பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு

பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு (Committee of Public Safety, பிரெஞ்சு: Comité de salut public) என்பது பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சி காலகட்டத்தில் பிரான்சை நிர்வகித்த ஒரு அமைப்பு.

பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழுவின் கூட்டம் (1794)
Comité-salut-public.JPG

ஏப்ரல் 1793 இல் பிரான்சின் அப்போதைய நாடாளுமன்றமான தேசிய மாநாட்டால் இக்குழு உருவாக்கப்பட்டது. இதற்கு முன்வந்த நாட்டின் பொதுப்பாதுகாப்புக்கான குழுவிடமிருந்து (Committee of General Defence) புரட்சிகர குடியரசான பிரான்சை வெளிநாட்டு எதிரிகளிடமிருந்தும் உள்நாட்டுக் கலகங்களிடமிருந்தும் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. ஜூலை 1793 இல் புனரமைக்கப்பட்டபின் நடைமுறையில் பிரான்சை ஆளும் நிர்வாக அமைப்பாக மாறியது. முதலில் ஒன்பது உறுப்பினர்களும் பின்பு பன்னிரண்டு உறுப்பினர்களும் கொண்டிருந்த இக்குழுவுக்கு போர்க்கால நடவடிக்கையாக பெரும் அதிகாரங்கள் தரப்பட்டன. இராணுவம், நீதித்துறை, நாடாளுமன்ற ஆகிய மூன்று அரசுப் பிரிவுகளையும் மேலாண்மையும் மேற்பார்வையும் செய்யும் அதிகாரம் இக்குழுவிடம் இருந்தது. நாடாளுமன்றத்தின் நிர்வாக அமைப்புகளும் அமைச்சர்கள் இதன் மேற்பார்வையில் செயல்பட்டனர். பிரான்சுக்கு எதிரான வெளிநாட்டுக் கூட்டணியினையும், உள்நாட்டு எதிர்ப் புரட்சியாளர்களின் கலகங்களையும் ஒரு சேர எதிர்த்து வந்த இக்குழுவின் அதிகாரங்கள் படிப்படியாக அதிகரித்து நாட்டின் பெரும் சர்வாதிகார அமைப்பாக உருவானது.

ஜூலை 1793 இல் மிதவாத குடியரசுக் கட்சியினர் (கிரோண்டிஸ்டுகள்) தேசிய மாநாட்டில் தோற்கடிக்கப்பட்டனர். தீவிரவாத ஜேக்கோபின்களான மேக்சிமில்லியன் ரோபெஸ்பியர், செய்ன் ஜஸ்ட், ஜார்ஜஸ் கௌத்தான் ஆகியோர் இக்குழுவில் இணைந்தனர். இதன் பின் குழுவின் அதிகாரம் உச்சத்தை அடைந்து அதன் நடவடிக்கைகள் தீவிரமாகின. டிசம்பர் 1793 இல் நாடாளுமன்றம் சட்டபூர்வமாக அனைத்து அரசு அதிகாரத்தையும் இக்குழுவிடம் ஒப்படைத்தது. ரோபெஸ்பியரின் தலைமையில் இக்குழு ஒரு சர்வாதிகார அமைப்பாக பிரான்சை ஆண்டது. பதினான்கு தனி ஆர்மிகளை உருவாக்கி புரட்சிகர பிரான்சின் வெளிநாட்டு, உள்நாட்டு எதிரிகளுடன் மோதியது. போர்க்கால நிதிநேருக்கடியை சமாளிக்க பொருட்களின் விலைகளுக்கு உச்ச வரம்பினை நிர்ணயித்ததுடன் தொழிலாளர்களின் ஊதியத்தையும் கட்டுப்படுத்தியது. உள்நாட்டு எதிர்ப்பினை சமாளிக்க பயங்கர ஆட்சியினை கைகொண்டது. புரட்சியின் எதிரிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் கில்லோட்டின் எந்திரம் மூலம் கொன்றது.

குழுவின் அடக்குமுறைகள் கட்டுமீறிப்போனதால், ஜேக்கோபின்களின் எதிரிகள் தெர்மிடோரிய எதிர்வினை எனப்படும் எதிர்ப்புரட்சி ஒன்றை நடத்தி அதன் ஆட்சியைக் கவிழ்த்தனர். ஜூலை 27, 1794 இல் நடைபெற்ற இவ்வாட்சி மாற்றத்தினால் ரோபெஸ்பியர், செய்ன் ஜஸ்ட் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கில்லோட்டின் மூலம் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் இக்குழுவின் செல்வாக்கு வெகுவாகச் சரிந்து 1795 இல் புதிய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட பின் இது கலைக்கப்பட்டது.

குறிப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு