பொங்கோல் (Punggol, அல்லது Ponggol, சீனம்: 榜鹅) சிங்கப்பூரின் வடக்கிழக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும். இப்பகுதிக்கு சிங்கப்பூர் நகர்ப்புற சீரமைப்பு அதிகார சபை நதிக்கரை நகரம் (Waterfront town) என்றும் பெயர் சூட்டியுள்ளது. சதுப்புநிலத்திலும் கடலிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட நிலத்திலும் கட்டப்பட்ட பொங்கோல் பகுதி இப்போது சிங்கப்பூரிலே அதிவேகமாக வசதிகளிலும் மக்கள் வளத்திலும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

பொங்கோல்
குடியிருப்பு நகரம்
ஏனைய transcription(s)
 • சீனம்榜鹅
 • பின்யின்Bǎng'é
 • HokkienPn̂g-gô
 • மலாய்Punggol
 • ஆங்கிலம்Punggol
மேல் இடப்புறத்தில் இருந்து: கிரீன்டேல் இடைநிலைப் பள்ளி, எட்ச்டேல் சமவெளி, பொங்கோல் குவால் குடியிருப்புகள், பொங்கோல் பிளாசா, வாட்டர்வே முனை, கோரல் முனை, பொங்கோல் பூங்கா
பொங்கோல் is located in சிங்கப்பூர்
பொங்கோல்
பொங்கோல்
சிங்கப்பூரில் பொங்கோலின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 1°23′53.8″N 103°54′32.3″E / 1.398278°N 103.908972°E / 1.398278; 103.908972
நாடு சிங்கப்பூர்
பிராந்தியம்வட-கிழக்கு
நகரசபைபாசிர் -ரிசு-பொங்கோல்
தொகுதிபாசிர் ரிசு-பொங்கோல்
அரசு
 • நாடாளுமன்ற உறுப்பினர்கள்
  • ஜனில் புதுச்சேரி
  • இங் சீ மெங்
  • சு சூலிங்
பரப்பளவு
 • மொத்தம்9.34 km2 (3.61 sq mi)
 • குடியிருப்பு3.74 km2 (1.44 sq mi)
மக்கள்தொகை
 (2015)[1][2]
 • மொத்தம்1,09,750
 • அடர்த்தி12,000/km2 (30,000/sq mi)
அஞ்சல் மாவட்டம்
19
குடியிருப்பு மனைகள்35,515
திட்டம்96,000

பொங்கோல் கிராமம்

தொகு

1819-இல் ராஃபிள்ஸ் சிங்கப்பூரில் காலடி வைப்பதற்கு முன்பே 200 வருடங்களாக இக்கிராமம் இருந்துள்ளது. அக்காலத்தில் பெரும்பாலான குடியேறிகளான மலாய்க்காரர்களுக்கு விவசாயம் ஒரு முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது. அவர்களில் பலர் மீனவர்களாகவும் பணிபுரிந்தனர். ஆண்டுகள் செல்ல இப்பகுதி மக்கள் வளத்திலும் பொருளாதார ஆற்றலிலும் மேன்மை அடைந்தது. 19-ஆம் நூற்றாண்டில் மலாய் மற்றும் சீன இனத்தவர்கள் சேர்ந்துக் குடியிருந்த இப்பகுதியில் பன்றிப்பண்ணைகள், ரப்பர்த் தோட்டங்கள் போன்றவையே வருமானத்தை ஈட்டிக் கொடுத்தன. பொங்கோல் பகுதியில் தற்போது பன்றிப் பண்ணைகள் எதுவும் இல்லை . தற்போது அழைக்கப்படும் பொங்கோல் சாலை முற்காலத்தில் வியாபாரம் நடைபெறும் பெருஞ்சந்தையாக இருந்தது.

பொங்கோல் விலங்கியல் பூங்கா

தொகு

1928-இல் துவங்கப்பட்ட பொங்கோல் விலங்கியல் தோட்டம் வில்லியம் லாரன்ஸ் சோமா பசாப்பா என்ற இந்திய வணிகரால் நிர்வகிக்கப்பட்டது. சுமார் 200-இற்கும் மேற்பட்ட மிருகங்களையும் 2000-இற்கும் மேற்பட்ட பறவை வகைகளையும் கொண்டிருந்த இப்பூங்கா வணிக வளர்ச்சியை ஊக்குவிக்க வெளிநாட்டு விலங்கியல் பூங்காக்களுடனும் விலங்குப் பரிமாற்றங்களை மேற்கொண்டது.[3]

இரண்டாம் உலகப் போருக்கு முன் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் அடிக்கடி வருகைப் புரியும் பிரபல இடமாக அமைந்தது. இவ்விடத்தைக் காண வந்தவர்களில் ஒருவர் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் ஆவார்.

1942-இல் சப்பானிய ஆக்கிரமிப்பின்போது பிரித்தானிய இராணுவம் பொங்கோல் பாயிண்ட் அதாவது கடற்கரைக்குப் பக்கத்திலிருந்த நிலத்தில் ராணுவ பீரங்கிகளையும் ஆயுதங்களையும் வைத்து எதிர் தாக்குதலுக்குத் தயாராக முற்பட்டனர். ஆகையால் அவ்விடத்தில் அமைந்திருந்த விலங்கியல் தோட்டம் இடம் மாற்றப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கேற்றவாறு இராணுவம் கட்டளையிட்டபின் நேரப் பற்றாக்குறையினால் பல மிருகங்கள் இடமாற்றப்படாமல் சுட்டுக் கொல்லப்பட்டன. மிருகங்களின் மீது அதிகப் பாசமும் அக்கறையும் காட்டிய பசாப்பா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு 1943-இல் காலமானார்.

சூக் சிங்க் படுகொலை

தொகு

இரண்டாம் உலகப் போரின் காலகட்டத்தில் சப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கப்பூரில் சூக் சிங்க் படுகொலை சப்பானிய ராணுவத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்த போராளிகளில் பெரும்பாலானோர் சீனர்களாக இருந்தனர். இவர்களை ஒரேயடியாக ஒழித்துக்கட்டுவதே இப்படுகொலையின் நோக்கமாக அமைந்தது.[4] 1942-இல் பிப்ரவரியிலிருந்து மார்ச் மாதம்வரை சப்பானிய இராணுவ வீரர்கள் 18-லிருந்து 50-வரை வயதுள்ள சீன ஆண்களைக் குறி வைத்து அவர்களைச் சுட்டுக் கொன்றனர். இப்படுகொலைகள் சிங்கப்பூரிலுள்ள பல கடற்கரையோரங்களில் நடந்தது. பொங்கோல் கடற்கரையிலும் குறைந்தபட்சம் 400 சீனவர்கள் சப்பானியத் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி தடயங்களின்றி காணாமல் போயினர். சப்பானிய ஆக்கிரமிப்பின் முடிவையும் போரின்போது உயிரிழந்த சிங்கப்பூரர்களையும் நினைவுகூரும் வகையில் 1995-இல் தேசிய நினைவுச்சின்ன கழகம் பொங்கோல் கடற்கரையை இரண்டாம் உலகப் போர் நினைவிடமாக அங்கீகரித்தது.

நிலச் சீரமைப்பு

தொகு

1983-இல் சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்த நிலச் சீரமைப்புத் திட்டத்தின் படி பொங்கோல் குடியிருப்பு பேட்டை அடுத்த மூன்று ஆண்டுகளில் 277 ஹெக்டர் நிலம் சேர்க்கப்பட்டதால் பெரிதடைந்தது. இதை மேற்கொள்வதற்கு 136 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி செலவிடப்பட்டது. புதிதாக சீரமைக்கப்பட்ட நிலத்தில் பெரும்பாலும் அடுக்குமாடிக் கட்டடங்களே கட்டப்பட்டன. அதே சமயத்தில் பொது திட்டத்தால் பாதிக்கப்படக் கூடிய நடவடிக்கைகளும் தொழிற்சாலைகளும் அங்கு இயங்கின. சுமார் 14.4 மில்லியன் கனமீட்டர் மணல் தேவைப்பட்ட இத்திட்டம் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தால் மேற்கொள்ளப்பட்டது.[5]

1984 அக்டோபர் மாதத்தில் சிங்கப்பூரின் வடக்கிழக்குப் பகுதி நிலத்தை சீரமைத்து பெரிதுப்படுத்துவதற்கான முன்மொழிவு நாடாளுமன்றத்தால் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1985-லிருந்து 1993-வரை ஏறக்குறைய 685 எக்டேர் நிலம் சீரமைக்கப்பட்ட இத்திட்டமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் பொறுப்புகளில் ஒன்றாக அமைந்தது. சுமார் 76 மில்லியன் கனமீட்டர் மணல் வரவழைக்கப்பட்ட இத்திட்டத்திற்கு S$874 மில்லியன் ஒதுக்கிடப்பட்டது. சீரமைக்கப்பட்ட நிலத்தில் குடியிருப்பு, பொழுதுபோக்கு வசதிகள் போன்ற அம்சங்கள் நிலைநாட்டப்பட்டது. 1997-லிருந்து 2001-வரை பொங்கோல் 21 தொலைநோக்குத் திட்டத்தின்படி இன்னொரு 155 ஹெக்டர் நிலம் மீட்கப்பட்டது.

நதிக்கரை நகரம்

தொகு
 
பொங்கோல் 21 திட்டத்தின் முதற்கட்டம் 2002 இல் நிறைவடைந்த நிலையில்
 
பொங்கோல் பிளாசா
 
பொங்கோல் நீர்மார்க்கம்

1996-இல் தேசிய நாள் பேரணியில் பொங்கோல் பகுதியை மேம்படுத்தக்கூடிய பொங்கோல் 21 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 2008-இல் திட்டத்தின்படி 80,000-திற்குப் பதிலாக வெறும் 16,000 வீடுகளே கட்டப்பட்டிருந்தன. அதோடு ஒரே பேரங்காடியான பொங்கோல் பிளாசா, காபிக் கடை மற்றும் மளிகைக் கடை போன்ற அம்சங்கள் மட்டுமே காண முடிந்தது.[6]

திட்டத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவே பொங்கோல் 21 பிளஸ் என்ற புது மேம்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி பொங்கோல் குடியிருப்புப் பேட்டை 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு நதிக்கரை நகரமாய் மாறவிருந்தது. பற்பல வசதிகளைக் வழங்கும் பொங்கோல் பகுதி ஒருங்கிணைந்த போக்குவரத்து வலையமைப்பையும் வணிக மையங்களையும் கொண்டுள்ளது. பயணிகள் எதிர்நோக்கும் போக்குவரத்துச் சிரமங்களைத் தீர்க்கவும் உச்ச நேர பயணி நெரிசல்களைச் சமாளிக்கவும் பெரு விரைவு ரயிலுடன் இடைமுகமாக அமையும் வகையில் இலகு ரயில் போக்குவரத்து அமைக்கப்பட்டது.[7]

குடியிருப்புப் பகுதிகளுடன் பொங்கோல் பாயிண்ட், உல்லாச நடை பாதைகள் மற்றும் அறுசுவை கடலுணவு வழங்கும் உணவகங்கள் போன்ற இடங்களும் கட்டப்பட்டுள்ளன. மேலும் பொங்கோலில் காண முடிகின்ற பல பசுமை நிறைந்த இயற்கை நிலக்காட்சிகளும் நீர் மார்க்கமும் இவ்விடத்திற்கு புத்துணர்ச்சி மிக்க தோற்றத்தை அளிக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பொங்கோலில் அமலாக்க அதற்கேற்றவாறு விரிவான நகர வடிவமைப்பு திட்டம் ஒன்று வரையப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நிலைத்திருக்கக் கூடிய வளர்ச்சிகளை மேற்கொள்வதோடு தூய்மைக்கேட்டைக் குறைக்க அல்லது ஒழிக்கக்கூடிய தொழில்நுட்ப அம்சங்களும் நிலைநாட்டப்பட்டன. பொங்கோலின் சிறப்பு அம்சங்களான  ஒருங்கிணைந்த வாழ்க்கை முறையையும் மாசுபாட்டைக் குறைக்கும் திட்டங்களையும் வெளிப்படுத்தும் வகையில் 2 பகுதிகள் அமைகின்றன. பொங்கோலை தனித்துவம் வாய்ந்த நகரமாக எடுத்துக்காட்டும் இவ்விரண்டு பகுதிகள் ட்ரிடோட்ச் குடியிருப்புக் கட்டடங்களும் மற்றும் பொங்கோல் நீர் மார்க்கமும் ஆகும்.

ட்ரிலொட்ச்

தொகு

7 குடியிருப்புக் கட்டடங்களைக் கொண்டிருக்கும் ட்ரிலொட்ச் (Treelodge) இயற்கைக் கூறுகளைச் சுரண்டும் பகுதியாகும். மின்சாரத்தைச் சமயோசித வழியில் பயன்படுத்தும் வகையிலும் மறுபயனீட்டை ஊக்குவிக்கும் வகையிலும் இக்கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் மேற்கொண்ட இத்திட்டத்திற்கு கட்டட, கட்டுமான ஆணையத்தின் க்ரீன் மார்க் பிளாட்டினம் விருது வழங்கப்பட்டது.

பொங்கோல் நீர் மார்க்கம்

தொகு

பொங்கோல் 21 பிளஸ் திட்டத்தின் இன்னொரு சிறப்பம்சம் பொங்கோல் நீர் மார்க்கம் (Punggol Waterway) ஆகும். குடியிருப்புப் பகுதிகளில் நீர் மற்றும் பூங்கா முகப்புகளை உருவாக்குவதோடு குடியிருப்பாளர்கள் ஓய்வெடுக்கும் பசுமை வாய்ந்த இடமாகவும் விளங்குகிறது. எல்லா வயதினருக்கும் ஏற்றவாறு மெதுவோட்டம், மிதிவண்டி் மற்றும் உல்லாச நடைபாதைகளும் நீர் மார்க்கத்தின் இருப் பக்கங்களில் அமைந்துள்ளன.

லோரோங் ஹலூஸ் ஈரநிலம்

தொகு

முற்காலத்தில் குப்பை நிரப்புமிடமாக இருந்த லோரோங் ஹலூஸ் ஈரநிலம் (Lorong Halus Wetland) தற்போது செடிக்கொடிகள், பறவைகள் மற்றும் வனவிலங்குகளுக்கான சரணாலயமாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவ்விடம் நுண்ணுயிரேற்றம் (Bioremediation) அதாவது நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி அசுத்தமான நீரைத் தூய்மைப்படுத்துதலை நடைமுறைப்படுத்தி வருகிறது. இவ்வாறு இச்செயல்முறை நீர்த்தேக்கங்களுக்குள் அசுத்தமான நீர் புகுந்துவிடாமலிருக்க உதவுகிறது. ஆகையால் சுற்றுப்புற மாசுபாட்டைக் குறைப்பதோடு இயற்கைப் பிரியர்களுக்கு ஒரு புகலிடமாகவும் லோரோங் ஹலூஸ் ஈரநிலம் அமைகிறது. இங்கு மாணவர்களுக்கான இயற்கை பராமரிப்பு சார்ந்த கல்விப் பயணங்களும் அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படும்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 City Population – statistics, maps and charts | Punggol
  2. 2.0 2.1 "HDB Key Statistics FY 2014/2015". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-04-14.
  3. http://www.singaporebasapa.com/Welcome.html
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-30. பார்க்கப்பட்ட நாள் 2017-04-14.
  5. https://blogs.ntu.edu.sg/hp331-2015-06/land-reclamation/
  6. http://www.sghometoday.com/twinwaterfalls/
  7. http://www.straitstimes.com/singapore/transport
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-08-01. பார்க்கப்பட்ட நாள் 2017-04-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொங்கோல்&oldid=3701529" இலிருந்து மீள்விக்கப்பட்டது