மக்லியொட் மருத்துவமனை, இணுவில்

இணுவில் ஆஸ்பத்திரி என்று பரவலாக அறியப்படுகின்ற, பெண்களுக்கான மக்லியொட் மருத்துவமனை 1898 ஆம் ஆண்டு செப்டெம்பர் 24 ஆம் நாள் அமெரிக்க மிசனால் இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள இணுவிலில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் மருத்துவர் ஜே. எச். கேர் இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.[1]. பரந்த நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இது ஒரு சிறந்த மகப்பேற்று மருத்துவமனையாக யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பெயர் பெற்றிருந்தது. வசதியான கட்டிடங்களும், அமைதியான சூழலும் இந்த மருத்துவ மனையின் சிறப்பு அம்சமாகும்.

பல தனிப்பட்டவர்களின் உதவியாலும் காலத்துக்குக் காலம் கட்டிடங்கள் கட்டப்பட்டு இது விரிவாக்கப் பட்டது. 1911 ஆம் ஆண்டில் இந் நிறுவனத்தால் பயன்பெற்றவர்களும் பிறரும் அளித்த நன்கொடைகள் மூலம் ரூ10,000 செலவில் புதிய மகப்பேற்றுப் பிரிவு அமைக்கப்பட்டது.[1] 1916 ஆம் ஆண்டிலும், 1918 ஆம் ஆண்டிலும் புதிய கட்டிடங்கள் சேர்க்கப்பட்டன. 1919 ல் ஏழை நோயாளர்களின் நலன் கருதிப் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது.

23 அக்டோபர் 1920 ஆம் ஆண்டின் மோர்னிங் ஸ்டார் பத்திரிகையில் வெளியான புள்ளி விபரங்கள்,[1] 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இந் நிறுவனத்தின் வளர்ச்சியைக் காட்டுகின்றன.

. 1908 1919
உள் நோயாளர் 882 2041
வெளி நோயாளர் 1905 3848
மகப்பேறு 141 488

நூறு ஆண்டுகளைக் கடந்து இந்நிறுவனம் இன்றும் இயங்கி வருகின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, ) பக்.336