பொரி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பொரி என்பது நெல்லிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப்பொருளாகும். பண்டிகைகளிலும், விழாக்களிலும், சிற்றுண்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழில் விநாயகர் பூசைகளில் பொரி பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன. வங்காள மொழியில் முரி, கன்னடத்தில் கள்ளெ புரி, தெலுங்கில் மரமரலு, மராத்தியில் சிர்முரே என இந்தியாவெங்கும் பல பெயர்களில் இப்பொருள் அழைக்கப்படுகிறது.
பயன்பாடு
தொகுபொரி, தமிழகத்தில் பண்டிகைக் காலங்களில் கடவுளுக்குப் படைக்கப்படுகிறது மேலும் பொரியுருண்டை போன்ற பலவித தின்பண்டப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பிரசாதமாகவும் சில கோயில்களில் வழங்கப்படுகிறது. சபரிமலைக்கு இருமுடி கட்டிக்கொண்டு செல்லும் பக்தர்கள் சர்க்கரையுடன் பொரியும் சேர்த்து எடுத்துச் செல்கிறார்கள்.
உலகெங்கிலும் சிற்றுண்டிகளில் பொரி கலந்து உண்கிறார்கள். வட இந்தியாவில், பேல் பூரி, சாட் போன்ற கலவை உணவு வகைகளில் பொரி முக்கிய பதார்த்தமாகப் பயன்படுகிறது.
தயாரிப்பு முறை
தொகுசெடியிலேயே நன்கு முற்றிய நெற்கதிர்களை நீரில் சில நிமிடங்கள் ஊறவைக்கப்படுகிறது. பிறகு நீரிலிருந்து எடுத்து 8-10 மணி நேரம் உலரவைக்கப்படுகிறது. அதன் பின்னர் 190-210°செ வெப்ப நிலையில் 40-45 நிமிடங்கள் சூடான மணலுடன் சீராக வறுக்கப்படுகிறது. நெல்லின் உள்ளே அடர்ந்த மாவுப்பொருள் உள்ளது. நீரின் கொதிநிலைக்கு மேலான வெப்பத்துக்கு சுடும்போது நெல்லின் உறுதியான புறப்பொருளுக்கு உள்ளேஉயர் அழுத்த நீராவி உருவாகிறது. கூடவே மாவுப்பொருளின் மூலக்கூறுகளும் உடைந்து நீரோடு வேதி இயக்கத்தில் உருகுகிறது. இந்நிலையில் நெல் மணி வெடிக்கிறது. அப்போது உள்ளிருக்கும் மாவுப்பொருளும் புரதப்பொருளும் காற்று நிறைந்த நுரைக்கூழ்மமாகி வெளிவருகிறது. வெளிவந்த கூழ்மம் அடுத்த விநாடி குளிர்ந்து திடமாகி மொறுமொறுப்பான வெண்மையான பொரியாக மாறுகிறது. பின்னர் சலித்து மணலையும் உமியையும் நீக்கி பயன்பாட்டுக்கு வருகிறது. நவீன முறைகளில், மின்சமையற்கலங்களிலும் பொரிக்கப்படுகிறது.