திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை

திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை அல்லது அப்போஸ்தலர்களின் நம்பிக்கை அறிக்கை (Apostles' Creed = இலத்தீன்: Symbolum Apostolorum அல்லது Symbolum Apostolicum) என்பது கிறித்தவ சமயத்தின் பண்டைக்காலக் கொள்கைத் தொகுப்புகளுள் ஒன்றாகும்[1].

இந்த நம்பிக்கைத் தொகுப்பு அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கை அல்லது அப்போஸ்தலர்களின் விசுவாசப் பிரமாணம் என்றும் பெயர்கொண்டுள்ளது. பல கிறித்தவ சபைகள் இந்த நம்பிக்கை அறிக்கையைத் தம் வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும், மறைக்கல்விப் பாடங்களிலும் பயன்படுத்துகின்றன. உரோமன் கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க சபை, லூதரன் சபை, மேற்கு மரபுவழித் திருச்சபை, மெதடிஸ்டு சபை, மூப்பர் சபை (Presbyterianism), மக்கள் சபை (Congregational Church) போன்றவை இந்த நம்பிக்கை அறிக்கையை ஏற்றுக்கொள்கின்றன.

திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கையின் அடித்தளம் தொகு

இந்த நம்பிக்கை அறிக்கை கிறித்தவர்கள் ஏற்கின்ற திருவிவிலியத்தின் போதனைச் சுருக்கமாக உள்ளது. குறிப்பாக, புதிய ஏற்பாட்டின் நூல்களாகிய நற்செய்தி நூல்கள், திருமுகங்கள் என்பவற்றையும், குறைந்த அளவுக்கு பழைய ஏற்பாட்டு நூல்களையும் அடித்தளமாகக் கொண்டுள்ளது.

இந்த நம்பிக்கை அறிக்கை அதற்கு முற்பட்ட "உரோமை நம்பிக்கை அறிக்கை" என்னும் தொகுப்பைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது. கிறித்தவ சமய வரலாற்றின் பிற்காலத்தில் (4ஆம் நூற்றாண்டு) இயேசு கிறித்துவின் மனித இயல்பு, இறை இயல்பு போன்றவை பற்றிய விவாதங்களின் தடயங்கள் இந்தப் பண்டைய நம்பிக்கை அறிக்கையில் இல்லை. இருப்பினும், கிறித்தவ சமயம் கடவுள் பற்றி எடுத்துக்கூறுகின்ற "மூவொரு கடவுள் கொள்கை" (Trinity) இந்த நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ளது.

பெயர்க் காரணம் தொகு

இந்த நம்பிக்கை அறிக்கை "திருத்தூதர்களின்" ("அப்போஸ்தலர்களின்") நம்பிக்கை அறிக்கை என்று அழைக்கப்படுவதற்கு ஐந்தாம் நூற்றாண்டில் எழுந்த மரபுசார்ந்த ஒரு விளக்கம் உள்ளது. அதாவது, தூய ஆவியின் ஏவுதலால் இயேசு கிறித்துவின் பன்னிரு திருத்தூதர்களும் ஆளுக்கு ஒரு பகுதியாக இந்த நம்பிக்கை தொகுப்பின் பன்னிரு பகுதிகளையும் அறிக்கையிட்டதாக கூறப்படுகிறது.

கி.பி. 390இல் புனித அம்புரோசு என்பவர் இந்தக் கொள்கைத் தொகுப்பை "திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை" என்னும் பெயரால் அழைக்கின்றார்.

வரலாறு தொகு

திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை என்னும் பெயரால் இன்று அழைக்கப்படுகின்ற இக்கொள்கைத் தொகுப்பு அதன் முழுவடிவத்தில் கி.பி. 710-714இல் புனித பிர்மீனியுஸ் எழுதிய ஒரு நூலில் தோன்றியது[2]. அதற்கு முன்னரே, கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே இரனேயுஸ், தெர்த்தூல்லியன், நோவாசியன், மார்செல்லுஸ், ரூஃபீனுஸ், அம்புரோசு, அகுஸ்தீன் போன்ற கிறித்த அறிஞர்களின் நூல்களில் திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கையின் தனித்தனிப் பகுதிகள் உள்ளன.

திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கையின் இலத்தீன் மூலம் தொகு

உரோமன் கத்தோலிக்க திருச்சபையும் பிற கிறித்தவ சபைகளும் தம் வழிபாட்டில் பயன்படுத்துகின்ற இலத்தீன் மற்றும் ஆங்கில பாடங்களை இங்கே காண்க[3]:

நிசேயா நம்பிக்கை அறிக்கை தொகு

கத்தோலிக்க திருச்சபையும் பிற கிறித்தவ சபைகள் பலவும் ஏற்றுக்கொண்டு, தம் வழிபாட்டில் பயன்படுத்துகின்ற மற்றொரு பண்டைய கொள்கைத் தொகுப்பு நிசேயா நம்பிக்கை அறிக்கை (Nicene Creed) ஆகும்.

இது கி.பி. 325இல் நிசேயா நகரில் கூடிய பொதுச்சங்கத்தாலும், பின்னர் 381இல் காண்ஸ்டாண்டிநோபுள் நகரில் கூடிய பொதுச்சங்கத்தாலும் அறிக்கையிடப்பட்டதால் இப்பெயர் பெற்றது.

திருத்தூதர் நம்பிக்கை அறிக்கையின் பழைய தமிழ்ப் பெயர்ப்பு தொகு

கத்தோலிக்க திருச்சபையின் வழிபாட்டு நூலாகிய "திருப்பலிப் புத்தகம்" தரும் பாடம் இதோ:

1. பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கின்றேன்.
2. அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன்.
3. இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார்.
4. போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
5. பாதளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
6. பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
7. அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.
8. பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன்.
9. பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்; அர்ச்சியசிஸ்டவர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கின்றேன்.
10. பாவப் பொறுத்தலை விசுவசிக்கின்றேன்.
11. சரீர உத்தானத்தை விசுவசிக்கின்றேன்.
12. நித்திய சீவியத்தை விசுவசிக்கின்றேன்.
- ஆமென்.

அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கை: புதிய தமிழ்ப் பெயர்ப்பு தொகு

மேலே தரப்பட்ட தமிழ்ப் பெயர்ப்பில் வடமொழிச் சொற்கள் அதிகம் பயின்றுவருவதைத் தவிர்த்து, தூய தமிழில் கீழ்வரும் பெயர்ப்பு தமிழக ஆயர் குழுவால் செய்யப்பட்டது. அந்த "நம்பிக்கை அறிக்கை" பாடம் இதோ:

1. விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த / எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன்.
2. அவருடைய ஒரே மகனாகிய / நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறேன்.
3. இவர் தூய ஆவியாரால் கருவாகி / தூய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.
4. பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு / சிலுவையில் அறையப்பட்டு / இறந்து அடக்கம் செய்யப்பட்டார்.
5. பாதாளத்தில் இறங்கி / மூன்றாம் நாள் / இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
6. விண்ணகம் சென்று / எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
7. அவ்விடத்திலிருந்து / வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் / தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்.
8. தூய ஆவியாரை நம்புகிறேன்.
9. தூய கத்தோலிக்கத் திருச்சபையையும் / புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன்.
10. பாவ மன்னிப்பை நம்புகிறேன்.
11. உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்.
12. நிலை வாழ்வை நம்புகிறேன்.
- ஆமென்.

பயன்பாடு தொகு

கத்தோலிக்க திருச்சபை மரபில் பொதுவாக நிசேயா நம்பிக்கை அறிக்கை ஞாயிறு மற்றும் பெருவிழாத் திருப்பலியின்போது அறிக்கையிடப்பட்டது. தற்போது திருத்தூதர் நம்பிக்கை அறிக்கையையும் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது.

கேள்வி-பதில் வடிவத்தில் நம்பிக்கை அறிக்கை தொகு

கத்தோலிக்க திருச்சபை திருமுழுக்கு வழங்கும்போது திருமுழுக்குப் பெறுபவர் (அல்லது குழந்தையாக இருந்தால் அதன் பெற்றோர்/ஞானப்பெற்றோர் குழந்தையின் பெயரில்) தாம் கிறித்தவக் கொள்கைகளை ஏற்பதாக வாக்களிக்கும் விதத்தில் கேள்வி-பதில் வடிவில் அமைந்த நம்பிக்கை அறிக்கையும் உள்ளது. இதோ:

  • குரு: விண்ணையும் மண்ணையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை நம்புகிறீர்களா?
  • பதில்: ஆம்.
  • குரு: அவருடைய ஒரே மகனும், கன்னிமரியிடமிருந்து பிறந்து, பாடுபட்டு, அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரில் நின்று உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவருமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறீர்களா?
  • பதில்: ஆம்.
  • குரு: தூய ஆவியாரையும், தூய கத்தோலிக்கத் திருச்சபையையும், புனிதர்களின் சமூக உறவையும், பாவ மன்னிப்பையும் உடலின் உயிர்ப்பையும், முடிவில்லா வாழ்வையும் நம்புகிறீர்களா?
  • பதில்: ஆம்.
  • குரு: இதுவே நமது நம்பிக்கை; இதுவே திருச்சபையின் நம்பிக்கை. இதை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அறிக்கையிடுவதில் பெருமை கொள்கிறோம். ஆமென்.

ஆதாரங்கள் தொகு