பெர்னார்ட் கோடு

பெர்னார்ட் கோடு (Bernhardt Line) என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாகப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு.

ரோம் நகருக்குத் தெற்கே ஜெர்மானிய அரண்கோடுகள்

செப்டம்பர் 1943ல் நேச நாடுகள் இத்தாலி மீது படையெடுத்தன. தெற்கு இத்தாலியில் தரையிறங்கியிருந்த நேச நாட்டுப் படைகள், அம்மாத இறுதிக்குள் தெற்கு இத்தாலி முழுவதையும் கைப்பற்றின. ஜெர்மானியப் படைகள் வடக்கு நோக்கிப் பின்வாங்கின. நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக ரோம் நகருக்குத் தெற்கே பல அரண் கோடுகளை ஜெர்மானியர்கள் உருவாக்கியிருந்தனர். இத்தாலியின் புவியியல் அமைப்பு இதற்கு சாதகமாக இருந்தது. இப்படி அமைக்கப்பட்ட அரண் கோடுகளில் தெற்கிலிருந்து மூன்றாவதாக இருந்தது பெர்னார்ட் கோடு. பிற அரண்கோடுகளைப் போல இத்தாலியின் மேற்கு கடற்கரையிலிருந்து கிழக்கு கடற்கரை வரை நீண்டிருக்கவில்லை; மேற்கு பகுதியில் ஒரு குறிப்பிட்ட தூரம் மட்டுமே அமைந்திருந்தது. குசுத்தாவ் கோட்டின் மேற்கு பகுதியில் அதன் முன்னால் ஒரு வீக்கப் பகுதி போல அமைந்திருந்தது. நேச நாட்டுப் படைகள் குசுத்தாவ் கோட்டை அடைவதை சில நாட்கள் தாமதப்படுத்துவதற்காக மட்டும் இவ்வரண்கோடு அமைக்கப்பட்டதால், இதனை ஜெர்மானியர்கள் அவ்வளவாக பலப்படுத்தவில்லை.

நவம்பர் 1943ல் அமெரிக்க 5வது ஆர்மி பெர்னார்ட் அரண்நிலைகளை அடைந்தது. டிசம்பர் 1, 1943ல் பெர்னார்ட் கோடு மீதான அமெரிக்கத் தாக்குதல் தொடங்கியது. ஒன்றரை மாதகால கடும் சண்டைக்குப்பின், பெர்னார்டு கோட்டின் அரண்நிலைகள் முறியடிக்கப்பட்டு அமெரிக்கப் படைகள் ஜனவரி 15, 1944ல் குசுத்தாவ் நிலைகளை அடைந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்னார்ட்_கோடு&oldid=1382232" இலிருந்து மீள்விக்கப்பட்டது