பெருமுக்கல்

பெருமுக்கல் மலையின் தோற்றம்


பெருமுக்கல்

தொகு

பெருமுக்கல் என்பது தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓர் சிற்றூர் ஆகும். திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இங்குள்ள குன்று வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். இயற்கை வளமும் அழகியல் சூழலும் நிறைந்த இவ்வூரின் முக்கிய தொழில் விவசாயம்.

அமைவிடம்

தொகு

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் பேருந்துச் சாலையில் இக்குன்று அமைந்துள்ளது. புதுவையிலிருந்து கிளியனூர் வழியாகவும் இவ்விடத்திற்குச் செல்லலாம்.

பெயர்க்காரணம்

தொகு

இராமனால் காட்டுக்கு அனுப்பப் பெற்ற சீதை இந்தக் குன்றில் இருக்கும் குகையில் தங்கியிருந்ததாகவும், இங்குதான் புதல்வர்களான லவனையும் குசனையும் பெற்றாள் என்றும் செவிவழியான கதை வழங்கப்படுகிறது. சீதை மகப்பேறு வலியால் முக்கியதால் இது பெருமுக்கல் என்று வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

ஆனால், ஆய்வாளர்கள் வேறு காரணம் கூறுகின்றனர். மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ள மாங்குளம் கற்படுக்கைகள் கணி நந்தாசிரியன் எனும் ஆசீவகத் துறவிக்கு அமைக்கப்பட்டனவாகும். அக்கற்படுக்கைகளை அமைத்தவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனும் அவன் உறவினரும் ஆவர். அக்கல்வெட்டில் உள்ள நந்தாசிரியன் எனும் பெயரே நந்தவாச்சா எனப் பாலி மொழியில் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியன் எனும் சொல் ஆசான் எனவும் வழங்கும். தமிழ் ஆசான் - பிறமொழிகளில் ஆச்சாரியார் எனவும் ஆச்சான் எனவும் திரியும். பெரியவாச்சான் எனும் வைணவப் பெரியாரின் பெயரே அதற்குச் சான்றாகும். பெரிய+ஆசான் > பெரியவாச்சான் என்றானதைப் போன்றே நந்த+ஆசான் > நந்தவாசான் > நந்தவாச்சா என்று மருவியுள்ளதும் புலனாயிற்று. ஆசீவக அறிவியலான வானியலில் இவர் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்ததால் இவர் கணி நந்தாசிரியன் என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளதை மாங்குளம் கல்வெட்டால் அறிய முடிந்தது. இக் கணிநந்தாசிரியனே '''முக்கல் ஆசான் நல்வெள்ளையார்''' எனும் நற்றிணைப் புலவராவார். திண்டிவனம் அருகே உள்ள பெருமுக்கல் என்ற ஊரில் உள்ள குன்றில் இவர் ‘முக்தி’ அடைந்ததால் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் என அழைக்கப்பட்டுள்ளார்.. இன்றைய நிலையில் அங்குள்ள கோயில் முத்தியாலீசுவரர் கோயில் என்று அழைக்கப்படுவதுடன், மலையின் அடிவாரத்தில் ஐயனார் கோயில் இருப்பதும் பழைய வரலாற்றை உறுதி செய்யக் காணலாம் எனப் பெருமுக்கலுக்கான பெயர்க்காரணம் கூறப்படுகிறது.

பாறைக் கீறல் எழுத்துகள்

தொகு

இங்குள்ள பாறைக்குகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பான பாறைக் கீறல் எழுத்துகள் காணப்பெறுகின்றன. அவை உருவங்களாக இல்லாமல் குறியீடுகளாக அமைந்துள்ளன. இவற்றை ஆசிவக சமயத்தின் குறியீடுகள் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். பறவையின் நகத்தினைக் கொண்டு ஒரு இளக்கமான பொருளில் கீறல் ஏற்படுத்தினால் எவ்வாறு அந்த வடு அமையுமோ அதனை ஒத்த வடிவம் கொண்ட குறியீடு இது. ஏர்க்கலப்பை கொண்டு நிலத்தில் உழும் போது ஏற்படும் சால் உழவின் வடிவையும் ஒத்தது. இருபுறப் பட்டைகளிலும் வழவழப்பும் ஆழ்ந்த கூர்முனைப் பள்ளம் கீறல் தெளிவாகவும் அமைந்திருக்கும். ஆசீவகத் துறவு நிலைப் புகும் மாணவர்கள் உயிர்நூல் அறியும் முகத்தான் குறிஞ்சி, முல்லை, மருதம் எனும் மூவகை நிலங்களிலும் பயணிக்கும்போது அவர்தம் ஆய்வுக்காக எவ்விடம் செம்மையான நடுவமாக அமையுமோ, அங்குள்ள கற்பாறைகளில் இவ்வடிவம் செதுக்கப்பட்டது. சிற்சில இடங்களில் புள்நகக் கீற்று இரண்டு அல்லது மூன்றாகவும், முக்கோணம் சேர்த்தும் வரையப்படுவதுண்டு. இத்தகைய கற்பாறைகளிலிருந்து சேய்மைத்தான உயிரியக்கங்களையும் ஆயும் ஏந்து இருந்ததாலே இவ்விடங்கள் இக்குறியீட்டால் அடையாளப்படுத்தப்பட்டன.1

சோழர் காலக் கோயில்கள்

தொகு

பெருமுக்கலில் குன்றின்மீது ஒரு கோயிலும் அடிவாரத்தில் மற்றொரு கோயிலும் உள்ளது. குன்றின்மீது உள்ள கோயில் “முதலில் செங்கல்கோயிலாக இருந்து, விக்கிரம சோழன் காலத்தில் (கி.பி. 1118-35) கற்கோயிலாக மாற்றப்பட்டது. இக்கோயிலின் இறைவன் பெயர் தமிழில் திருவான்மிகை ஈஸ்வரமுடையார் என்றும், பெருமுக்கல் உடையார் என்றும், வடமொழியில் "முக்கயாசலேஸ்வரர்' என்றும் வழங்கப்படுகிறது. பாறைகளில் 60-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழ, விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள், இராஜகோபுரம் மகாமண்டபம் போன்ற கட்டுமான பணிகள் மற்றும் கோயிலுக்கு வழங்கிய நன்கொடைகளைக் பற்றிய குறிப்புகள் கல்வெட்டு மூலம் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீபாலசித்தர்

தொகு

மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் ஆதிகுருவாகிய பாலசித்தர் இந்த மலையில் இருந்துதான் தவம் செய்தார் என்று மயூராசல புராணம் குறிப்பிடுகிறது. சித்தர்களையும் முனிவர்களையும் ஒருங்கிணைத்து, வீரசைவ நெறியையும் சித்தத் தத்துவக் கருத்துகளையும் உபதேசம் செய்தார் எனவும் அது சுட்டுகிறது.

பாலவயதுஆக வலைவாரிதியின் மேவிவரு பான்மையும் அலாது அளவுஇலாச்

சீலம்உறு சித்துபுரி செய்கையினுமே பாலசித்தன்என நாமம் நிறுவி

ஆலவிடமே அமுதமாய் அயலுவான்இவனலாது இலைஎனா நினைவொடும்

சாலநலமேவு துதிகூறிட அவர்க்குஇனிய தண்ணருள் சுரந்துஉறையும்நாள்
'


அத்தன்அருள் பெற்றவர்கள் உற்றபெரு முக்கன்மலைஆதிய வரைக்கண் அணுகிச்

சித்தர்கடமக்க அரிய அற்புதம்உறப் புநித சித்திநிலை முற்றும் உதவித்
தொத்தலர் வனத்து அமரும் நற்றவர்களுக்கும் ஒருதூய சிவபோத நல்கி

இத்தகைமை யோடுஇனிய சித்தன்உலவிப் பழைமை எய்தும் இடம் உற்றனரே

சான்றாதாரங்கள்

தொகு

1. (முனைவர் க.நெடுஞ்செழியன்)http://agathiyarthavamaiyam.com/index.php?option=com_content&view=article&id=72:2012-03-27-11-34-19&catid=78&Itemid=479 பரணிடப்பட்டது 2021-05-18 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமுக்கல்&oldid=3691442" இலிருந்து மீள்விக்கப்பட்டது