பேச்சு:சௌரவ் கங்குலி
சௌரவ் கங்குலி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
சௌரவ் கங்குலி என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் உதித்த சௌரவ் கங்கூலி என்ற 'பெங்கால் டைகர்', ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் "தாதா"வின் கிரிக்கெட் வாழ்வு, அவரே எதிர்பார்த்ததைப்போல இந்தியா ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தியது மூலம் மகிழ்ச்சிகரமாக நிறைவடைந்துள்ளது.
தோனி தலைமையில் இந்திய அணி அடுத்தக் கட்டத்தை நோக்கி வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த உயர்விற்கு தனது தலைமைப் பொறுப்பின் கீழ், நியாயமற்ற அவப்பெயர்களுடன், அடித்தளமிட்டுக் கொடுத்த கங்கூலியை நாம் மறக்க முடியாது.
குறிப்பாக ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் நாக்பூர் டெஸ்டிற்கு முன்னால் பேசிய வீர வசனத்தில், நாங்கள் டெஸ்டை வென்று கங்கூலிக்கு மகிழ்ச்சியான ஓய்வு தினங்களை மறுப்போம் என்றார். அவரது பேச்சு வெறும் பேச்சு மட்டுமே என்பது நிரூபிக்கப்பட்டு இந்த வெற்றி கங்கூலிக்கும் அவரது மன உறுதிக்கும், அவர் கிரிக்கெட்டை ஆடிய விதத்திற்கும், அவர் அணியை வழி நடத்திய திறனிற்கும் ஒரு சிறந்த பரிசாக அமைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பேட்ஸ்மெனாக கருதப்படும் டான் பிராட்மேன் போலவே தன் கடைசி இன்னிங்சில் கங்கூலி ரன்கள் எடுக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. ஆனால் நாக்பூர் டெஸ்ட் முதல் இன்னிங்சில் அவர் எடுத்த 89 ரன்கள் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளது என்றால் மிகையாகாது.
கங்கூலிப் "ஆஃப் திசையின் கடவுள்" - அதாவது ஆஃப் திசையில் அவர் ஆடும் டிரைவ்கள், கட் ஷாட்கள் ஆகியவை அவரை டேவிட் கோவருக்கு பிறகு அழகாக விளையாடும் இடது கை ஆட்டக்காரர் என்று அழைக்க வைத்தது. நம் அனைவருக்கும் கங்கூலியின் ஆக்ரோஷமான அணித் தலைமைப் பொறுப்பு பிடித்தமானது, அவரது அணித் தலைமையில் அதிக டெஸ்ட் போட்டிகளை வென்று இந்திய அணியை தற்போது இருக்கும் உயர்வு நிலைக்கும், போட்டி உத்வேகத்திற்கும், ஆக்ரோஷத்திற்கும் அடிக்கல் நாட்டியது என்ற வகையில் பலருக்கும் பிடித்தமான ஒரு வீரர் கங்கூலி. .
இந்தியாவின் மிகச்சிறந்த அணித் தலைவர் கங்கூலி என்பதை உலகின் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் மறுக்க முடியாது. அவரை பாராட்டிய இலங்கை வீரர்களான சங்ககாரா, ஜெயவர்தனே, ரணதுங்கா ஆகியோர் அவரது தலைமைப் பொறுப்பு பற்றி புகழ்ந்து கூறியுள்ளனர். ஒரு வீரராக கங்கூலியை நாம் முதலில் பார்ப்போம்:
ஒரு வீரராக கங்கூலி
1996ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக லாட்ஸில் அவர் தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே முதல் சதத்தை எடுத்து கிரிக்கெட் உலகிற்கு தன் வருகையை அறிவித்தார். பிறகு அடுத்த டெஸ்டில் மீண்டும் ஒரு சதம், இப்படித்தான் அவர் துவங்கினார்.
இவருடன் திராவிடும் தன் முதல் டெஸ்டை விளையாடினார். இந்தியாவின் மிகச்சிறந்த பேட்டிங் சேர்க்கை அமைந்தது அப்போதுதான்: சச்சின், கங்கூலி திராவிட். டெஸ்ட் போட்டியில் இவ்வாறு அபாரமாக துவங்கியவர், ஒரு நாள் போட்டிகளில் அப்போதைய கேப்டன் அசாருதீனின் முடிவின் படி சச்சின் டெண்டுல்கருடன் களமிறக்கப்பட்டார். பிற்பாடு சச்சினும் கங்கூலியும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அனைத்து நாடுகளும் அஞ்சும் ஒரு துவக்க ஜோடியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போதைய உலக சாம்பியன் அணியான இலங்கை அணிக்கு எதிராக 113 ரன்களை விளாசி தன் முதல் சதத்தை எட்டினார். அதன் பிறகு அதே ஆண்டில் சகாரா கோப்பை கிரிக்கெட்டில் 4 ஒரு நாள் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெற்று தன் பேட்டிங் மற்றும் பந்து வீச்சினால் இந்திய அணியை தொடரை வெல்லச் செய்தார்.
இந்த தொடரில்தான் அவரது சிறந்த ஒரு நாள் போட்டி பந்து வீச்சு அமைந்தது. 10 ஓவர்களில் வெறும் 16 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன் பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒன்றிரண்டு சதங்களை அடித்தார். ஆனால் இவரது போராட்ட குணம் கிரிக்கெட் உலகிற்கு தெரிய வந்த போட்டி டாக்காவில் நடந்த சுதந்திரக் கோப்பை இறுதிப் போட்டியே. பாகிஸ்தான் நிர்ணயித்த 315 ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறங்கிய இந்திய அணியை தன் 124 ரன்கள் அதிரடி இன்னிங்சினால் வெற்றி பெற வைத்தார். 300 ரன்களுக்கும் அதிகமான இலக்கை இந்தியா முதன் முதலாக துரத்தி வெற்றி பெற்றது அப்போதுதான். அதன் பிறகு சில 300 ரன்களை இந்தியா துரத்தும் போதும், இலக்காக நிர்ணயிக்கும்போது கங்கூலியின் பங்கு அபரிமிதமானது.
1999ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இலங்கைக்கு எதிராக 158 பந்துகளில் 17 பவுண்டரிகள் 7 சிக்சர் சகிதம் 183 ரன்களை விளாசினார் கங்கூலி. உலகக் கோப்பை வரலாற்றில் இது இரண்டாவது அதிக பட்ச தனிப்பட்ட ரன் எண்ணிக்கையாகும். ராகுல் திராவிடும் கங்கூலியும் இணைந்து குவித்த 318 ரன்கள் எந்த ஒரு விக்கெட்டிற்கு இடையேயும் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.
அதன் பிறகு ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியைத் தழுவியது. ஒரு நாள் போட்டிகளில் அந்த சீசனில் மட்டும் 5 சதங்களை எடுத்து ஐ.சி.சி. ஒரு நாள் தர வரிசையில் அவர் முதலிடத்தை பிடித்தார்.
பிறகு 272 ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்ததன் மூலம் குறைந்த ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்தவர் என்ற உலக சாதனையை நிகழ்த்தினார் கங்கூலி.
டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை அவரது பங்களிப்பு அவரது தலைமையின் கீழ் அபாரமாக இருந்தது. மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரிலிருந்து தன் பேட்டிங்கிற்கு புதிய பரிமாணம் அளித்த கங்கூலி, அங்கிருந்து தொடங்கி, 2002 இங்கிலாந்து தொடரில் அபாரமான இரண்டு அரை சதங்களுக்கு பிறகு ஒரு டெஸ்ட் சதத்தை எடுத்தார். இந்திய அணி டெஸ்ட் தொடரில் 0- 1 என்று பின் தங்கியிருந்தபோது லீட்சில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இவர் அடித்த 138 ரன்களும், சச்சினுடன் சேர்ந்து எடுத்த 200-க்கும் அதிகமான ரன்களும் இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்றது.
பிறகு 2003 உலகக் கோப்பை போட்டிகளில் 3 சதங்களை அடித்தார். 2004ஆம் ஆண்டு புகழ் பெற்ற ஆஸ்ட்ரேலிய தொடரில் பிரிஸ்பேனில் அவர் அடித்த 144 ரன்கள் அணியின் உத்வேகத்தை அதிகரித்து. அந்த தொடரில் ஆஸ்ட்ரேலியாவை இந்தியா தன் பேட்டிங்கின் மூலம் வறுத்து எடுத்தது நம் அனைவரின் நினைவையும் விட்டு அகலாதது.
ஒரு நாள் போட்டிகளில் 22 சதங்களையும் 72 அரைசதங்களையும் 41.02 என்ற சராசரியிலும், டெஸ்ட் போட்டிகளில் 113 டெஸ்ட் 7212 ரன்கள் சராசரி 42.17 என்றும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 40திற்கும் மேற்பட்ட சராசரியை வைத்திருக்கும் உயர்வான நிலையில் அவர் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.
அவரது பேட்டிங் திறன் மீது கடுமையாக விமர்சனம் வைத்த கிரேக் சாப்பல் முதல் தொடங்கி நம் பிஷன் சிங் பேடி வரையிலும், 2006 ஆம் ஆண்டு அணிக்கு மீண்டும் அவர் நுழைந்த பிறகு ஆடிய விதத்தில் நிச்சயம் குறைகாண இடமில்லை. இந்த காலக்கட்டத்தில் கங்கூலியின் சராசரி 60 ரன்களுக்கு அருகில் உள்ளது என்பதும், இதே காலக் கட்டத்தில் அணியின் மற்ற வீரர்களின் சராசரி இவருக்கு அருகில் இல்லை என்பதும் இவரது பேட்டிங் பற்றி விமர்சனம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதை நிரூபித்துள்ளது.
இந்தியாவின் சிறந்த அணித் தலைவர் கங்கூலி
சச்சின், கங்கூலி கனிட்கர் தவிர அனைவரும் கர்நாடகா வீரர்கள். அந்த டெஸ்ட் தொடரை இந்தியா 0-3 என்று தோற்றது. உடனேயே தென் ஆப்பிரிக்க அணி இங்கு வந்தது, சச்சின் டெண்டுல்கர் முதல் டெஸ்டை தோற்றவுடன் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்தார். இருப்பினும் அடுத்த டெஸ்ட் போட்டி வரை அணித் தலைமையில் நீடித்தார். அந்த டெஸ்டிலும் இந்தியா தோல்வி. தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளை இந்தியா தோற்றது. அடுத்தடுத்து தோல்விகள், 2000ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் ஹேன்சி குரோனியே, மொஹமது ஆசாருதீன், சலீம் மாலிக் பற்றி கிரிக்கெட் சூதாட்டப் புகாரை எழுப்பி, தான் அதில் சிக்கி சின்னா பின்னமானதையும் வெளியிட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அணிச்சேர்க்கையும் பலமாக இல்லை. கிரிக்கெட் ஊழலில் சிக்கி இந்திய அணியின் பெயருக்கும் இழுக்கு ஏற்பட்டது. சச்சின் டெண்டுல்கர் வெறுப்பின் உச்சத்தில் இருந்தார். கபில்தேவ் பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்தார். பேட்ஸ்மென்கள், பந்து வீச்சாளர்கள் தன்னம்பிக்கை இழந்து நின்றனர். இந்த ஒரு பெருங்குழப்ப நிலையில் கங்கூலி தலையில் இந்த பொறுப்பு சுமத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை அவர் கைப்பற்றினாலும் இந்த குற்றச்சாட்டுக்கள் இந்தியாவை நிலைகுலையச் செய்தன. சவால்களை சந்திக்கத் துணிந்தார் கங்கூலி.
புதிய பயிற்சியாளர் ஜான் ரைட் பொறுப்பேற்றார். ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் கென்யாவில் நடைபெற்றன. கங்கூலி தலைமையில் அதன் இறுதிப்போட்டிக்குள் இந்தியா நுழைந்தது. முதல் போட்டியிலேயே ஆஸ்ட்ரேலிய அணியை வீழ்த்தி கங்கூலி தன் தலைமைப் பொறுப்பு வருகையை உலகிற்கு அறிவித்தார். அந்தப் போட்டியில்தான் ஜாகிர் கானையும், யுவ்ராஜ் சிங்கையும் கங்கூலி அறிமுகம் செய்கிறார்.
அதன் பிறகே ஸ்டீவ் வாஹ் தலைமையில் புத்துணர்வு பெற்ற அதிரடி ஆஸ்ட்ரேலிய அணி இந்தியாவிற்கு தன் 16 டெஸ்ட் போட்டிகள் தொடர் வெற்றியுடன் வருகை தருகிறது.
தொடர்ச்சியான 17ஆவது டெஸ்டையும் ஸ்டீவ் வாஹ் தலமையின் கீழ் ஆஸ்ட்ரேலியா மும்பை வெற்றி மூலம் பெற்றது. கொல்கத்தாவில் துவங்கியது, அதாவது ஆஸ்ட்ரேலியாவிற்கு இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதனை துவங்கி வைத்தது கங்கூலிதான், அது கொல்கத்தா டெஸ்டிலிருந்து துவங்குகிறது. ஃபாலோ ஆன் ஆடினாலும், அடித்து ஆடுமாறு கூறிய கங்கூலியின் அணுகுமுறையால் லக்ஷ்மணும், திராவிடும் உலக சாதனை ரன் குவிப்பில் ஈடுபட்டு அதன் பிறகு சரியான நேரத்தில் டிக்ளேர் செய்து, ஹர்பனை வைத்து ஆஸ்ட்ரேலியாவின் தொடர் வெற்றி சாதனைக் கனவுகளை தகர்த்தவுடன் கங்கூலியைக் கண்டு உலக அணிகள் அஞ்சத் துவங்கின. பிறகு சென்னையில் வெற்றி. தொடரை ஆஸி. தோற்றதை இன்னமும் ஸ்டீவ் வாஹ் நம்பியிருக்க மாட்டார்.
அதன் பிறகு அயல் நாட்டுத் தொடர்கள் தொடங்கின. இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டது, இதில் ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா போன்றவர்களை வைத்து ஒரு டெஸ்ட் போட்டியை வென்றார் கங்கூலி இந்தியா முன்னிலை பெற்றது. அப்போது அதுவே பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது.
அயல் நாட்டில் வெற்றிபெறும் ஒரு கேப்டன் கிடைத்து விட்டார் என்பதாகத்தான் அப்போது அந்த வெற்றி இருந்தது. ஆனால் அதன்பிறகு இந்திய அணி மாற்றத்தின் காலக்கட்டத்தில் இருந்ததால் அடுத்த டெஸ்ட்களை தோல்வியடைந்து 1- 2 என்று தோல்வி தழுவியது, ஆனால் சில நம்பிக்கைகள் பிறந்தன.
பிறகு 2002ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன் கோப்பை போட்டிகளில் இலங்கையுடன் கோப்பையை இந்தியா பகிர்ந்து கொண்டது கங்கூலியின் தலைமையின் கீழ்தான்.
webdunia photo FILE
பிறகு அந்த புகழ் பெற்ற இங்கிலாந்து தொடர். இதில்தான் விரேந்திர சேவாக் என்ற இணையற்ற வீரரை துவக்க வீரராக களமிறக்கி கங்கூலி இந்திய அணிக்கு புதிய திருப்பத்தை கொடுக்கிறார். அதன் பிறகே ராகுல் திராவிட் என்ற ஒன்றாம் நிலை ஆட்டக்காரர் தன் முழுத் திறமையுடன் ஆடியுள்ளார் என்பது புள்ளி விவரங்களைப் பார்ப்பவர்களுக்கு தெளிவாக புரியும்.
அந்த டெஸ்ட் தொடரை கங்கூலி டிரா செய்தார். அதுவும் இங்கிலாந்திற்கு அதன் சொந்த மண்ணில் இன்னிங்ஸ் தோல்வி. அது மிகப்பெரிய தோல்வி. அந்த போட்டியில் 3ஆம் நாள் ஆட்டத்தில் கங்கூலி பேட்டிங் செய்தபோது வெளிச்சம் இன்மை பிரச்சனை எழுப்பப்பட்டது. ஆனால் கங்கூலி வெளிச்சம் போதும் விளையாடுவோம் என்றார். அடுத்த 8 ஓவர்களில் இவரும் சச்சினும் 85 ரன்களைக் குவித்தனர். கங்கூலி சதம் எடுத்தார். சச்சின் 193 ரன்களை எடுத்தார். மிகப்பெரிய முதல் இன்னிங்ஸ் முன்னிலையில் இங்கிலாந்தை இன்னிங்ஸ் தோல்வி தழுவச்செய்தார்.
பிறகு அந்த புகழ் பெற்ற நாட்வெஸ்ட் முத்தரப்பு ஒரு நாள் தொடர். இறுதிப் போட்டியில் 325 ரன்கள் இலக்கு. இந்தியா 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு யுவ்ராஜ், கயீஃப் ஆடிய புகழ் பெற்ற அந்த அபார இன்னிங்ஸினால் 325 ரன்களை இந்தியா எடுத்து கோப்பையைக் கைப்பற்றியது
கங்கூலி இங்கிலாந்தின் விக்டோரியா ஒழுக்கத்தை தகர்த்தெறிந்து தன் சட்டையை கழற்றி வீசினார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. பிறகு கங்கூலி கூறினார், பிளின்டாஃப் இந்தியாவில் தொடரை டிரா செய்ததற்கே மரியாதையில்லாமல் மைதானத்தில் சட்டையைக் கழற்றினார், நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம், லார்ட்ஸ் மைதானமாக இருந்தால் என்ன சட்டையைக் கழற்றகூடாதா என்று காட்டமாக பதில் அளித்தார்.
இது மட்டுமல்ல, ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து போன்ற வெள்ளைக்கார அணிகள் தொடருக்கு முன்பு எதிரணி வீரர்களை மனோபலமிழக்கச் செய்யும் விதமாக பேசி வந்தனர். அதற்கு பதிலடியாக கங்கூலி முதன் முறையாக செய்தியாளர்கள் கூட்டத்தில் எதிரணித் தலைவர்கள், அதன் முக்கிய வீரர்கள் பற்றி மனோ பலம் இழக்கச் செய்யும் கருத்துக்களை கூறத் துவங்கி புதிய அத்தியாயத்தை துவங்கி வைத்தார். இதெல்லாம் ஆதிக்க வெள்ளை மனோபாவங்களிடம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. ஆம்! மெக்ராத் இல்லாமல் பிரட் லீ ஒன்றும் இல்லை. ஷேன் வார்ன் இல்லாமல் ஆஸ்ட்ரேலியா சப்பை, ஸ்டீவ் வாஹ் வெற்றியுடன் ஓய்வு பெற முடியாது. அவரது ஆசை நிறைவேறாது என்றெல்லாம் அவர் கூறினார். நாசர் ஹுஸ்ஸைனுக்கு எதிராகவும், ஃபிளின்டாஃபிற்கு எதிராகவும் இது போன்ற அதிர்ச்சிக் கூற்றுக்களை கூறியுள்ளார் கங்கூலி. கிரிக்கெட் மூலம் மட்டுமல்லாமல், வரிக்கு வரியும் அவர்களை எதிர்கொண்டு ஆட்கொள்ள முடியும் என்ற புதிய வழக்கத்தை அவர் அன்று உருவாக்கினார்.
அப்போது இந்திய அணி ஒரு மிகப்பெரிய அணியாக உருவாகும் அமைப்பில் இருந்தது. 2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போது இந்திய அணி மீதும் கங்கூலி மீதும் பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது.
முதல் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவுடன் தோல்வியடைந்த போது இந்தியாவில் கங்கூலி வீடு உட்பட அனைவரது வீட்டிலும் கல் எறியப்பட்டது. அப்போதும் அவர் ரசிகர்களை வசை பாடாமல் அமைதி காக்குமாறு கோரினார். அதன் பிறகு ஒரே வெற்றி மயம், அதுவும் இங்கிலாந்தையும், பாகிஸ்தானையும் வெற்றி பெற்ற விதம் அப்போதைய ஆஸ்ட்ரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கை அச்சப்பட வைத்தது. இறுதிப் போட்டிக்கு முன் அவர் கூறும்போது, இந்திய அணித் தலைவர் கங்கூலி தங்கள் அணியை சுலபத்தில் கோப்பையை கைப்பற்ற விடமாட்டார் என்றார்.
ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் துவங்கிய தலைமைப் பொறுப்பு, பல்வேறு மாற்றங்கள், பரிசோதனைகளுக்கு பிறகு யுவ்ராஜ் சிங், கயீஃப், சேவாக், ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா என்று இளம் உத்வேகங்களை அணிக்குள் புகுத்தி மூத்த வீரகளின் மனோபலத்தை தட்டி எழுப்பி பல மாற்றங்களை செய்து உலக அளவில் பேசக்கூடிய ஒரு தலைமையாக, வழிகாட்டியாக உருமாறியது.
அதன் பிறகு 2004 ஆஸ்ட்ரேலிய பயணம், 2001 தோல்விக்கு பழி தீர்க்க காத்திருந்த ஸ்டீவ் வாஹிற்கு தன் தலைமைப் பொறுப்பின் மூலம் பாடம் கற்பித்தார்.
தொடரை ஏறக்குறைய வென்று ஸ்டீவ்வாகின் கடைசி டெஸ்ட் தொடரில் அவருக்கு பெருமை பெற்றுச் செல்லாமல் தடுத்தார். இதனால் கங்கூலி எப்போதுமே ஆஸ்ட்ரேலியர்கள் வெறுக்கும் ஒரு அணித் தலைவராகவே மாறியிருந்தார்.
அந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆஸ்ட்ரேலிய தொடருக்கு பிறகு பாகிஸ்தானில் முதன் முறையாக அந்த அணியை 2- 0 என்று வெற்றி பெற்று அதுவரை இந்தியா பாகிஸ்தானில் செய்ய முடியாததை சாதித்துக் காட்டினார்.
49 டெஸ்ட்களில் 21 வெற்றிகளை பெற்று, அயல் நாடுகளில் இந்தியா இனி சோடை போகாது என்பதை கங்கூலி-ஜான் ரைட் கூட்டணி உறுதி செய்தது. ஒரு நாள் போட்டிகளிலும் 146 போட்டிகளில் 76 போட்டிகளை வெற்றி பெற்றுத் தந்துள்ளார் கங்கூலி.
இந்தியாவின் ஈடு இணையற்ற ஒரு வீரர், அணித் தலைவர், வழிகாட்டியாக திகழ்ந்தார் கங்கூலி.
நாக்பூர் டெஸ்ட் போட்டியின் இறுதி கட்டங்களில் அணித் தலைவர் தோனி, கங்கூலியை அழைத்து அவரது கையில் பந்தைக் கொடுத்து தலைமைப் பொறுப்பை அவரிடம் அளிக்கச் செய்தது கங்கூலிக்கு மட்டுமல்லாது, அணி இன்று அடைந்துள்ள இந்த உயர்ந்த நிலைக்கு அடித்தளமிட்ட சிறந்த வழிகாட்டி என்ற வகையில் இந்திய கிரிக்கெட்டிற்கு செய்த மாபெரும் கௌரவமாகக் கருதலாம்.
ஆனால் இந்திய கிரிக்கெட்டின் அணுகுமுறையிலும், வீரர்கள் மனோ நிலையிலும் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தி இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்கும் (அதன் தற்போதைய செல்வ வளர்ச்சிக்கும்!) இந்திய கிரிக்கெட் அணி உலக அரங்கில் இன்று மதிக்கப்படுவதற்கான காரணமாக திகழ்ந்தவருமான சௌரவ் சண்டிதாஸ் கங்கூலியை கடைசி ஒரு 3 ஆண்டுகளாக கிரிக்கெட் வாரியம் நடத்திய விதம் மிக மோசமானது. அவருக்கு கிடைத்தைவிட பன் மடங்கு மரியாதைக்கும் மதிப்பிற்கும் தகுதியானவர்தான் கங்கூலி என்பதை நாம் மறுக்க முடியாது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவரை மறைக்கவும் முடியாது.