மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில்

வைத்தியநாதசுவாமி கோவில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது விருதுநகர் மாவட்டத்தின் மிகப் பெரிய சைவத்தலமாக விளங்குகிறது.

வைத்தியநாத சுவாமி கோயில்
மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில்
வடபுறம் சிவகங்கை தீர்த்த குளத்திலிருந்து கோயிலின் காட்சி
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விருதுநகர்
அமைவு:திருவில்லிபுத்தூர், மடவார்வளாகம்
கோயில் தகவல்கள்

கோயில் தொகு

இக்கோயில் விருதுநகர் மாவட்டத்தின் மிகப்பெரிய சிவத்தலமாக விளங்குகிறது. சிவனின் திருவிளையாடல்களில் 24 திருவிளையாடல்கள் இக்கோயிலில் நடத்தப்பட்டுள்ளது. இக்கோயிலின் வைத்தியநாதர் நோய் தீர்க்கும் பெருமான் என்பதால் இங்கு மகா அஷ்டமியன்று பக்தர்கள் சாப்பிட்ட இலைமீது அங்கப் பிரதட்சினம் செய்யும் வழக்கம் உள்ளது.

மூலவர் வைத்தியநாத சுவாமி
உற்சவர்
அம்மன்/தாயார் சிவகாமி அம்பாள்
தல விருட்சம் வன்னி மரம்
தீர்த்தம் சிவகங்கை
ஆகமம்/பூஜை
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்

சிறப்பு தொகு

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல் மூன்று நாள்கள் காலை சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படும் சிறப்புடையது.

மன்னர் திருமலை நாயக்கரின் தீராத வயிற்று வலியைத் தீர்த்தமையால், மன்னர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் பூஜை முடிந்த மணியோசை கேட்ட பிறகு தான் உணவருந்துவாராம். ஆலாட்சி மணிகளின் ஒலி கேட்பதற்காக சாலை நெடுகிலும் மணி மண்டபங்கள் / முரசு மண்டபங்கள் எழுப்பினார். கோவிலின் தல வரலாற்றிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும் பாதையில் சில பழைய மண்டபங்களை சிதிலமடைந்த நிலையில் இன்றும் காணலாம்.[1][2]

அமைவிடம் தொகு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-இராஜபாளையம் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 1கிமீ தொலைவில் நகராட்சி எல்லைக்குள் இக்கோயில் அமைந்துள்ளது.

போக்குவரத்து தொகு

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது. இக்கோவிலுக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம்: ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம்
அருகிலுள்ள வானூர்தி நிலையம்: மதுரை வானூர்தி நிலையம்.

கோயிலின் அஞ்சல் முகவரி தொகு

அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி திருக்கோயில்
மடவார்வளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.:626125

தொலைபேசி எண்: 91 4563 261262

தல வரலாறு தொகு

ஒரு ஏழைத் தம்பதியினர் குழந்தை வேண்டுமென சிவனிடம் வேண்ட அவர்கள் மீது கருணைகொண்ட சிவனின் அருளால் அப்பெண் கருவுற்றாள். மகப்பேறுகாலம் நெருங்கியது. உதவிக்கு வருவதாக இருந்த அவளது தாய் வராததால் அப்பெண் தன் தாயின் இருப்பிடம் நோக்கித் தனியே சென்றாள். சிறிது தொலைவு சென்றதும் அவளுக்கு வலி கண்டது. உதவி செய்ய யாரும் அருகில் இல்லை. தன்னைக் காக்கும்படி அவள் ஈசனை வேண்ட, ஈசன் அவளது தாயின் உருவில் வந்து அவளுக்கு உதவினார். குழந்தையும் சுகமாகப் பிறந்தது. விரலால் பூமியில் கீறி நீரை வரவழைத்து அவளை அருந்தச் செய்து அந்நீரே அவளுக்கு மருந்து என்றும் கூறினார். நீரை அருந்தியவள் நிமிர்ந்து பார்த்தபோது அங்கு யாரும் இருக்கவில்லை. அப்போது அவளது தாய் ஓடோடி வந்து கொண்டிருந்தாள். யாருமே இல்லாத அந்த இடத்தில் தனது பெண் சுகமாக குழந்தையைப் பெற்றெடுத்ததைக் கண்டு வியந்தாள். ஈசன் சிவகாமி அம்மையுடன் காளை வாகனத்தில் தோன்றி, அவள் தன்னிடம் கொண்ட பக்தியின் காரணமாகத் தான் வந்து அவளுக்கு உதவியதாகவும், அவளது தாகத்திற்கும் காயத்திற்கும் மருந்தாக அமைந்த அவ்விடத்துத் தீர்த்தம் காயக்குடி ஆறு என அழைக்கப்படும் எனவும், அவ்வாற்றில் முழுகி எழுந்து ஈசனை வழிபடுவோரின் நோய்கள் விலகும் எனவும் கூறி மறைந்தார்.

மதுரை வணிகர்கள் மதுரையிலிருந்து கேரளத்திற்கு இத்தலம் வழியாகச் செல்வர். முத்து, ஆடைகள், ஆபரணங்களை மதுரையிலிருந்து எடுத்துச் சென்று கேரளத்தில் விற்றுவிட்டு, திரும்பும்போது அங்கிருந்து மிளகு, வாசனைப் பொருட்களை வாங்கி வருவர். ஒருமுறை அவ்வாறு வண்டிகளில் மிளகு மூட்டைகளை ஏற்றி வந்தபோது மதுரைக்குள் நுழையும் முன் வரிசெலுத்தாமல் தப்பிப்பதற்காக மூட்டைகளில் இருப்பது உழுந்து என அதிகாரிகளிடம் பொய் சொல்லி ஏமாற்றி நுழைந்தனர். இருப்பிடம் சென்று பார்த்தபோது அத்தனை மூட்டைகளிலும் உண்மையாகவே உளுந்தாகவே இருந்தது. செய்த தவறை உணர்ந்த வணிகர்கள் மதுரை சொக்கநாதரிடம் சென்று தமது பாவச்செயலுக்கு மன்னிப்பு வேண்ட, அவரோ மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமியிடம் சென்று முறையிடுமாறு கூறினார். அவ்வண்ணமே அவர்களும் வேண்டித் தங்கள் பாவத்திலிருந்து மீண்டனர் என்பது இத்தலம் குறித்ததொரு மரபு வரலாறு.

பெயர்க் காரணம் தொகு

ஆடல் பாடல்களில் சிறந்த இரு பெண்கள் (மடவார்) இத்தலத்தில் தங்களது ஆடல், பாடல் மூலம் இறைவனுக்குத் தொண்டு செய்து வாழ்ந்தனர். அவர்களுக்குப் பொருளும் இருக்க வீடும் கிடைக்கச் செய்து அருளிய திருவிளையாடல் நிகழ்த்திய தலம் (வளாகம்) இது என்பதால் மடவார்வளாகம் என அழைக்கப்படுகிறது என்ற வரலாறும் உள்ளது.

படத்தொகுப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு