பேச்சு:திசுள்
கலைச்சொற்கள்
தொகுcell என்பதற்கு கலம் என்பதும், procaryyota இற்கு முற்கருவன்கள் என்பதுவும் இலங்கை உயிரியல் கற்பித்தலில் நடப்பிலுள்ள வழக்கு.
இலங்கையின் உயிரியல் கலைச்சொல்லகராதியை பெற்றுக்கொள்ளமுடிந்தால் நல்லதென நினைக்கிறேன். மிக நல்ல சொற்கள் அதில் உண்டு. முடிந்தவரையில் நான் கற்ற சிலவற்றை அவ்வப்போது பகிர்ந்துகொள்கிறேன். தற்போது நான் கற்கும் பரப்பு மாறிவிட்டதால் பல சொற்கள் மறந்துபோய்விட்டன. --மு.மயூரன் 16:51, 18 அக்டோபர் 2005 (UTC)
- மயூரன், cell, prokaryota ஆகிய இரண்டுக்கும் நீங்கள் குறிப்பிட்டுள்ள சொற்கள் நன்று. இது நாள் வரை அறிந்தது இல்லை. தமிழ் நாட்டில் செல், புரோகார்யோட் என்று இன்னும் ஆங்கிலச்சொல்லா தான் தமிழ் வழி அறிவியல் புத்தகத்திலும் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் எனக்கு உடன்பாடில்லை. பொதுவாக அறிவியலில் ஒரு துறை உருவாகும்போது உலகெங்கும் உள்ள அத்துறை வல்லுனர்கள் கூடிப்பேசி கலைச்சொற்களை முடிவு செய்வர். இதனால் ஆங்கிலச்சொற்களில் குழப்பம் நேராமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. தமிழில் பெரும்பாலான விடயங்களுக்கு இம்மாதிரி உலகளாவிய அமைப்புகள் இல்லாதது பெரும் குறை. கணினித்துறைக்கு உள்ளது போல எல்லாத் துறைகளுக்கும் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, கனடா என்று தமிழ் வழிப் பள்ளிகள் உள்ள அனைத்து இடங்களில் இருந்தும் அறிஞர்கள் (அந்தந்ந நாட்டு அரசுகளின் அங்கீகாரம் மற்றும் உதவியுடனோ தன்னார்வத்தினாலோ) கூடி கலைச்சொற்களை இறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தமிழ் வழி அறிவியல் சிந்தனையில் தேக்க நிலை தான் இருக்கும். பொதுவாக தற்பொழுது அறிவியல் தமிழ் என்பது எளிய விளக்கக் கட்டுரைகளை தமிழில் எழுதி புரியவைக்கும் அளவுக்கே தேவைப்படுவதால் அதை தாண்டிய மிக நுண்ணிய அண்மைய கருத்துக்களுக்கு உரிய கலைச்சொற்கள் இல்லாமல் திண்டாட வேண்டியிருக்கிறது. எல்லா விடயங்களையும் தமிழில் சிந்தித்தல் அவசியம் என்ற விழிப்புணர்வு தமிழரசுகளுக்கும் தமிழர்களுக்கும் வரும் வரை இத்தேக்க நிலை நீடிக்கும் என்பது வருத்தமான விடயம். மயூரனாதன் போன்றோர் அவரவர் துறைகள் பற்றிய கட்டுரைகளை தமிழில் எழுதுவதனால் அத்துறை கலைச்சொற்கள் உருவாகவும் பெருகவும் வாய்ப்பாக இருக்கிறது. அரசுகள் முன்முயற்சி எடுக்கும் வரை அந்தந்த துறைகளில் உள்ள தமிழார்வம் கொண்டோர் முன்னோடிகளாக தம்முள் ஒருங்கிணைந்து செயல்பட்டு கலைச்சொற்களை உருவாக்க தம்மால் இயன்றதை செய்ய வேண்டும் என்பது என் அவா. அதற்கு விக்கிபீடியாவும் விக்சனரியும் ஒரு கருவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
- திசுள் என்ற சொல்லை உதயகுமார் முன்மொழிந்தார். இனிய எளிய சொல்லாக அப்பொழுது எனக்குத் தோன்றியது. ஆனால், இச்சொல் உருவாக்கத்தில் ஒரு அடிப்படை முரண்பாடு உள்ளது. திசுவை உருவாக்குவது cell என்பதால் அதற்கு திசுள் என்று சொல்வது சரி. ஆனால், எல்லா cellகளும் திசுக்களை உருவாக்குவதில்லை என்பது அடிப்படை உண்மை. அவ்விடங்களில் திசுள் பொருத்தமான சொல்லாக இருக்காது. cell என்பது அடிப்படையான concept. அதற்கு ஈடான அடிப்படையான சொல்லை தேர்ந்து எடுப்பது அவசியம். திசுள் என்பது திசுவிலிருந்து திசுளை வரையறுக்கும் top to bottom approach. அது நல்ல அறிவியல் அணுகுமுறையாக இருக்காது. இந்த காரணங்களால் திசுள் என்பதை விட கலம் என்பது நல்ல சொல்லாக எனக்குத் தோன்றுகிறது. --ரவி (பேச்சு) 07:46, 22 அக்டோபர் 2005 (UTC)
மயூரன், இலங்கைக் கல்வித் திணைக்களத்தின் கலைச் சொல் அகராதிகளும், தமிழ் நாட்டில் புழக்கத்திலுள்ள கலைச்சொல் அகராதிகளும் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் இணையத் தளத்தில் உள்ளன. இது பயன்படுத்துவதற்குச் சற்று வசதிக் குறைவானதாக இருந்தாலும் மிகவும் பயனுள்ளது. இலங்கையிலும், தமிழ் நாட்டிலும் பயன்படுத்தப்படும் கலைச் சொற்களுக்கிடையே நிறைய வேற்பாடுகள் உள்ளன. இதில் எது நல்ல சொல் என்பது ஒருபுறமிருக்க எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கட்டுரைகள் எழுதுவது தொடர்பாக ஒரு வழி காணப்பட வேண்டும். தமிழ் நாடு, இலங்கை, இதில் எங்கு புழங்கும் கலைச்சொற்களைப் பயன்படுத்திக் கட்டுரைகளை எழுதினாலும், அக் கட்டுரையில் அச் சொற்களுக்கு ஈடாக மற்றப் பகுதியினரால் பயன்படுத்தப்படும் சொற்களையும் கொடுக்கலாம் என் நான் எண்ணுவதுண்டு. செயல்முறையில் இது மிகவும் சிரமமானது. விக்சனரியில் ஒரு கலைச் சொல் அகராதியை உருவாக்கி இணப்புக் கொடுக்கலாம். ஏதாவதொரு வழி கண்டுபிடிக்க வேண்டும். Mayooranathan 16:42, 22 அக்டோபர் 2005 (UTC)
- மயூரநாதன், தகவற்றொழிநுட்பத்தமிழோடு தொடர்ச்சியாக ஊடாடுபவன் என்ற அடிப்படையில் எனது அனுபவப்படி, இலங்கை வழக்கு தமிழ்நாட்டு வழக்கூ பிரச்சனைகள் அடிபட்டுப்போய்விட்டன. இணையம் இதனை சாத்தியப்படுத்தியிருக்கிறது. பல கலைச்சொற்கள் புழக்கத்துக்கு வந்து படிப்படியாக தக்கன பிழைத்துக்கொள்கின்றன. நல்ல உதாரணம் "வலைப்பதிவு". இணையப்பல்கலைக்கழகத்தின் கலைச்சொல் அகராதியை நாங்கள் ஒரு நியமமாக எடுத்துக்கொள்ளலாம் என எண்ணுகிறேன். வரும் வாரம் இலங்கை அரசகரும மொழிகள் திணைக்களத்துக்கு செல்கிறேன். முடிந்தால், தமிழ் அகராதிகள் அங்க இன்னும் பாதுகாப்பாக இருந்தால் எல்லாவற்றையும் வாங்கிக்கொள்ள எண்ணம்.
கலைச்சொற்கள் பற்றி உரையாடுவதற்கென ஒரு பக்கத்தை ஆரம்பித்து அங்கே விவாதங்கள் நடத்தலாம். இணையத்தைப்பொறுத்தவரி பிரதேச வழக்குகள் நாளடைவில் அற்றுப்போய் எளிய, அழகான, விளக்கமான சொற்கள் நிலைக்கும். --மு.மயூரன் 17:42, 22 அக்டோபர் 2005 (UTC)