பெரும் சமயப்பிளவு

பெரும் சமயப்பிளவு (Great Schism) என்பது உரோமைப் பேரரசின் ஏற்கப்பட்ட திருச்சபையாக இருந்த கிறித்தவ சமூகம் கிரேக்க மொழி வழங்கிய கிழக்கு சபை என்றும் இலத்தீன் மொழி வழங்கிய மேற்கு சபை என்றும் இரு கிளைகளாக அறுதியாகப் பிரிந்துபோன நிகழ்வைக் குறிக்கின்றது[1]. இது சில வேளைகளில் "1054ஆம் ஆண்டு கீழை-மேலைப் பிளவு" (East–West Schism of 1054) என்றும் அறியப்படுகிறது. இவ்வாறு பிரிந்த இரு கிளைகளும் முறையே "கிழக்கு மரபுவழி திருச்சபை" (Eastern Orthodox Church) என்றும் "உரோமன் கத்தோலிக்க திருச்சபை" (Roman Catholic Church) என்றும் பெயர் பெற்றன.

உரோமை வழிபாட்டுமுறையை (Roman Catholic Rite) பின்பற்றாமல் கீழைத் திருச்சபை வழிபாட்டுமுறைகளை (Eastern Catholic Rites) பின்பற்றும் பல திருச்சபைகளும் கத்தோலிக்க திருச்சபையின் உள்ளடங்கும். இவை உரோமை ஆயராகிய போப்பாண்டவர் என்னும் திருத்தந்தையை அனைத்துலத் திருச்சபையின்மேல் முழு அதிகாரம் கொண்டவராக ஏற்கும் கிறித்தவ சபைகள் ஆகும்.

பிளவின் வரலாற்றுப் பின்னணி

தொகு

இப்பெரும் பிளவு ஏற்படக் காரணமாக அமைந்த வரலாற்றுப் பின்னணி பன்முகத்தது. உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியில் இருந்த சபைக்கும் கிழக்குப் பகுதியில் இருந்த சபைக்கும் இடையே ஆட்சி அதிகாரம், இறையியல் கொள்கை தொடர்பான வேறுபாடுகள் தோன்றியதால் மனக்கசப்பு நிலவியது. கருத்து வேறுபாடுகள் முக்கியமாக நான்கு பொருள்கள் பற்றி அமைந்தன. அவை:

  • கிறித்தவ சமயக் கொள்கைப்படி, கடவுள் ஒருவராயினும் தந்தை, மகன், தூய ஆவி என்று மூன்று "ஆள்களாக" இருக்கின்றார். மகனும் (இயேசு கிறிஸ்து), தூய ஆவியும் தந்தையிடமிருந்து "புறப்படுகின்றனர்". தூய ஆவி தந்தையிடமிருந்து புறப்படுகிறார் என்று ஒரு புரிதலும், தூய ஆவி தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படுகிறார் என்றொரு புரிதலும் நிலவின. இவற்றுள் முதல் புரிதல் கிரேக்க சபையால் ஏற்கப்பட, இரண்டாம் புரிதல் இலத்தீன் சபையால் ஏற்கப்பட்டது. இந்த விவாதம் "filioque controversy" என்று அழைக்கப்படுகிறது[2]. "Filioque" என்னும் இலத்தீன் சொல் "மகனிடமிருந்தும்" என்னும் பொருளுடையது.
  • கிறித்தவ சபைகள் கொண்டாடுகின்ற நற்கருணை வழிபாட்டின்போது பயன்படுத்துகின்ற கோதுமை அப்பம் புளித்த மாவால் செய்யப்படவேண்டுமா புளியாத மாவால் செய்யப்படவேண்டுமா என்பது மற்றொரு பிரச்சினை. இது தொடர்பாக மேற்கு மற்றும் கிழக்குப் பகுதி சபைகளுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவியது.
  • உரோமை ஆயராகிய போப்பாண்டவர் (திருத்தந்தை) உலகளாவிய திருச்சபை மீது ஆட்சி அதிகாரம் கொண்டுள்ளாரா என்பது பற்றிய கருத்து வேறுபாடு.
  • உரோமை, காண்ஸ்டாண்டிநோபுள், எருசலேம், அந்தியோக்கியா, அலக்சாந்திரியா என்னும் பண்டைக் கிறித்தவ "ஐம்பெரும் நகர் ஆளுகை" (Pentarchy) [3] நிலவிய பின்னணியில், உரோமைக்கு முதலிடம் அளிக்கப்பட்டது. ஆனால், காண்ஸ்டாண்டிநோபுள் எந்த இடத்தை வகிக்கிறது என்பது சர்ச்சை ஆயிற்று.

சபை நீக்கம்

தொகு

கி.பி. 11ஆம் நூற்றாண்டில் இலத்தீன் மொழி நிலவிய மேலைத் திருச்சபைப் பகுதியில் உரோமை ஆயரான ஒன்பதாம் லியோ திருத்தந்தையாகச் செயல்பட்டார். கிரேக்க மொழி நிலவிய கீழைத் திருச்சபைப் பகுதியில் கான்ஸ்டாண்டிநோபுள் மறைமுதுவராக மிக்கேல் செருலாரியுஸ் ஆட்சிசெய்தார். இலத்தீன் பகுதியில் கிரேக்க மொழியையும், கிரேக்கப் பகுதியில் இலத்தீன் மொழியையும் பயன்படுத்துவதை முறையே திருத்தந்தை லியோவும் மறைமுதுவர் செருலாரியுசும் ஆதரிக்கவில்லை.

எல்லாத் திருச்சபைகளுக்கும் தாயும் தலைமையுமாக உரோமைத் திருச்சபை உள்ளது என்பதை செருலாரியுஸ் ஏற்கவேண்டும் என்றும், அப்படி ஏற்காவிட்டால் அவருக்கு மறைமுதுவர் என்னும் பதவி மறுக்கப்படும் என்றும் கூறி, திருத்தந்தை லியோ கொடுத்தனுப்பிய செய்தியை எடுத்துக்கொண்டு அவருடைய தூதுவர் கர்தினால் ஹம்பெர்ட் காண்ஸ்டாண்டிநோபுள் வந்தார். செருலாரியுஸ் திருத்தந்தையின் கோரிக்கைக்கு இணங்கவில்லை. எனவே, ஹம்பெர்ட் செருலாரியுசைச் சபைநீக்கம் செய்தார். செருலாரியுசோ ஹம்பர்ட்டையும் அவரோடு தூதுவந்த பிறரையும் சபைநீக்கம் செய்தார்.

சபைநீக்கம் செல்லுமா என்னும் சர்ச்சை

தொகு

திருத்தந்தையின் தூதுவர் ஹம்பெர்ட் செருலாரியுசைச் சபைநீக்கம் செய்தது செல்லுமா என்றொரு கேள்வி எழுப்பப்படுகிறது. ஹம்பெர்ட் சபைநீக்க அறிக்கையை செருலாரியுசிடம் கொடுக்குமுன்னரே திருத்தந்தை ஒன்பதாம் லியோ இறந்துபோயிருந்தார். மேலும், சபை நீக்கம் செருலாரியுஸ் என்னும் தனி ஆளுக்கு மட்டுமே பொருத்தமானது.

இருப்பினும், திருச்சபையில் ஏற்பட்ட பெரும்பிளவுக்கு அடிப்படைக் காரணங்களாகக் கொள்கை, இறையியல், புவியியல், மொழி, அரசியல் போன்றவை இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. பிளவுக்கு வழிவகுத்தது யார் என்பது குறித்து இரு சபைகளும் ஒன்றையொன்று குற்றம் சாட்டுகின்றன. பிளவுக்குப் பின் நிகழ்ந்த சிலுவைப் போர்கள், 1182இல் இலத்தீன் சபையினர் படுகொலைசெய்யப்பட்டது, 1204இல் காண்ஸ்டாண்டிநோபுள் பிடிக்கப்பட்டு சூறையாடப்பட்டது, அங்கு இலத்தீன் மொழி மறைமுதுவர்கள் நியமிக்கப்பட்டது, அங்கிருந்த நூலகம் அழிக்கப்பட்டு திருப்பண்டங்கள் எடுத்துச்செல்லப்பட்டது போன்ற துயர நிகழ்வுகள் இரு சபையினருக்கும் இடையே மனக்கசப்பை வளர்த்துவந்துள்ளன.

இரு சபைகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1274இல் நிகழ்ந்த இரண்டாம் லியோன் சங்கமும், 1439இல் நிகழ்ந்த புளோரன்சு சங்கமும் இரு சபைகளையும் சிறிது காலத்திற்கு இணைத்துவைத்தன. ஆயினும் அந்த இணைப்பு நீடிக்கவில்லை. 15ஆம் நூற்றாண்டில் காண்ஸ்டாண்டிநோபுள் ஓட்டோமான் துருக்கிய பேரரசின் கீழ் வந்தது. அதைத் தொடர்ந்து 1484இல் நிகழ்ந்த காண்ஸ்டாண்டிநோபுள் கூட்டம் (Synod of Constantinople) சபை இணைப்பைப் புறக்கணித்தது.

அண்மைய ஒன்றிப்பு முயற்சிகள்

தொகு

1962-1965இல் நிகழ்ந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் பிளவுபட்ட கிறித்தவ சபைகளுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க தூண்டுதல் அளித்தது.

பல நூற்றாண்டு பிளவுக்குப் பின், 1964ஆம் ஆண்டில், உரோமை ஆயராகிய ஆறாம் பவுல் என்னும் திருத்தந்தை காண்ஸ்டாண்டிநோபுள் மறைமுதுவராகிய முதலாம் அத்தனாகோராஸ் என்பவரை எருசலேமில் சந்தித்து உரையாடினார். 1439க்குப் பின் உரோமைத் திருத்தந்தையும் காண்ஸ்டாண்டிநோபுள் மறைமுதுவரும் சந்தித்துக்கொண்டது இதுவே முதல்முறை.

1965இல் உரோமையில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின்போது சபைத் தலைவர்கள் இருவரும் 1054இல் வழங்கப்பட்ட சபைநீக்கங்களை விலக்கிக்கொண்டார்கள். இது ஆழ்ந்ததொரு நல்லெண்ண அடையாளமாக அமைந்தது.

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் மறைமுதுவர் முதலாம் பர்த்தொலொமேயு என்பவரைச் சந்தித்து உரையாடியிருக்கின்றார். அதுபோலவே, இன்றைய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டும் கிறித்தவ ஒன்றிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையே தொடர்புகள் தொடர்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் சூன் 29ஆம் நாள் புனித பேதுரு மற்றும் புனித பவுல் பெருவிழா உரோமையில் நிகழும்போது கிரேக்க சபைத் தூதுக்குழு அதில் கலந்துகொள்கிறது. அதுபோல, ஒவ்வொரு ஆண்டும் புனித அந்திரேயா பெருவிழா காண்ஸ்டாண்டிநோபுளில் நிகழும்போது இலத்தீன் சபைத் தூதுக்குழு அதில் பங்கேற்கிறது. புனித பேதுருவும் புனித பவுலும் உரோமைச் சபையின் நிறுவுநர்களாகவும், புனித அந்திரேயா காண்ஸ்டாண்டிநோபுள் சபை நிறுவுநராகவும் கருதப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அருளடையாளங்கள் பற்றிய சில ஒழுங்குமுறைகள்

தொகு

கிறித்தவ சமய நம்பிக்கையின்படி, அருளடையாளங்கள் (sacraments)[4] கடவுளின் அருளை மனிதர் பெற்றுக்கொள்ள வழிகளாக அமைகின்றன. கத்தோலிக்க திருச்சபை ஏழு அருளடையாளங்களை ஏற்கிறது. அவை: திருமுழுக்கு, உறுதிப்பூசுதல், நற்கருணை, ஒப்புரவு, நோயில் பூசுதல், குருத்துவம், திருமணம். இந்த அருளடையாளங்களைக் கொண்டாடுவதில் கத்தோலிக்க திருச்சபையும் மரபுவழித் திருச்சபையும் வேறுபட்டாலும், ஒன்றிப்பை உருவாக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.

கத்தோலிக்க திருச்சபையில் திருமுழுக்குப் பெற்ற ஒருவர் மரபுவழித் திருச்சபையைத் தழுவ விரும்பினால் அவருக்கு மீண்டும் ஒருமுறை திருமுழுக்கு கொடுக்கவேண்டியதில்லை என்பதே பெரும்பான்மையான மரபுவழித் திருச்சபைகளின் நிலைப்பாடாக உள்ளது.

கத்தோலிக்கர் ஒருவருக்கும் மரபுவழித் திருச்சபையைச் சார்ந்த ஒருவருக்கும் திருமணம் நிகழ்வதைப் பெரும்பான்மையான மரபுவழித் திருச்சபைகள் ஆதரிப்பதில்லை. ஆயினும் ஒருசில மரபுவழித் திருச்சபைகள் இத்தகைய கலப்புத் திருமணத்தை ஏற்கின்றன.

கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வமான "திருச்சபைச் சட்டத்தொகுப்பு" (Code of Canon Law) "கத்தோலிக்கப் பணியாளர்கள் (ஆயர், குரு, திருத்தொண்டர்) அருளடையாளங்களைக் கத்தோலிக்க கிறித்தவ விசுவாசிகளுக்கு மட்டுமே சட்டமுறைப்படி வழங்கலாம்" என்று பொதுச் சட்டம் வகுத்துள்ளது[5].

இருப்பினும், கிறித்தவ சபைகளுக்கிடையே ஒன்றிப்பை வளர்க்கும் நோக்கத்தில் கத்தோலிக்க சபை, கீழைத் திருச்சபையினருக்கு அருளடையாளங்கள் ஒருசில நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்குவதற்கு வழி செய்துள்ளது. அது தொடர்பாக கத்தோலிக்க திருச்சபை அளித்துள்ள சில சட்டங்கள் இதோ:

கத்தோலிக்கர் தகுதி வாய்ந்த அதிகாரியின் இசைவுடன் கீழைத் திருச்சபை உறுப்பினரை முறையாகத் திருமணம் செய்ய முடியும்[8].

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்_சமயப்பிளவு&oldid=4041149" இலிருந்து மீள்விக்கப்பட்டது