பைசாசம் (புதினம்)
பைசாசம், எழுத்தாளர் கோகுல் சேஷாத்ரி எழுதிய ஒரு வரலாற்றுத் திகில் புதினம்.சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கோளக்குடி எனும் கிராமத்தில் உள்ள பழைய பாண்டி நாட்டுக் குடைவரைக் கோயிலில் காணப்படும் பைசாசம் பற்றிய அரிய கல்வெட்டுச் செய்தியின் அடிப்படையில் ஆசிரியர் இப்புதினத்தைப் படைத்துள்ளார்.முழுக்கதையும் ஒற்றைக் கிராமத்தில்… அந்தக் கிராமத்தில் அமைந்துள்ள சிறிய மலை, கோயில் மற்றும் ஊருணிச் சுழலில் அக்காலத்து மக்களின் வாழ்வியல் பின்னணியில் மண்ணின் மணத்தோடு இயல்பாக விரிந்து செல்கிறது. 2005 முதல் 2007 வரை இணையத்தில் தொடராக வெளிவந்த இப்புதினம் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரால் ஜனவரி, 2010 ஆம் ஆண்டு நூலாக வெளியிடப்பட்டது.
பைசாசம் தமிழ் வரலாற்றுப் புதினம் | |
நூலாசிரியர் | கோகுல் சேஷாத்ரி |
---|---|
உண்மையான தலைப்பு | Paisaasam |
பட வரைஞர் | கோகுல் சேஷாத்ரி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
தொடர் | பைசாசம் புதின வரிசை |
பொருண்மை | வரலாற்று நாவல் |
வகை | Tamil historical novels |
வெளியீட்டாளர் | பழனியப்பா பிரதர்ஸ் |
வெளியிடப்பட்ட நாள் | ஜூலை 21, 2008 |
ஊடக வகை | Book |
பக்கங்கள் | 383 |
ISBN | 9788183795067 |
அடுத்த நூல் | திருமாளிகை தொகுதி |
கதைச் சுருக்கம்
தொகுஇப்புதினம் நிகழும் காலம் சுமார் கிபி 1080. பொன்னமார்பதி நாட்டில் அமைந்துள்ள சிற்றூரான திருக்கோளக்குடி ஊருணியில் (குளத்தில்) மாலை நேரம் நீர் சேந்தச் செல்லும் மாணிக்கம், ஊருணிக்கரையில் ஒரு பிசாசின் தோற்றத்தைக் கண்டு மயங்கி விழுகிறாள். அதனைத் தொடர்ந்து ஊராரை பிசாசு பயம் ஆட்டிப் படைக்கத் துவங்குகிறது. கோளக்குடியில் அதே ஊருணிக்கரையில் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் அகால மரணமடைந்த மூவேந்தனின் ஆன்மாதான் பேயாகத் தங்களைப் பழிவாங்க வந்துள்ளது என்று அனைவரும் நம்புகின்றனர். அந்தப் பிசாசை ஒரு கட்டுக்குள் கொண்டுவரும் பொறுப்பு ஊரின் பாடிக்காவலனான திருவரங்கப் பாண்டி வேளான் தலையில் வந்து விழுகிறது.மேற்கொண்டு செய்வதறியாமல் தனது குருநாதரான ஆழிவெண்ணாடரின் உதவியை நாடி பொன்னமார்மதிக்குச் செல்கிறான் திருவரங்கன். அவன் திரும்பி வருவதற்குள் வண்ணாத்தி இலுப்பைஞ்ஞீலியை பிசாசு இரத்த காயங்களுடன் அடித்து வீழ்த்தி விடுகிறது. திருவரங்கனுக்கு நெருக்கடி முற்றுவதால் பிசாசைப் பற்றிய உண்மையைத் துப்புத் துலக்க வெண்ணாடர் ஊருக்கு வந்து சேர்கிறார்.
அவரது உதவியுடன் ஊருணிக்கரையையும் ஊரில் சந்தேகத்திற்கிடமான மனிதர்களையும் ஆராய்கிறான் திருவரங்கன். வண்ணாத்தியின் கதையை அவன் நம்பத் தயாராக இல்லை. அதே சமயத்தில் அவள் கோரமாக அடிப்பட்டு விழுந்து கிடந்ததும் தன்னை அடித்து வீழ்த்தியது மூவேந்தனின் பைசாசம்தான் என்று உறுதிபடக் கூறுவதும் அவனைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. உண்மையில் மூவேந்தன்தான் பைசாசமாக வந்துள்ளானா? அல்லது அந்தப் பிசாசின் பெயரால் வேறு மனிதர்கள் எவராவது விஷமத்தனமான காரியத்தில் ஈடுபட்டுள்ளனரா என்று பல்வேறு கோணங்களில் முயற்சி செய்கிறான்.
இதற்கிடையில் திருவரங்கனின் உற்ற நண்பன் திருவடிப் பிச்சன் மூலம் சில திடுக்கிடும் உண்மைகள் தெரியவருகின்றன.கோளக்குடியை ஒட்டிய சூரமலைக் காட்டில் நடைபெறும் சில மர்மமான இரகசியங்களைப் பிச்சன் கண்டறிந்து திருவரங்கனுடன் பகிர்ந்து கொள்கிறான். ஆனால் அதற்கும் பைசாசத்திற்கும் வண்ணாத்திக்கும் என்ன தொடர்பு என்பது விளங்கவில்லை.இவ்வாறு பற்பல சம்பவங்களின் கோர்வையாக விறுவிறுப்பாக வளர்ந்து செல்லும் இந்தப் புதினம் இறுதியில் முற்றிலும் வேறு தளத்திற்கு உருமாறி எதிர்பாராத சில அதிர்ச்சிகரமான சம்பவங்களுடன் முடிகிறது.
கதாபாத்திரங்கள்
தொகு- கோளக்குடி பாடிக்காவலன் திருவரங்கப் பாண்டி வேளான்
- பொன்னமார்பதி நாடுகாவலதிகாரி உய்யக்கொண்டாரான ஆழி வெண்ணாடர்
- ஆழிவெண்ணாடரின் பெண் குழலி
- கோளக்குடி ஊர் நடுவிருக்கைப் பெரியவர் (பஞ்சாயத்துத் தலைவர்) கடக்க சிந்தாமணிப் பேரரையர்
- ஊர்ப் பெரியவர் ஆலால சுந்தரர்
- திருவரங்கனின் நண்பன் திருவடிப் பிச்சன்
- கோயில் குருக்கள் ஞானசிவனார்
- வண்ணாத்தி இலுப்பைஞ்ஞீலி
- காளபடாரி கோயில் உபாசகர் பூசாரி கொற்றவையடியன்
- கரிய மாணிக்கம்
- வெள்ளையம்பலத்தான்
- மாசிலாயி
- மூவேந்தன்
பதிப்பு வரலாறு
தொகுஇந்தப் படைப்பு முதலில் வரலாறு டாட் காம் இணையதளத்தில் 2005 முதல் 2007 வரையில் தொடராக வெளிவந்தது. பின்னர் 2008ல் பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தாரால் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டது. 2018ல் திருத்தப்பட்ட புதிய இரண்டாம் பதிப்பைக் கதாசிரியர் வெளியிட்டுள்ளார்.
ஒலிப்புத்தகம்
தொகு2020ல் ஸ்டோரிடெல் தமிழ் நிறுவனத்தின் மூலம் திருமதி. தீபிகா அருணின் குரலில் பைசாசம் ஒலிப்புத்தகமாக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒரு நேர்காணலில் கதாசிரியர் பைசாசம் உருவான விதத்தையும் எழுதப்பட்ட சூழலையும் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.