மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

கணக்கெடுப்பு (census) என்று குறிப்பிட்ட சமயத்தில் ஒரு நாட்டின் தொகுப்பு ஒன்றிலுள்ள ஒவ்வொருவரையும் குறித்த தரவுகளை பெறுவதுக் குறிப்பிடப்படுகிறது.[1][2] பொதுவாக இது மக்கள்தொகை கணக்கெடுப்பைக் குறித்தாலும் விலங்குகள், வாகனங்கள் போன்ற தொகுப்புகளின் தரவுகளைப் பெறுதலும் உள்ளிட்டது. ஐக்கிய நாடுகள் வரையறைப்படி மக்கள்தொகை மற்றும் குடியிருப்புகள் குறித்த கணக்கெடுப்புகள் " தனித்துவ கணக்கெடுப்பாக, வரையறுக்கப்பட்ட பகுதியில் அனைவருக்கும் பொதுவானதாக, ஒரே நேரத்தில் மற்றும் வரையறுக்கப்பட்ட கால இடைவெளியில்" இருக்க வேண்டும்.மேலும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கிறது.[3] ஆங்கிலச் சொல்லான சென்சஸ் என்பது இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது. உரோமைப் பேரரசு காலத்தில் இராணுவ சேவைக்காக உடற்தகுதி பெற்ற அனைத்து ஆண்களைக் குறித்தப் பட்டியல் திரட்டப்பட்டது.

1925ஆம் ஆண்டு நெதர்லாந்தில் ஓர் கணக்கெடுப்பு அலுவலர் வாகனவீடொன்றில் வாழும் குடும்பத்தினை கணக்கெடுத்தல்

கணக்கெடுப்பு, ஓர் தொகையின் தெரிவுசெய்த பகுதியிலிருந்து தரவுகள் பெறப்படும் கூறிடலிலிருந்து வேறுபட்டது. சிலநேரங்களில் கணக்கெடுப்பின் இடைக்காலங்களில் கூறிடல் முறையில் தரவுகள் பெறப்படுவது உண்டு.

கணக்கெடுப்பு திட்டமிடுபவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வணிகங்கள் (சந்தைப்படுத்தல்), சமூகவியலாளர்கள் போன்றோருக்குப் பயனுள்ளதாக அமைகிறது. நாட்டு வளர்ச்சிக்கான திட்டப்பணிகளை வடிவமைக்கவும் மக்களாட்சித் தொகுதிகளை வெவ்வேறு நிலைகளில் தீர்மானிக்கவும் இவை பயனாகின்றன.

இந்தியாவில் கணக்கெடுப்பு தொகு

இந்திய மக்கள்தொகைப் பரம்பலைக் குறித்த தகவல்களைப் பெறும் முதன்மையான ஆவணமாக பத்தாண்டுகளுக்கொருமுறை எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைந்துள்ளது. முதல் இந்திய கணக்கெடுப்பு 1872ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அப்போது வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்தது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடந்த முதல் கணக்கெடுப்பு 1881ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. அதுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. 2010-11 ஆம் ஆண்டில் நிகழும் கணக்கெடுபு 15-வது மற்றும் விடுதலைக்கு பின்னதாக எடுக்கப்படும் 7-வது கணக்கெடுப்பு ஆகும்.[4] இது உலக வரலாற்றிலேயே எடுக்கப்படும் மிகப்பெரிய கணக்கெடுப்பாக அமையும்[5]

இப்பணியை 1948ஆம் ஆண்டு இந்திய கணக்கெடுப்பு சட்டத்தின் (1948 Census of India Act) கீழ் இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் மேற்கொள்கிறது. இந்தச் சட்டத்தின்படி கணக்கெடுப்பு நாட்களை முடிவு செய்யவும் கணக்கெடுக்கும் பணிக்கு எந்த குடிமகனையும் அழைக்கவும் அரசிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பிற்கு தேவைப்படும் தகவல்களை பிழையின்றி அளிப்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிழையான தகவல்களைக் கொடுப்பதற்கும் தகவல்களை மறுப்பதற்கும் தண்டனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மற்றுமொரு சிறப்பங்கமாக இச்சட்டத்தில் தனிநபர் தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்ற உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புத் தகவல்கள் மீளாய்விற்கோ நீதிமன்ற சாட்சியத்திற்கோ தரப்படாது.

கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடைபெறுகிறது:முதற்கட்டத்தில் இல்லங்களும் வீட்டெண்களும் பட்டியலிடப்படுகின்றன;இரண்டாம் கட்டத்தில் தனிநபர் தகவல்கள் பதியப்படுகின்றன.தற்போதைய கணக்கெடுப்பில் சூன் 1,2010 முதல் சூலை 15 வரை முதற்கட்ட கணக்கெடுப்பு நடந்தது. இரண்டாம் கட்டப் பணி பெப்ரவரி 9, 2011 முதல் பெப்ரவரி 28 வரை நடைபெறுகிறது. தற்போதைய கணக்கெடுப்பில் பெறப்படும் தரவுகள்: நபர் விபரம், குடும்ப தலைவருக்கு உறவு முறை, இனம், பிறந்த தேதி, வயது, திருமண நிலை, மதம், எஸ்.சி.,/எஸ்.டி., மாற்றுத்திறன், தாய்மொழி, அறிந்த பிற மொழி, எழுத்தறிவு, கல்விநிலையம் செல்லும் நிலை, அதிகபட்ச கல்வி, வேலை, தொழில், பிறந்த இடம், கடைசியாக வசித்த இடம், இடம்பெயர்ச்சிக்கான காரணம், கிராம/நகரில் தங்கிய விபரம், பிறந்த மொத்த குழந்தைகள், உயிருடன் வாழும் குழந்தைகள், கடந்த ஓராண்டில் பிறந்த மொத்த குழந்தைகள் போன்ற 29 கேள்விகளுக்கு பதில் சேகரிக்கப்படுகிறது.[6]

இலங்கையில் தொகு

இலங்கையின் கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்தாண்டு இடைவெளியில் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையால் எடுக்கப்படுகிறது.உள்நாட்டுப் போரின் விளைவாக கடந்த முப்பதாண்டுகளில் நாடுதழுவிய கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. போர் முடிந்த சூழலில் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நிகழ உள்ளது.[7] நாட்டின் அனைத்து கிராம நிலதாரி (GN) கோட்டங்களிலும் கணக்கெடுப்பு நடைபெறும்.

இலங்கையில் முதல் அறிவியல்பூர்வ கணக்கெடுப்பு 27 மார்ச்சு 1871ஆம் ஆண்டில் நடந்தது. கடைசி நான்கு கணக்கெடுப்புகள் 1963, 1971, 1981 மற்றும் 2001 ஆண்டுகளில் நடந்தது. ஈழப்போரின் விளைவாக 2001ஆம் ஆண்டு 18 மாவட்டங்களில் மட்டுமே எடுக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டில் கணக்கெடுப்பு மதிப்பீடு மட்டுமே மேற்கொள்ளப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Jon M. Shepard; Robert W. Greene (2003). Sociology and You. Ohio: Glencoe McGraw-Hill. பக். A–22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-828576-3 இம் மூலத்தில் இருந்து 2010-03-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100308100024/http://www.glencoe.com/catalog/index.php/program?c=1675&s=21309&p=4213&parent=4526. பார்த்த நாள்: 2011-02-26. 
  2. Arthur O' Sullivan; Steven M. Sheffrin (2003). Economics: Principles in action. Upper Saddle River, New Jersey 07458: Prentice Hall. பக். 334. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-063085-3 இம் மூலத்தில் இருந்து 2016-12-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161220014709/https://www.savvas.com/index.cfm?locator=PSZu4y&PMDbSiteId=2781&PMDbSolutionId=6724&PMDbSubSolutionId=&PMDbCategoryId=815&PMDbSubCategoryId=24843&PMDbSubjectAreaId=&PMDbProgramId=23061. பார்த்த நாள்: 2021-02-24. 
  3. United Nations (2008). Principles and Recommendations for Population and Housing Censuses. Statistical Papers: Series M No. 67/Rev.2. p8. ISBN 9789211615050.
  4. "வளமான பாரம்பரியம் கொண்ட "இந்திய சென்சஸ்':15-வது கணக்கெடுப்பு பணி பிப்.9-ல் துவக்கம்". தினமலர் இணையதளம். 2011-01-15. பார்க்கப்பட்ட நாள் 2011-02-26.
  5. "Census-2011 kicks off today – India – DNA". Dnaindia.com. 2010-04-01. பார்க்கப்பட்ட நாள் 2010-11-30.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-17.
  7. "Sri Lanka News". Sundayobserver.lk. 2010-05-16. Archived from the original on 2012-11-20. பார்க்கப்பட்ட நாள் 2010-11-30.