae populos], 7 iulii 1952: AAS 44(1952), pp. 505-
  10. Fatima In Lucia's Own words, Lucia de Jesus (1995), The Ravengate Press, pp101,104
  11. [1]
  12. International Dictionary of Historic Places: Southern Europe, p. 245

நூல்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்திமா_அன்னை&oldid=3869374" இலிருந்து மீள்விக்கப்பட்டது