மடவலைக் கல்வெட்டு

மடவலைக் கல்வெட்டு என்பது, இலங்கையின் தென்பகுதியில் உள்ள மடவலை என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிங்களக் கல்வெட்டு. இது கம்பளையில் இருந்து அரசாண்ட மூன்றாம் விக்கிரமபாகுவுக்கும், மார்த்தாண்டம் பெருமாள் என்பவனுக்கும் இடையிலான ஒரு உடன்படிக்கையைக் குறிக்கிறது. இந்த உடன்படிக்கை, விக்கிரமபாகுவின் ஆட்சிக்குட்பட்ட சில இடங்களின் சுங்கநிலைகளில் மார்த்தண்டம் பெருமாள் ஆட்களை நியமிப்பது பற்றியது. இது யாழ்ப்பாண அரசுக்கும், கம்பளை அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம் எனக் கருதப்படுகிறது.

உள்ளடக்கம் தொகு

இந்தக் கல்வெட்டு கம்பளை இராச்சியத்தில் உள்ள சிங்குருவானை, பலவிட்டை, மாத்தளை, தும்பறை, சாகமை துன்ரட்டை ஆகிய பகுதிகளின் சுங்க நிலைகளை மார்த்தாண்டம் பெருமாள் குறிப்பிட்ட சில பிராமணர்களின் பொறுப்பில் விடுவது குறித்து மார்த்தாண்டம் பெருமாளும், மூன்றாம் விக்கிரமபாகுவும் இணங்கிக்கொண்டது பற்றிக் கூறுகிறது. குறித்த பிராமணர்களின் பெயர்கள் கல்வெட்டில் உள்ளனவாயினும் அவை வாசிக்கக்கூடிய அளவுக்குத் தெளிவாக இல்லை.

பின்னணி தொகு

14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கைத் தீவில் இருந்த இராச்சியங்களில் யாழ்ப்பாண இராச்சியம் பலம் வாய்ந்ததாக இருந்தது. கம்பளை இராச்சியம் யாழ்ப்பாண அரசுக்குத் திறை செலுத்திவந்தது. இராசாவலிய, நிக்காய சங்கிரகய போன்ற சிங்கள நூல்கள், யாழ்ப்பாண அரசின் வரி சேகரிப்பாளர்கள் கம்பளை இராச்சியத்தில் இருந்ததாகக் கூறுகின்றன. இவர்களூடாக யாழ்ப்பாண அரசன் கம்பளை இராச்சியத்தில் வரி பெற்று வந்தான். மடவலைக் கல்வெட்டுக் குறிப்பிடும் உடன்படிக்கை மேற்சொன்ன வரி சேகரிப்புத் தொடர்பான நியமனமே எனலாம். கம்பளை இராச்சியத்தின் அரசனுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை ஆதலால், உடன்படிக்கையின் மறு தரப்பான மார்த்தாண்டம் பெருமாள் ஒரு அரசனாகவோ அல்லது ஒரு அரசின் பிரதிநிதியாகவோ இருப்பதே பொருத்தம்.[1] இக்கல்வெட்டுக் குறித்து ஆய்வு செய்த பரணவிதான, மார்த்தாண்டம் பெருமாள் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசர்களுள் ஒருவனாக வைபவமாலை கூறும் மார்த்தாண்ட சிங்கையாரியனாக இருக்கலாம் என்கிறார்.[2] மார்த்தாண்டம் பெருமாள் ஒரு அரசன் எனக் கொள்ளத்தக்க வகையில் எவ்வித குறிப்பும் கல்வெட்டில் இல்லாததால், உடன்படிக்கைக் காலத்தில் மார்த்தாண்டன் இன்னும் அரசனாகாத இளவரசனாகவே இருந்திருக்கக்கூடும் என்றும், யாழ்ப்பாண அரசன் வரோதய சிங்கையாரியன் சார்பில் இந்த உடன்படிக்கையை மார்த்தாண்டன் செய்திருக்கலாம் என்றும் பத்மநாதன் கருதுகிறார். இக்காலப் பகுதியில் இடம்பெற்ற யாழ்ப்பாண இராச்சியத்தின் கம்பளைப் படையெடுப்புக்குப் பின்னர் இது இடம்பெற்றிருக்கலாம் என்பதும் அவரது கருத்து.[3]

கம்பளைக்கு எதிராக 1359ல் யாழ்ப்பாணத்து அரசன் மேற்கொண்ட படையெடுப்பு முற்றாகத் தோல்வியுற்றதாகச் சிங்கள நூல்கள் குறிப்பிட்டாலும், மடவலைக் கல்வெட்டும், கோட்டகமைக் கல்வெட்டும் மேற்படி படையெடுப்பு கம்பளை அரசனான மூன்றாம் விக்கிரமபாகுவைப் பணிய வைத்தது என்பதையும், அதன் விளைவாக யாழ்ப்பாண இராச்சியம் இலங்கையில் அதன் முதன்மையான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டது என்பதையும் காட்டுகின்றன.

காலம் தொகு

இக்கல்வெட்டு கி.பி. 1359 ஐ அண்டிய காலப்பகுதியைச் சேர்ந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. குணசிங்கம், முருகர்., இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு, எம். வி. வெளியீடு தென்னாசியவியல் மையம் - சிட்னி, 2008. பக். 134.
  2. Pathmanathan, S., Kingdom of Jaffna, Part 1, Arul M. Rajendran, 1976. p. 244 (பரணவிதானவின் கட்டுரையில் இருந்து மேற்கோள்)
  3. Pathmanathan, S., 1976. p. 244, 245
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடவலைக்_கல்வெட்டு&oldid=3319574" இலிருந்து மீள்விக்கப்பட்டது