நம்பிக்கை அறிக்கை
நம்பிக்கை அறிக்கை அல்லது விசுவாச அறிக்கை அல்லது விசுவாசப் பிரமாணம் (creed) என்பது ஒரு சமயக் குழு தான் நம்பி ஏற்கின்ற சமய உண்மைகளை வெளிப்படுத்தவும், அதைச் சமயக் கொண்டாட்டங்களின் போது அறிக்கையிடவும் பயன்படுத்துகின்ற உரைக்கோப்பு ஆகும்.[1].
நம்புகிறேன் ("I believe" ) எனப் பொருள்படுகின்ற "credo" என்னும் சொல் (இலத்தீன்: credo) கிறித்தவ நம்பிக்கை அறிக்கையைக் குறிக்க பொதுவாகப் பயன்படுகிறது.
மிகப் பெரும்பான்மையான கிறித்தவ சபைகள் ஏற்றுக் கொள்கின்ற நிசேயா நம்பிக்கை அறிக்கை மற்றும் திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை ஆகிய இரண்டும் "நம்புகிறேன்" (இலத்தீன்: credo) என்னும் சொல்லோடுதான் தொடங்குகின்றன. ஒரே சமய நம்பிக்கை கொண்டவர்கள் தம்மை "அடையாளம்" கண்டுகொள்ள உதவுகின்ற "உரைகல்லாக" நம்பிக்கை அறிக்கை உள்ளது. எனவேதான் நம்பிக்கை அறிக்கை "symbol" (கிரேக்க மொழி: σύμβολο[ν], sýmbolo[n]) எனவும் அழைக்கப்படுகிறது.
இத்தகைய நம்பிக்கை அறிக்கை போதனை அளிக்கும் வகையில், மறுப்புக்குப் பதில் தரும் முறையில் நீளமாக அமையும்போது அதற்கு "நம்பிக்கை உரைக் கூற்று" (confession of faith) என்னும் பெயர் அளிக்கப்படுவதுண்டு. நம்பிக்கை (creed) என்னும் சொல் சில வேளைகளில் "சமயம்", "மதம்", "மறை" (religion) என்று பொருள்படும். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கொள்கைகளும் சில சமயங்களில் "நம்பிக்கை" என்று அழைக்கப்படுவதுண்டு.
சமயங்களில் நம்பிக்கை அறிக்கைகள்
தொகுகிறித்தவ சமயத்தில் பெரும்பான்மையாக வழக்கத்திலுள்ள நம்பிக்கை அறிக்கை நிசேயா நம்பிக்கை அறிக்கை ஆகும். இது கிபி 325இல் நிசேயாவில் கூடிய பொதுச் சங்கத்தால் உருவாக்கப்பட்டது. அது புதிய ஏற்பாட்டு நூல்களாகிய நற்செய்தி நூல்கள், திருமுகங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும், ஓரளவுக்குப் பழைய ஏற்பாட்டு நூல்களின் அடிப்படையிலும் அமைந்தது. ஒரே கடவுள் தந்தை, மகன் (இயேசு கிறிஸ்து), தூய ஆவி என்னும் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் மூவொரு கடவுள் கொள்கை இந்நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ளது. எனவே, ஒருவர் உண்மையிலேயே கிறித்தவ சமயத்தை ஏற்கிறாரா என்றறியும் உரைகல்லாக இந்த நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ள கோட்பாடுகளை அவர் ஏற்கும்போது தெரியலாம்.[2]
மிகப்பெரும்பான்மையான கிறித்தவ சபைப் பிரிவுகள் நிசேயா நம்பிக்கை அறிக்கையைத் தம் அடிப்படைக் கொள்கைத் தொகுப்பாக ஏற்றுக்கொண்டுள்ளன. இருப்பினும், ஒரு சில கிறித்தவப் பிரிவுகள் இந்நம்பிக்கை அறிக்கையை ஏற்பதில்லை.
யூத சமயத்தில் நம்பிக்கை அறிக்கை உளதா என்பது பற்றி சர்ச்சை நிலவுகிறது. சில யூத பிரிவுகளில் அடிப்படையான கொள்கைத் தொகுப்பு இல்லை. இருப்பினும், பிற யூத பிரிவுகள் இணைச் சட்டம் என்னும் பழைய ஏற்பாட்டு நூலில் வருகின்ற
“ | இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர் (இணைச் சட்டம் 6:4) | ” |
என்னும் அறிக்கையைத் தம் நம்பிக்கை அறிக்கையாகக் கொள்கின்றன.
இசுலாமிய நம்பிக்கை அறிக்கை
தொகுஇசுலாமியரின் நம்பிக்கை அறிக்கை கலிமா அல்லது ஷஹாதா (shahada) எனப்படுகிறது. "இறைவன் ஒருவனே. அவனே அல்லாஹ், முஹம்மது அவரது தூதர்" (لا إله إلا الله محمد رسول الله (lā ʾilāha ʾillallāh, Muḥammad rasūlu-llāh) என மனதளவில் ஒவ்வொரு முஸ்லிமும் நம்பவேண்டும். இது இறை நம்பிக்கை (ஈமான் ) என அழைக்கப்படுகிறது. இதுவே இசுலாமின் முதல் மற்றும் மிக முக்கியமான கடமை ஆகும். இந்த நம்பிக்கை கொண்ட ஒருவரே இசுலாமியர் ஆகிறார்.
இசுலாம், தன்னைப் பின்பற்றுபவர்களை கீழ்கண்ட விடயங்களின் மீது நம்பிக்கை வைப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது[3]. இது ஈமான் என்ற அரபுச் சொல்லால் குறிக்கப்படுகின்றது.
ஈமானின் அடிப்படைகள்: ஈமான் எனும் பதம் மொழி ரீதியாக நம்பிக்கை எனும் கருத்தைக் கொண்டுள்ளது. இறை விசுவாசமானது (ஈமான்) இறைவழிபாட்டின் மூலம் அதிகரிக்கும். அவ்வாறே இறைவனுக்கு மாறுசெய்வதன் மூலம் குறைந்துவிடும் என்பதாகும். ஈமானின் அடிப்படைகள் 6 உள்ளன. அவைகளை ஒரு மனிதன் விசுவாசங்கொண்டு அவைகளை மேலும் உறுதிபடுத்தக் கூடியதாக தனது செயல்களை மாற்றிக் கொள்ளும் போது தான் ஈமானின் ஒளி வாழ்க்கையில் பிரகாசிக்கத் தொடங்கும்.
ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஈமான் பற்றிக் கேட்ட கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்துள்ள பதிலில் கீழ்காணும் ஆறு அம்சங்களும் இடம் பெறுகின்றன. அவைகளாவன:
1.அல்லாஹ்வை நம்புவது.
2.அவனுடைய மலக்குகளை (வானவர்களை) நம்புவது.
3.அவனுடைய வேதங்களை நம்புவது.
4.அவனுடைய தூதர்களை நம்புவது.
5.மறுமையை(கியாமத்) நம்புவது.
6.விதியின் படியே நன்மை, தீமை அனைத்தும் எற்படுவதை நம்புவது. [4].
கிறித்தவ சமயத்தின் நம்பிக்கை அறிக்கைகள்
தொகுநம்பிக்கை அறிக்கை என்னும் கருத்துருவகம் முதன்முதலில் தோன்றியது கிறித்தவ சமயத்தின் பின்னணியில்தான். கிறித்தவத்தில் தோன்றிய சில நம்பிக்கை அறிக்கைகளைக் கீழே காணலாம்:
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்
தொகுபுனித பவுல் கிறிஸ்து இறந்து உயிர்பெற்றெழுந்த இருபது ஆண்டுகளுக்குள் (கிபி 54-55) கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் திருச்சபையின் தொடக்க ஆண்டுகளிலேயே கிறித்தவர்கள் தம்மை அடையாளம் காட்ட பயன்படுத்திய சுருக்கமான நம்பிக்கை அறிக்கையைத் தருகின்றார். இந்நம்பிக்கை அறிக்கை கிறிஸ்து இறந்த பத்து ஆண்டுகளுக்குள் எருசலேம் கிறித்தவ சமூகத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதன் வடிவம் இதோ:
“ | நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார் (கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 15:3-7) | ” |
பழைய உரோமை நம்பிக்கை அறிக்கை
தொகுஇந்நம்பிக்கை அறிக்கை உரோமைத் திருச்சபையில் இரண்டாம் நூற்றாண்டில் திருமுழுக்குப் பெற்றோர் அறிக்கையிட்ட கொள்கை உரைக்கூற்றாக, கேள்வி-பதில் வடிவத்தில் அமைந்திருந்தது. இது கிபி 4ஆம் நூற்றாண்டளவில் மூன்று பகுதி கொண்ட அறிக்கையாக உருவெடுத்தது. அது மத்தேயு 28:19 பகுதியின் அடிப்படையில் அமைந்தது.
“ | எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள் | ” |
இந்த நம்பிக்கை அறிக்கை "நம்பிக்கை வரிச்சட்டம்" (rule of faith) என்றும் "நம்பிக்கை ஒப்பீடு" (analogy of faith) என்றும் அழைக்கப்பட்டது. இது முதலில் கிரேக்க மொழியில் உருவாக்கப்பட்டு, பின்னர் அங்கீரா மார்செல்லுஸ் என்பவரால் இலத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டது.
பழைய உரோமை நம்பிக்கை அறிக்கை பின்னர் சிறிது விரித்து எழுதப்பட்டு, திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை என்னும் பெயர் பெற்றது.
நிசேயா நம்பிக்கை அறிக்கை
தொகுகிபி 325இல் நிசேயா நகரில் கூடிய பொதுச்சங்கம் இந்த நம்பிக்கை அறிக்கையை உருவாக்கியது. கிறித்தவர்களின் அடிப்படை நம்பிக்கை இந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, இயேசுவின் இறைத்தன்மையும் அவர் ஒரு படைப்புப்பொருள் அல்ல, மாறாகக் கடவுளுக்கு நிகரானவர் என்னும் உண்மையும் இந்த அறிக்கையில் உள்ளது.[5]
திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை
தொகுஇந்த நம்பிக்கை அறிக்கை கிட்டத்தட்ட எல்லா கிறித்தவ சபைகளாலும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, திருவழிபாட்டின் போது இது அறிக்கையிடப்படும். கத்தோலிக்க திருச்சபையின் ஞாயிறு மற்றும் பெருவிழாத் திருப்பலியின்போது நிசேயா நம்பிக்கை அறிக்கைக்குப் பதிலாக இந்த அறிக்கை பல இடங்களில் அறிக்கையிடப்படுகிறது. இது மறைக்கல்வியிலும் பயன்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபை லூதரன் சபை, ஆங்கிலிக்க சபை, மேற்கு மரபுவழி திருச்சபை, பிரஸ்பிட்டேரியன் சபை, மெதடிஸ்ட் சபை, காங்க்ரகேஷனலிஸ்டு சபை போன்ற பல கிறித்தவ சபைப்பிரிவுகள் இந்த நம்பிக்கை அறிக்கையை ஏற்று தம் வழிபாடுகளில் பயன்படுத்துகின்றன.
கால்செதோனிய நம்பிக்கை அறிக்கை
தொகுகிபி 451இல் கால்செதோனியா நகரில் நடந்த பொதுச்சங்கத்தில் இந்த நம்பிக்கை அறிக்கை உருவானது. இதில் இயேசு கிறிஸ்து கடவுளாகவும் மனிதராகவும் உள்ளார் என்னும் உண்மையும் இரு தன்மைகள் இருப்பினும் ஒரே ஆளாக இருக்கிறார் என்னும் உண்மையும் தெளிவாகச் சேர்க்கப்பட்டன.
அத்தனாசியுஸ் நம்பிக்கை அறிக்கை
தொகுஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் மூவொரு கடவுள் கொள்கை (Trinitarian doctrine), மற்றும் இயேசு கிறிஸ்து கடவுளும் மனிதரும் ஆவார் என்னும் கொள்கை இந்த நம்பிக்கை அறிக்கையில் விளக்கம் பெறுகின்றன. திரித்துவமாக விளங்கும் கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என்னும் மூன்று ஆள்களாக இருப்பினும் அம்மூவரும் தம்முள் சம மாண்பு கொண்டுள்ளனர் என்பது வெளிப்படையா இந்த நம்பிக்கை அறிக்கையில் உள்ளது. உண்மைக் கொள்கையை ஏற்காதோர் "புறம்பாக்கப்பட்டோர்" (anathema) என்னும் கூற்று இந்த நம்பிக்கை அறிக்கையில் உள்ளது. அக்கூற்று மேலே கூறப்பட்ட நிசேயா நம்பிக்கை அறிக்கையிலும் திருத்தூதர் நம்பிக்கை அறிக்கையிலும் காணப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரியுஸ் என்பவர் இயேசு கிறிஸ்து பற்றிக் கூறிய தப்பறைக் கொள்கையை அத்தனாசியுஸ் (கிபி 296/298 - 373) தீவிரமாக எதிர்த்தார். அவரே இந்நம்பிக்கை அறிக்கையை உருவாக்கினார் என்றொரு மரபு உண்டு. ஆனால் அத்தனாசியுஸ் காலத்திற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரே அது உருவானது என வரலாற்றாசிரியர் கூறுகின்றனர்.
திரெந்து நம்பிக்கை அறிக்கை
தொகுஇந்த நம்பிக்கை அறிக்கையில், புரடஸ்தாந்து சீர்திருத்தத்திற்குப் பின் கத்தோலிக்க சபையில் சீர்திருத்தம் கொணரக் கூட்டப்பட்ட திரெந்து பொதுச்சங்கம் (1545-1563) தொகுத்தளித்த கொள்கை அடங்கியுள்ளது.
இறைமக்களின் நம்பிக்கை அறிக்கை
தொகுஇப்பெயரில் திருத்தந்தை ஆறாம் பவுல் 1968, சூன் ஆம் நாள் நவீன காலத்துக்கு உரிய ஒரு நம்பிக்கை அறிக்கையை வெளியிட்டார். உரோமையில் கிறித்தவ சமயம் பரவிட துணைபுரிந்த புனித பேதுரு மற்றும் புனித பவுல் ஆகியோர் கிறிஸ்துவின் பொருட்டு மறைச்சாட்சிகளாக கிபி 68இல் உயிர்துறந்தனர் என்னும் மரபின்படி 1968ஆம் ஆண்டு அவர்களின் வீர மரணத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டு நினைவு கொண்டாடப்பட்டது. அக்கொண்டாட்டத்தின் இறுதியில் திருத்தந்தை ஆறாம் பவுல் "இறைமக்களின் நம்பிக்கை அறிக்கையை" வெளியிட்டார். அதை அறிமுகப்படுத்தும்போது, "இந்த நம்பிக்கை அறிக்கை நிசேயா நம்பிக்கை அறிக்கையைச் சிறிது விரித்துக் கூறுவதோடு, நவீன காலத்தின் தேவைக்கேற்ப சில புதிய கருத்துகளும் அதில் அடங்கியுள்ளன" என்று கூறினார் [6].
ஆதாரங்கள்
தொகு- ↑ நம்பிக்கை அறிக்கை
- ↑ Johnson, Phillip R. "The Nicene Creed." பரணிடப்பட்டது 2009-03-14 at the வந்தவழி இயந்திரம் 15 ஆகத்து 2011 பார்க்கப்பட்டது
- ↑ குரான் 4:136
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-17. பார்க்கப்பட்ட நாள் 2015-04-14.
- ↑ Kiefer, James E. "The Nicene Creed." பரணிடப்பட்டது 2009-03-14 at the வந்தவழி இயந்திரம் 15 ஆகத்து 2011 பார்க்கப்பட்டது
- ↑ இறைமக்களின் நம்பிக்கை அறிக்கை