பொருள்கோள்

சண்ணம்

தமிழில் வாக்கியங்கள் அமையும் பாங்கைக் கூறுவது சொல்லதிகாரம். தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் முதல் 7 இயல்களில் வழக்குத்தமிழில் வரும் வாக்கிய அமைதி பற்றியும், 8 & 9ஆம் இயல்களில் செய்யுள்-தமிழில் வரும் வாக்கிய அமைதி பற்றியும் இலக்கணம் என்னும் புலச் செய்திகள் தொகுத்துச் சொல்லப்பட்டுள்ளன.

செய்யுளில் அமைந்துகிடக்கும் வாக்கிய அமைதியை அண்வயப்படுத்தி வழக்குத்தமிழ் வாக்கியமாக்கிக்கொள்ளும் பாங்குக்குப் பொருள்கோள் என்று பெயர்.

இந்தப் பொருள்கோள் வகைகளில் சிலவற்றை அணி எனவும் காட்டுவர்.

பொருள்கோள்

தொகு

செய்யுளில் இடம்பெறும் சொற்களை அமைந்துள்ளவாறே பொருள் கொண்டால் எல்லாச் செய்யுள்களுக்கும் சரியான பொருள் கிடைக்காது. யாப்பு முதலிய காரணங்களுக்காகச் சொற்களை முன்பின்னாக மாற்றுதல் முதலிய பல நிலைகளில் சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் பொருள் கொண்டால் அச்செய்யுளின் பொருள் விளங்கும். இவ்வாறு செய்யுளில் காணப்படும் தொடர்களைப் பொருள் கொள்ளும் முறையை விளக்குவது பொருள்கோள் ஆகும். பொருள்கோள் எட்டு (நன்னூல்) வகைப்படும். அவை,

  1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்
  2. மொழிமாற்றுப் பொருள்கோள் (சுண்ணம் -தொல்காப்பியர், பாசி நீக்கம்-மயிலை நாதர்)
  3. நிரனிறைப் பொருள்கோள்
  4. விற்பூட்டு பொருள்கோள் (பூட்டுவிற் பொருள்கோள்)
  5. தாப்பிசைப் பொருள்கோள்
  6. அளைமறிப் பாப்புப் பொருள்கோள்
  7. கொண்டுகூட்டுப் பொருள்கோள்
  8. அடிமறி மாற்றுப் பொருள்கோள்

பொருள்கோள் பாகுபாடு

தொகு
  1. பொருள்கோள் 4 வகை (தொல்காப்பியம்) - 1. நிரல்நிறை, 2. சுண்ணம், 3. அடிமறி, 4. மொழிமாற்று, [1]
  2. பொருள்கோள் 5 வகை (மயிலை நாதர் உரை) – 1. பூட்டுவில், 2. வீதலையாப்பு, 3. கொண்டுகூட்டு, 4. ஒருசிறைநிலை, 5. பாசிநீக்கம் [2]
  3. பொருள்கோள் 8 வகை (நன்னூல் - பவணந்தி முனிவர்) – 1. யாற்றுநீர், 2. மொழிமாற்று, 3. நிரல்நிறை, 4. விற்பூட்டு, 5. தாப்பிசை, 6. அளைமறிபாப்பு, 7. கொண்டுகூட்டு, 8. அடிமறிமாற்று [3]
  4. பொருள்கோள் 9 வகை (நேமிநாதம் - குணவீர பண்டிதர்) – 1. அடிமொழி, 2. சுண்ணம், 3. நிரல்நிறை, 4. விற்பூட்டு, 5. அடிமறி, 6. ஆற்றுவரவு, 7. தாப்பிசை, 8. மொழிமாற்று, 9. அளைமறிபாப்பு [4]

ஆற்றுநீர்ப் பொருள்கோள்

தொகு

சொற்களை அங்கும் இங்கும் மாற்றுதல் முதலிய வழிகளில் பொருள் கொள்வதற்கு இடம் இன்றி, ஆற்று நீர் ஒரே toடர்ச்சியாகாக ஒரு திசை நோக்கி ஓடுவதுபோல், செய்யுளில் சொற்கள் உள்ளவாறே வரிசை மாற்றாமல், தொடர்ச்சியாகப் பொருள்கொள்ளும் முறைக்கு ஆற்றுநீர்ப் பொருள்கோள் என்பது பெயர்.

(எ-டு:)

சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே

     (சீவகசிந்தாமணி - 53)

இப்பாட்டு, சொல் என்னும் எழுவாயைத் தொடர்ந்து, அதன் பல்வேறு செயல்கள், கருவிருந்து, ஈன்று, நிறுவி, இறைஞ்சி என எச்சங்களாக இடம்பெற, காய்த்த என்னும் வினைப் பயனிலையை இறுதியில் பெற்று முற்றுப் பெற்றது. இப்பாட்டில் எச்சொல்லையும் இடம் மாற்றியோ வேறு வகையில் முன்பின்னாகக் கொண்டோ பொருள் கொள்ளாமல், சொற்கள் அமைந்துள்ள நிலையிலேயே பொருள் கொண்டுள்ளமை காணலாம். இவ்வாறு இப்பாடலில் சொற்களும், அவற்றின் பொருளும் ஆற்றுநீர் போல் தொடர்ச்சியாகச் செல்வதால் இப்பாடல் ஆற்றுநீர்ப் பொருள்கோள் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆயிற்று.

மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள் அற்றற்று ஒழுகும் அஃதுயாற்றுப் புனலே

                               (நன்னூல் - 412)

தொல்காப்பியம் காட்டும் 4 பொருள்கோள்

தொகு

நிரல்நிறை

தொகு
அணி வகையில் இதனை நிரல்நிறை அணி என்பர்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை :பண்பும் பயனும் அது [5]

இல்வாழ்க்கை அன்பு உடைத்தாயின் அது அதன் பண்பு. இல்வாழ்க்கை அறம் உடைத்தாயின் அது அதன் பயன். – என்பது இதன் பொருள். இதில் “அன்பும் அறனும்”, “பண்பும் பயனும்” – என தனித்தனியே நிரல்நிறுத்திக் காட்டப்பட்டுள்ளன

சுண்ணம்

தொகு
உடலில் பூசும் சுண்ணத்தில் (talcum powder) பொருள்கள் கலந்து கிடப்பதுபோல் சொற்கள் கலந்துகிடக்கும் பாடல் சுண்ணம்.
பாடல்

சுரைஆழ அம்மி மிதப்ப வரைஅனைய :யானைக்கு நீத்து முயற்கு நிலைஎன்ப :கானக நாடன் சுனை. [6]

சுரைக்குடுக்கை மிதக்குமாறும், அம்மி ஆழுமாறும், முயல் நீந்துமாறும், யானை நிற்குமாறும் சுனை உள்ளது எனப் பொருள் கொள்ள வேண்டும் எனக் காட்டுவர்.
இது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. இதனைப் பாடலால் தெரிவிக்க வேண்டியதில்லை.
கானகநாடன் சுனையில் சுரை மிதக்கிறது. அம்மி ஆழ்கிறது. முயல் நிற்கிறது. யானை நீந்துகிறது. இது என்ன விந்தை! என்று புலவர் பாடுகிறார். கானகநாடன் ஆட்சியில் மேலோர் – கீழோர், உயர்ந்தோர் – தாழ்ந்தோர் நிலை தலைகீழாக உள்ளது. என்ன விந்தை! என்றே இந்தப் பாடலுக்குப் பொருள் கொள்ளவேண்டும். நன்னூல் இதனை மொழிமாற்று என்று குறிப்பிடுகிறது.

அடிமறி

தொகு
பாடல்

சூரல் பம்பிய சிறுகான் யாறே :சூரர மகளிர் ஆரணங் கினரே :சார னாட நீவர லாறே :வார லெனினே யானஞ் சுவலே. [7]

இந்தப் பாடலில் உள்ள 4 அடிகளை முன்னும், பின்னும், இடையிலும் எங்கு வைத்தும் பொருள் கொள்ளலாம்.

மொழிமாற்றுப் பொருள்கோள்

தொகு

குன்றத்து மேல குவளை குளத்துள :செங்கோடு வேரி மலர் [8]

இதனை, குன்றத்து மேல வேரி மலர் என்றும், குளத்துள குவளை மலர் என்றும் பொருள் கொள்ளவேண்டியிருப்பதால் மொழிமாற்றுப் பொருள்கோள் ஆகும். இப்பொருட்கோள் நன்னூலில் ஒரு செய்யுளின் ஓர் அடிக்குள் சொற்களை மாற்றிப் பொருள் கொள்ளும் மொழிமாற்றுப் பொருள்கோள் எனவும் ஒரு செய்யுளில் எந்த இடத்தில் இருக்கும் சொற்களும் தம் பொருளைச் சென்று தழுவிக்கொள்ளும் கொண்டு கூட்டுப் பொருள்கோள் என விரிவு பெற்றது.

நன்னூல் காட்டும் 8 வகை

தொகு

யாற்றுநீர்ப் பொருள்கோள்

தொகு

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் :என்பும் உரியர் பிறர்க்கு [9]

ஆற்றுநீர் பள்ளத்தை நோக்கி ஓடுவதுபோல் இதன் பொருள்கோள் ஓடுகிறது.

மொழிமாற்று

தொகு
தொல்காப்பியம் சுண்ணம் என்பதை நன்னூல் மொழிமாற்று என்கிறது. சுண்ணத்துக்குக் காட்டப்பட்ட மேற்கோள் பாடலே இதற்கும் காட்டப்படுகிறது.

நிரல்நிறை

தொகு
மேலே காட்டப்பட்டுள்ளது.

விற்பூட்டு

தொகு
பாடல்

திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர் :இறந்துபடின் ஏதம் பெரிதாம் – உறந்தையர்கோன் :தண்ணார மார்பின் தமிழர் பெருமானைக் :கண்ணாரக் காணக் கதவு [10]

கதவு திறந்திடுமின் என்று இறுதிச்சொல்லை முதற்சொல்லோடு கூட்டவேண்டியிருப்பதால் விற்பூட்டு.

தாப்பிசை

தொகு
அணி வகையில் இதனை விளக்கணி(தீவக அணி) என்பர்.

உண்ணாமை உள்ள(து) உயிர்நிலை ஊன்உண்ண :அண்ணாத்தல் செய்யாது அளறு [11]

இதில் ஊன் உண்ணாமை உள்ளது உயிர்நிலை என்றும், ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு என்றும் பொருள் கொள்ளும்போது ஊன் என்னும் சொல் இருபுறமும் பற்றிக்கொள்கிறது.
தாம்புக்கயிறு ஒருபுறம் மாட்டையும், மற்றொருபுறம் மாட்டைக் கட்டும் முளையையும் பற்றிக்கொள்வது போல இப்பாடலில் ஊன் என்னும் சொல் பற்றி நிற்பதைக் காணலாம்.

அளைமறிபாப்பு

தொகு
அளை = வளை. வளையில் நுழையும் பாம்பு முதலில் வளைக்குள் தலையை விடும். பின் வாலை உள்ளே இழுத்துக்கொள்ளும். அதனால் பாம்பின் தலை வளையின் மேல்வாய்க்கு வந்துவிடும். இது பாம்பு இளிதாக வெளியே வர உதவியாக இருக்கும். பாம்பு என்பது இத்தொடரில் வலித்தல் விகாரம் பெற்றுப் பாப்பு என நின்றது.
பாடல்

தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார்தாமும் :சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியிற் சுழல்வார்தாமும் :மூத்த பிணிநலிய முன்செய்த வல்வினை என்றே முனிவார்தாமும் :வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலாதோரே. [12]

வாழ்ந்தபொழுதில் வான் எய்து நெறி முன்னி வாழாதோர் தளர்வார், சுழல்வார், முனிவார் எனப் பொருள்கோள் அமைவதால் அளைமறிபாப்பு.

கொண்டுகூட்டு

தொகு

ஆலத்து மேல குவளை குளத்தன :வாலின் நெடிய குரங்கு [13]

இதில் ஆலத்து மேல குரங்கு, குளத்தன குவளை – என்று கருத்தைக் கொண்டு அங்குமிங்கும் பூட்டிய பொருள்கோள் அமைந்திருப்பதால் இது கொண்டுகூட்டுப்பொருள்கோள்.

அடிமறி

தொகு
தொல்காப்பியர் பாகுபாட்டில் உள்ளது
ஓர் செய்யுளில் முதல் அடியை தூக்கி கடைசி அடியாக போட்டாலும், கடைசி அடியை தூக்கி முதல் அடியாக போட்டாலும், பொருள் மாறாமல் வருவது அடிமறி பொருள்கோள்.

பொருள்கோள் 5 வகைப் பாகுபாடு

தொகு
  1. பூட்டுவில், - மேலே உள்ளது
  2. வீதலையாப்பு, - வீ என்பது பூவைக் குறிக்கும் சொல். இரண்டிரண்டு பூக்களை ஒன்று சேர்த்து பூக்களைக் கண்ணியாகக் கட்டுவர். பூ கட்டும் நூல் இரண்டு பூக்களைக் கட்டுவது போல் பொருள் கொள்ளப்படும் தாப்பிசைப் பொருள்கோளை இப்பகுப்பு வீதலையாப்பு என்கிறது.
  3. கொண்டுகூட்டு, - மேலே காட்டப்பட்டுள்ளது.
  4. ஒருசிறைநிலை, - நிரல்நிறைக்கு இவர் சூட்டியுள்ள பெயர்
  5. பாசிநீக்கம்சுண்ணம் என்றும், மொழிமாற்று என்றும் கூறப்பட்ட பொருள்கோள் இது.

பொருள்கோள் 9 வகைப் பாகுபாடு

தொகு
அடிமொழி

பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் :சால மிகுத்துப் பெயின் [14]

என்னும்போது வலியறிதல் என்பது அடிமொழி. அணி வகையில் இதனை ஒட்டணி(பிறிதுமொழிதலணி) என்பர்.
ஏனைய எட்டும் மேலே கூறப்பட்டன.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. தொல்காப்பியம், எச்சவியல் 8 முதல் 13
  2. நன்னுல் 410, மயிலைநாதர் உரை மேற்கோள்
  3. நன்னூல் 411 முதல் 419
  4. நேமிநாதம் நூற்பா 92
  5. திருக்குறள் 45
  6. சிந்தியல் வெண்பா
  7. தொல்காப்பியம் இளம்பூரணர் உரை பேற்கோள்
  8. தொல்காப்பியம் இளம்பூரணர் உரை மேற்கோள்
  9. திருக்குறள் 72
  10. முத்தொள்ளாயிரம்
  11. திருக்குறள்
  12. நன்னூல் 416 மயிலைநாதர் உரை மேற்கோள், யாப்பருங்கலம் ஒழிபியல் 2 உரை மேற்கோள்
  13. நன்னூல் 417 மயிலைநாதர் உரை மேற்கோள்
  14. திருக்குறள் 475
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருள்கோள்&oldid=3408454" இலிருந்து மீள்விக்கப்பட்டது