பெர்த்தா பென்சு

(பெர்த்தா பென்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெர்த்தா பென்சு (பெர்த்தா பென்ஸ், Bertha Benz) செருமனியில் உள்ள பார்சீமில் 1849-ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் நாள் பிறந்தார். இவர் புத்தாக்குனரான கார்ல் பென்சை 1872 சூலை 20-இல் மணந்தார். 1944-ஆம் ஆண்டு மே 5-ஆம் நாள் லேடன்பெர்கு என்னும் ஊரில் மறைந்தார். இவர் 1871-ஆம் ஆண்டு கார்ல் பென்சின் தொழிலில் முதலீடு செய்தார். இது பென்சின் முதல் காப்புரிமை பெற்ற தானுந்தை உருவாக்க ஏதுவாக இருந்தது. மேலும் 1888-இல் இவர் ஒரு தானுந்தை நீண்ட தொலைவு ஓட்டிய முதல் மனிதராக விளங்கினார்.[1] இவரது இச்செயலினால் இவர்களது பென்சு தானுந்து உலகளாவிய கவனம் பெற்றது.

பெர்த்தா ரிங்கர் 1871-இல் இவர் கார்ல் பென்சின் கூட்டாளியானார்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் திருமணம் தொகு

பெர்த்தா பென்சின் இயற்பெயர் பெர்த்தா ரிங்கர். இவர் 1849 ஆம் ஆண்டு செருமனியில் உள்ள போர்சைம் எனும் ஊரில் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். ஜுலை 20, 1872 இல் கார்ல் பென்சை மணந்தார். பெர்த்தா, பென்ஸ் உடனான திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது வரதட்சணையின் ஒரு பகுதியினைக் காரலின் நட்டத்தில் சென்று கொண்டிருந்த இரும்பு கட்டுமான நிறுவனத்தில் முதலீடு செய்தார்.[2] திருமணமாகாத பெண் என்பதால் பெர்த்தாவால் இவ்வாறு முதலீடு செய்ய முடிந்தது.[3] அவர் பென்ஸை மணந்தப் பிறகு ஜெர்மன் சட்டத்தின்படி ஒரு முதலீட்டாளராக செயல்படும் அதிகாரத்தை பெர்த்தா இழந்தார். கார்ல் புதிய உற்பத்தி நிறுவனமான பென்ஸ் & சீயை உருவாக்கும்போதும் தொடர்ந்து பெர்த்தாவின் வரதட்சணையை முதலீட்டு நிதியாகப் பயன்படுத்தினார். 1885 டிசம்பரில் கார்ல் தனது முதல் குதிரை இல்லாத வண்டியைத் தயாரித்து முடித்தார். பெர்த்தா அவ்வண்டியின் கள சோதனையாளராக பணியாற்றினார். கம்பி காப்பு மற்றும் மர பிரேக்குகள் வேலை செய்யாதபோது பயன்படுத்த தோல் பிரேக்குகளை கண்டுபிடிப்பதன் மூலமும் மோட்டார்வேகனின் வடிவமைப்பிலும் பெர்த்தா பங்களித்தார். மேலும், எரிபொருள் வரி வடிவமைப்பு போன்ற பல முக்கிய அம்சங்களை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் கண்டறிந்தார், கார்ல் அவற்றை பின்னர் மேம்படுத்தினார். இயந்திரத்தின் வடிவமைப்பில் பங்களித்தது மட்டுமல்லாது மோட்டார் வேகனின் வளர்ச்சிக்கு நிதியுதவியும் செய்தார். நவீன சட்டத்திட்டங்களின் கீழ் பெர்த்தாவே இவ்வண்டியின் காப்புரிமைகளை வைத்திருப்பார். ஆனால் திருமணமான பெண்ணாக காப்புரிமையில் ஒரு கண்டுபிடிப்பாளராக பெயரிட அக்கால சட்டங்கள் பெர்த்தாவை அனுமதிக்கவில்லை.[4]

இவருக்கும் கார்ல் பென்சுக்கும் ஐந்து குழந்தைகள் இருந்தனர். யூகன், ரிச்சர்டு, கிளாரா, தில்டே, எல்லென் ஆகியோரே இவர்களது மக்கள்.

முதல் காப்புரிமை பெற்ற தானுந்து தொகு

1886 ஆம் ஆண்டில், பென்ஸ் காப்புரிமையுடைய தானியங்கி மோட்டார் வாகனத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஒரு தசாப்தத்திற்குள் 25 தானியங்கி மோட்டார் வாகனங்களை உருவாக்கினார். அதிநவீன சைக்கிள் கட்டுமானங்களுடன் மாடல் I உருவாக்கப்பட்டிருந்தது. இதுவே அசல் காப்புரிமை பெற்ற மற்றும் உலகின் முதல் தானியங்கி மோட்டார் வாகனம் ஆகும்.

மாடல் II சோதனை நோக்கங்களுக்காக நான்கு சக்கர வாகனமாக உருவாக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு விற்கப்பட்ட முதல் காப்புரிமை பெற்ற தானியங்கி மோட்டார் வாகனம் மாடல் III ஆகும். இது வளைக்கப்பட்ட, எஃகு மற்றும் திட ரப்பரால் ஆன பின் சக்கரங்களைக் கொண்டது. விரும்பிய திசைக்கு திருப்பிக்கொள்ளும் முன் சக்கரங்களையும் இவ்வாகனம் கொண்டிருந்தது. வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு இருக்கைகளை மாற்றிக்கொள்ளும் வசதியும், மேல் கூரையை மடித்துக்கொள்ளும் வசதியும் வழங்கப் பட்டது.

முதல் தானுந்துப் பயணம் தொகு

ஆகஸ்ட் 5, 1888 இல் 39 வயதான பெர்த்தா பென்ஸ் தனது மகன்களான பதின்மூன்று வயது ரிச்சர்ட் மற்றும் பதினைந்து வயது யூஜனுடனுன் மான்ஹைமில் இருந்து பார்சீம் வரை மாடல் III தானுந்தில் பயணம் செய்தார். பெர்த்தா இப்பயணத்தைப் பற்றி கணவரிடம் சொல்லாமலும், அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமலும் செய்தார். சட்டவிரோதமாக இருந்தாலும் ஒரு தானுந்தை குறிப்பிடத்தக்க தூரத்திற்கு செலுத்திய முதல் நபர் என்ற பெயரை பெர்த்தா பெற்றார். இந்த முன்னோடி சுற்றுப்பயணம் மூலமாக சுமார் 106 கிமீ (66 மைல்) தூரத்தை பெர்த்தா கடந்திருந்தார்.[5][6]

இறப்பு தொகு

பெர்த்தா பென்ஸ் மே 5, 1944 இல் லேடன்பர்கில் உள்ள தனது இல்லத்தில் மறைந்தார். அவ்வீட்டிலேயே 1906 முதல் கார்ல் பென்ஸ் தனது குடும்ப நிறுவனமான பென்ஸ் & சன்ஸ் ஐ நடத்திவந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  2. "Bertha Benz Hits the Road, 125 Years Ago – History in the Headlines". Archived from the original on 24 September 2015. https://web.archive.org/web/20150924041731/http://www.history.com/news/bertha-benz-hits-the-road-125-years-ago. 
  3. Angela Elis. "Bertha Benz: die erste Frau am Steuer". Cicero. http://www.cicero.de/kapital/bertha-benz-die-erste-frau-am-steuer/41482. 
  4. "Frauen in der Geschichte des Rechts — Von der Frühen Neuzeit bis zum Gegenwart", Ute Gerhard e.a., Beck'se Verlagsbuchhandlung, München 1997, ISBN 3-406-42866-5, Pag 464
  5. stefanhock. "Motorradtour Mannheim – Bertha Benz Memorial Route Hinfahrt – GPSies". GPSies.com. http://www.gpsies.com/map.do?fileId=jaqjwnoubtjswpwi. 
  6. Tweney, Dylan (12 August 2010). "Aug. 12, 1888: Road Trip! Berta Takes the Benz". https://www.wired.com/2010/08/0812berta-benz-first-road-trip/. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்த்தா_பென்சு&oldid=3574312" இருந்து மீள்விக்கப்பட்டது