பொய்க்கால் குதிரை ஆட்டம்

(பொய்க்கால் குதிரையாட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாசாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். இந்த ஆட்டம் தஞ்சாவூரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.[1] ஆணும் பெண்ணும் இராசா இராணி போன்று வேடமிட்டு ஆடுவதுண்டு.

பொய்க்கால் குதிரை
பொய்க்கால் குதிரை ஆட்டக்காரர் வேடமிட்டிருக்கும் மாணவர்கள்

இது புரவியாட்டம், புரவி நாட்டியம், பொய்க் குதிரை ஆட்டம் என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பொய்யான குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு மரக்காலில் நின்று ஆடும் ஆட்டம் என்பதால் பொய்க் கால் குதிரை ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம், ஒரிசாவில் சைத்திகோடா அல்லது கெயுதா என்றும், ஆந்திராவில் திலுகுர்ரம் என்றும், ராஜஸ்தானில் கச்சிகொடி என்றும், கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம், மராட்டிய மன்னர்கள் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பொய்க்கால் குதிரை ஆட்டத்தைச் சித்தரித்து சென்னை கல்லூரி சாலையில் வைக்கப்பட்டுள்ள சிலை

இக்கலை தமிழகத்தில் பரவலாக உள்ளது. இக்கலை கோயிலும் சமூகமும் சார்ந்த கலையாகும். முன்பு இந்த ஆட்டத்திற்கு கொந்தளம் என்ற இசைக் கருவியைப் பயன்படுத்தினர். தற்போது நையாண்டி இசைக்கேற்ப இவ்வாட்டம் ஆடப்படுகிறது. இக்கலையை ஆடுபவர்கள் ராஜா ராணி வேடம் பூண்டு ஆடுகிறார்கள். நையாண்டி மேளத்தின் பின்னணி இசைக்கேற்ப நிகழ்த்தப்படும் இக்கலையின் ஆடுகளம், ஊர்வலம் ஆகும். ஊர்வலம் செல்கிற எல்லா பகுதிகளிலும், கோவிலின் முற்பகுதியும் ஆகும். இந்து சமயக் கோவில் விழாக்களிலும், இசுலாமியர்களின் விழாக்களிலும், கத்தோலிக்கரின் சவேரியார் கோவில் விழாக்களிலும் இவ்வாட்டம் பங்கு பெறுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. கே. தனசேகரன். (2006). கிராமியக் கலைகள். சென்னை: திருவரசு புத்தக நிலையம்.
  2. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22.