மகாத்மா ஹன்ஸ்ராஜ்

மகாத்மா அன்சுராசு (Mahatma Hansraj) (1864 ஏப்ரல் 19-1938 நவம்பர் 14) இவர், ஆரிய சமாஜம் அமைப்பின் முக்கியத் தலைவரும், சிறந்த கல்வியாளருமாக அறியப்படுகிறார். மேலும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஓசியார்பூர் மாவட்டத்திலுள்ள பஜ்வாரா குறுநகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை அதே ஊரில் பெற்றார். பின்பு, லாகூர் மிஷனரி பள்ளியில் பயின்றவர் அரசுக் கல்லூரியில் பி.ஏ. இளங்கலை பட்டம் பெற்றவராவார். அளப்பரிய கல்விப் பணி ஆற்றியதால் மகாத்மா என்று போற்றப்பட்ட இவரை, லாலா அன்சுராசு என்றும் அழைக்கப்படுகிறார், சுவாமி தயானந்தரின் உரையால் ஈர்க்கப்பட்டு, அவர் நிறுவிய ஆரிய சமாசத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தயானந்தரின் மறைவுக்குப் பிறகு அவரது நினைவாக ஒரு (டிஏவி) கல்வி நிறுவனம் தொடங்கியவர்.[1]

மகாத்மா அன்சுராசு Mahatma Hansraj
பிறப்பு19 ஏப்ரல் 1864
பஜ்வார, ஓசியார்பூர், பஞ்சாப்,  இந்தியா
இறப்பு14 நவம்பர் 1938(1938-11-14) (அகவை 74)
பணிஆரிய சமாசத்தின் தலைவர், கல்வியாளர்.

இளமையும், கல்வியும்

தொகு

லாலா அன்சுராசு, பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள பஜ்வாரா நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தனது 12-வது (1876-ல்) அகவையில் தந்தையை இழந்து, குடும்பம் லாகூருக்கு குடியேறிய பிறகு, தன் அண்ணனின் பராமரிப்பில் வளர்ந்தார். இளமையிலேயே அறிவுக்கூர்மை மிக்க மாணவராகத் திகழ்ந்த அவர், சுவாமி தயானந்தரின் உரையை ஒருமுறை கேட்டார். அதுமுதல், சமூக சேவையே வாழ்வின் லட்சியம் என தீர்மானித்து ஆரிய சமாசத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். படிக்காத மக்களுக்கு கடிதங்கள் எழுதிக் கொடுத்தும், கடிதங்களை படித்துக் கூறியும் வந்தார். தயானந்தரின் மறைவுக்குப் பிறகு அவரது நினைவாக ஒரு கல்வி நிறுவனம் தொடங்க முடிவு செய்து. ஆங்கிலக் கல்வியோடு, இந்திய பாரம்பரிய வேத கலாச்சார கல்வி வழங்கும் பள்ளியை நிறுவுவது குறித்து சமாஜ உறுப்பினர்களுடன் தீவிரமாக ஆலோசித்தார்.[2]

பணியும், சேவையும்

தொகு

1886-ல் தனது 22 வயதில், லாகூரிலுள்ள ஆரியசமாஜ கட்டிடத்தில் தயானந்த் ஆங்கிலோ - வேதிக் (டிஏவி) பள்ளியை ஆரியசமாஜ சகாக்களுடன் இணைந்து தொடங்கி. அதேப் பள்ளியில் சம்பளம் பெறாமல் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், 40 ரூபாய் சம்பளத்தில் இறுதிவரை பணியாற்றினார். இதுதான் முதன்முதல் துவங்கிய டிஏவி பள்ளியாகும். இவரது தலைமையின் கீழ் இப்பள்ளி கல்லூரியாக வளர்ந்தது. லாகூரின் தலைசிறந்த பள்ளிகளில் ஒன்றாகவும் திகழ்ந்தது. தயானந்த் பிரம்ம வித்யாலயா, ஆயுர்வேத கல்லூரி, மகளிர் கல்லூரி, தொழில்நுட்ப பள்ளிகள், கல்லூரிகள் என இந்தியா முழுவதும் பரந்து விரிந்தது.[3]

இந்தியாவில் 1895-ல் பஞ்சம் ஏற்பட்டபோது, ஆரியசமாஜ அமைப்பு சார்பில் இவரது தலைமையில் 2 ஆண்டுகளுக்கு மீட்பு, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு மாநிலங்களிலும் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு, நிவாரணப் பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டார்.[4]

தலைமையும், எளிமையும்

தொகு

1911-ல் தயானந்த் கல்லூரியின் நிர்வாகக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட லாலா அன்சுராசு, லாகூர் டிஏவி கல்லூரியின் முதல்வராக 25 ஆண்டுகள் நெடும் பணிபுரிந்ததோடு. ஆரிய பிராதேசிக் பிரதிநிதி சபாவின் தலைவராகவும் பொறுப்பேற்றார். மேலும், இவர் சிறந்த சொற்பொழிவாளராக இருந்ததோடு பிரார்த்தனை, சுய பரிசோதனை, தேச பக்தி, மக்கள் சேவையையும் தன் சொற்பொழிவுகளில் வலியுறுத்தினார்.[2] 1927-ல் இந்தியா மற்றும் சர்வதேச ஆரியசமாச உறுப்பினர்களின் முதல் காங்கிரஸ் மாநாட்டுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மிக எளிமையானவராகவும். சம்பாதிக்கும் பணத்தை சேமித்துவைக்கும் பழக்கம் இல்லாதவராகவும். தனக்காக சிறு நிலம்கூட வாங்காமல், இறுதிவரை முன்னோரின் பழைய வீட்டிலேயே குடியிருந்தார்.[2]

மரணமும், மரபுரிமையும்

தொகு

மகாத்மா என்று போற்றப்பட்ட அன்சுராசு, பஞ்சாப் (பாக்கிஸ்தான்) மாநிலம் லாகூரில் தமது 74-வது வயதில் 1938 நவம்பர் 14-ல் மறைந்தார். பல கல்வி நிறுவனங்கள், மகாத்மா அன்சுராசு கல்லூரி, மகாத்மா அன்சுராசு கல்லூரி சாலை எனவும், தில்லி பல்கலைக்கழகம் உட்பட, அவரது பெயரிடப்பட்டுள்ளது. நாட்டின் பல நகரங்களிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வரும் டிஏவி கல்வி நிறுவனங்கள், மகாத்மா அன்சுராசின் கல்விச் சேவையை இன்றளவும் பறைசாற்றி வருகின்றன.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. veethi.com|Mahatma Hansraj Profile
  2. 2.0 2.1 2.2 தி இந்து தமிழ் சிந்தனைக் களம் » வலைஞர் பக்கம் Updated: April 19, 2016 10:38 IST
  3. aryasamajhouston.org Mahatma Hansraj
  4. speakingtree|HANSRAJ: A MOTIVATING MAHATMA
  5. aryasamaj.com|MAHATMA HANS RAJ|19th April 1864 to15th Nov. 1938.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாத்மா_ஹன்ஸ்ராஜ்&oldid=2744312" இலிருந்து மீள்விக்கப்பட்டது