பேச்சு:வலைவழித் திருட்டை நிறுத்துதல் சட்டம்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

விக்கிப்பீடியா எதிர்ப்பது இரண்டு சட்ட முன்வரைவுகளை.

ஒன்று Stop Online Piracy Act bill இரண்டு Protect IP Act bill

”இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம்” என்பது Stop Online Piracy Act bill என்பதன் மொழிபெயர்ப்பு முயற்சி என நினைக்கிறேன். இது சரியா?

இணையம் என்ற கலைச்சொல்லை இண்டர்நெட் என்பதற்கு மட்டும்தான் தமிழ்.நெட்டில் படைக்கப்பட்டது. சொல்லப் போனால், அதைப் படைத்த மலேசியத் தமிழர் “நயனம்” ஆசிரியர் கோமகன் (ராஜகுமாரன்), அதை தமிழ்.நெட் என்ற குழுமத்துக்கு மட்டும்தான் கருதினார் என நினைவு. ஆனால், அதை நாங்கள் இண்டர்நெட் என்பதற்கு இணையாகக் கருதி வழங்கி வந்துள்ளோம். அந்தக் கலைச்சொல்லை web, online, internet, Inter-Net என்று எல்லாவற்றிற்கும் புழங்குவது அதை நீர்த்துப் போக வைக்கிறது. அது சரியல்ல. Web க்கு வலை என்றும், internetக்கு இணையம் என்றும், Inter-Netக்கு வலைப்பின்னல் எனவும் Onlineக்குத் தடவழி என்றோ அல்லது வலைவழி என்றோ ஏன் வலைத்தடம் என்றோ சொல்லலாம். அதைக் கட்டாயம் இணையம் என்று சொல்லக் கூடாது.

அதே போல் Piracy என்பது திருட்டு அல்ல. பொதுவாக Sea Pirates என்பதைத் தமிழில் கடற் கொள்ளைக்காரர்கள் என்போம். அறிவுசார் சொத்துத் திருட்டு Intellectual property theft என்றும் சொல்லலாம்.

"இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம்” என்பதை விட ”வலைத்தடக் கொள்ளைத் தடைச் சட்டம்” என்பது பொருந்தும் என நினைக்கிறேன். நிறுத்தல் என்றால் எடை போடுதல் என்று பொருள். நிறுத்துதல் என்றால் to stop எனப் பொருள் கொள்ளலாம்.

மணி மு. மணிவண்ணன்

இம்மடல் எனக்கும் படி இணைத்திருந்தார், அப்பொழுது நான் இட்ட மறுமொழியின் பெரும்பகுதியைக் கீழே பதிவு செய்கின்றேன்:

Web = வலை
Internet = இணையம்
Intranet = அகவிணையம் (அகவய இணையம்)
Inter-Net = பிணையம் 
Online (as for resources) = வலைவழி  (சரியான சொல் வலையுழி ஆனால்
உழி என்னும் மிக மிக அருமையான சொல் மிகப்பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரியாது. 
சொல்லுழி என்றால் சொல்லும்பொழுது என்று பொருள். "உழி = இடம், பக்கம், 
பொழுது, அளவு, ஓர் உருபு" என்று கூறும் கழக அகராதி. இச்சொல்லை, 
உரையாசிரியர்கள் ஆயிரக்கணக்கான இடங்களிலே பயன்படுத்தியுள்ளனர். 
சிறிய சொல். உயிரெழுத்தில் தொடங்கும் சொல். எனவே எளிதாகப் 
பிற சொற்களுடன் சேரும். எ.கா காணுழி (காணும் இடத்து, காணும்பொழுது,
when you see என்னும் பொருளும் தரும்). உழிதல் என்றால் அலைதல்.
Online இல் இருத்தலை உழிதல் எனலாம். உழிதரல் என்றால் சுழலல், 
திரிதல் (இங்கும் அங்கும் போதல்). எனவே வலையுழி என்றால் 
வலையில் இருத்தல், வலைப்பக்கம் இருத்தல், வலையில் இருக்கும் நேரம் 
(அல்லது பொழுது). ஆனால் நம் மக்களுக்குப் புதுச்சொல்
ஏற்கும் மனப்பான்மை அறவே கிடையாது. ஆங்கிலத்தில் எவ்வளவு
கடினமான சொல்லாக இருந்தாலும், பொருள் கண்டுபிடித்து ஏற்பர்!
 
அடுத்து "இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம்”  என்பதை
வலையுழி திருட்டைத் தடுத்தல் சட்டம் எனலாம். Piracy
என்பது கொள்ளை என்றாலும், அது திருட்டே. 
வேண்டுமென்றால் பெருந்திருட்டு
என்பதைக் கொள்ளை என்று சொல்லலாம். பொதுவாக 
கொள்ளை என்பது மிக அதிகமான, அல்லது மிகவிரைவாக
என்பதனைக் குறிக்கும். கொள்ளை நோய் என்பது
மிகப்பலரைக் கொல்வதும் மிக விரைவாகப்
பரவிக் கொல்வதும் ஆம்.  கொள்ளை கொள்ளையாய்
இலாபம் ஈட்டுகிறான் என்றால் மிக அதிகமாக இலாபம்
ஈட்டுகிறான் என்று பொருள். திருட்டு அல்ல.
கொள்ளையடித்துவிட்டார்கள்  என்றாலும் மிக
மொத்தமாகத் திருடிவிட்டார்கள் என்று பொருள்படும்.
இதில் கொள்ளை என்பது மொத்தமாக, கூட்டாக என்பது
போன்ற பொருள் வலுத்து நிற்கும். கொள்ளையர்
என்பது கூட்டமாக வந்து, மிக அதிகமாகத் திருடுவதைக்
குறிக்கும். இவை தேர்வு செய்யாத
என் மேலோட்டமான கருத்துகளே.
 
நீங்கள் சொல்வது போல வலைத்தடம் என்றும் சொல்லாம்.
வலைவழி திருட்டைத் தடுத்தல் சட்டம்
(வலைத்தடவழி திருட்டைத் தடுத்தல் சட்டம்)
தடுக்கும் சட்டம் என்றும் சொல்லலாம்.
 
அன்புடன்
செல்வா
விக்கிப்பீடியாவில் பங்கேற்பதன் இனிமையை உங்கள் மடல்கள் வெளிப்படுத்துகின்றன. இந்தவகை பின்னூட்டங்களும் கலைச்சொல்லாக்க உரையாடல்களும் பிழை திருத்தங்களும் இருப்பதன் வலிமையாலேயே நான் எப்படியாவது கருப்பொருளை உள்ளிட்டுவிட்டால் அது சரியான வடிவத்தில் வந்துவிடும் என்று நான் களத்தில் இறங்கியுள்ளேன். உங்கள் உரையாடலின்படி வலைவழித் திருட்டை நிறுத்துதல் சட்டம் என தலைப்பை நகர்த்தி விடுகிறேன். --மணியன் 05:33, 19 சனவரி 2012 (UTC)Reply
மணியனின் கருத்துக்கு +1. எனக்கும் இணையத் திருட்டு என்ற சொல் உறுத்தலாகவே இருந்தது. Facebook தனித்தமிழ் குழுமத்திலும் இது போன்ற உரையாடல்கள் காணக் கிடைக்கின்றன. //அந்தக் கலைச்சொல்லை web, online, internet, Inter-Net என்று எல்லாவற்றிற்கும் புழங்குவது அதை நீர்த்துப் போக வைக்கிறது. அது சரியல்ல.// இவ்வாறு ஒரே சொல்லைத் தொடர்புடைய பல சொற்களுக்கும் தவறுதலாகப் பயன்படுத்தக்கூடாது என்று இராம.கி அவர்களும் வலியுறுத்துவார். நாமும் இது தொடர்பாக இன்னும் சிறப்பாகச் செயற்பட முனைய வேண்டும்--இரவி 05:59, 19 சனவரி 2012 (UTC)Reply
நன்றி, மணியன், இரவி. நல்ல தலைப்பு மாற்றமாகவே எனக்கும் படுகின்றது. ஆம் மணியன், விக்கியில் கூட்டாக இணக்கமான முறையில் ஒத்தியங்கி ஆக்கம் செய்வதே தனிச்சிறப்பு அல்லவா?--செல்வா 15:01, 19 சனவரி 2012 (UTC)Reply
Return to "வலைவழித் திருட்டை நிறுத்துதல் சட்டம்" page.