மட்டக்களப்பு மாவட்ட இடப்பெயர்கள்

இலங்கையின் கிழக்கே நீர்வளமும், நிலவளமும் பெற்றுச் சிறந்த நெற்களஞ்சியமாகத் திகழும் நாடு மட்டக்களப்பு. இது திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக அண்மைக்காலம் வரை கிழக்குப் பிரதேசம் (கிழக்கு மாகாணம்) என்று அழைக்கப்பட்டு வந்தது. மகாவலி கங்கையின் ஒரு கிளையான வெருகல் கங்கைப் பெரியாறு தொடக்கம் தெற்கே குமுக்கன் ஆறு வரையும் பரந்து நீண்டு கிடக்கும் ஏறத்தாள 400 கிலோ மீற்றர் நீளமும், 85 கிலோமீற்றர் அகலமும் கொண்ட வளமார்ந்த செழுமை நிறைந்த நிலப்பரப்பாக இப்பிரதேசம் திகழ்கிறது. இப்பிரதேசத்தின் அழகினை சுவாமி விபுலானந்தர் பின்வரும் பாடலில் மிக அழகாகக் கூறியுள்ளார்.[1]

"காவும் பொழிலும் கழிமுகமும் புள்ளணிந்த

ஏரியும் மல்கி இரத்தினத் தீவமென

ஆரியர் போற்றும் அளிசால் இலங்கையிலே

சீரார் குணதிசையைச் சேர்ந்து வளர்புகழும்

ஏராலியென்ற செந்நெல்லின் சுவைத்தீங் கன்னலொடு

தெங்கி னிளநீரும் தீம்பலவின் அள்ளமிர்தும்

எங்கும் குறையா இயலுடைய நன்னாடு

மட்டக் களப்பென்னும் மாநாடு"

மட்டக்களப்பின் பிரதேசங்கள் நீண்ட காலமாகக் கண்டி நாயக்க வம்ச அரசுடன் இணைந்திருந்த போதும், கிராமங்களின் ஊர்ப் பெயர்கள் தனித் தமிழிலேயே அமைந்திருந்தன. ஊர்களுக்கு பெயர்கள் அமையும் போது பொதுவாகவும், சிறப்பாகவும் அமைந்து காணப்படுவதே இயற்கை. அது போலவே மட்டக்களப்பு பிரதேசத்தில் இடப்பெயர்கள் காணப்படுகின்றன. பெரும்பாலான இடப்பெயர்கள் ஊர். குடி, கேணி, முனை, குடா, காடு, தீவு, துறை, வெளி ஆகிய விகுதிகளை பெயர்களாகக் கொண்டு காணப்படுகின்றன.

Sri Lanka Eastern Province locator map

ஊர் தொகு

மட்டக்களப்புப் பகுதியிலே மண்டூர், ஏறாவூர், நிந்தவூர், மகிழூர் போன்ற இடப்பெயர்களைக் காணமுடியும். இதுபோல ஈழத்திலும், தமிழகத்திலும் ஊர் என்னும் விகுதியைப் பெற்ற இடங்களைக் காணலாம். யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நல்லூர், புத்தூர், கரையூர், பாசையூர் என்பனவும், திருகேணமலைப் பிரதேசத்தில் தோப்பூர், சம்பூர், மூதூர், சேனையூர் என்பனவும், தமிழகத்திலே மருதூர், தெங்கூர், பனையூர், பாசூர், கடம்பூர், திருநாரையூர், கோழியூர், புலியூர், நல்லூர், புத்தூர் போன்ற ஊர்களும் காணப்படுகின்றன.[2] எனவேதான் தொல்காப்பியர் "ஏமப்பேரூர்ச்சேரியும்..." என்ற தொடக்கத்தையுடைய சூத்திரத்தைத் தந்தள்ளார்.[3] அதாவது ஊர் என்ற சொல் மக்கள் நிலையாக வாழும் இடப்பரப்பு என்ற பொருளைத் தருகிறது.

மண்டூர் - மண்டு மரங்கள் நிறைந்த குடியிருப்பாக இருந்து இந்தப் பெயரைப் பெற்றிருத்தல் வேண்டும். அதேபோல் அவ்வூர் தில்லைமண்டூர் என்ற பெயரையும் பெற்றுள்ளது. அவ்வூருக்கு அண்மையிலுள்ள மண்டுக்கோட்டைமுனை என்னும் ஊரும் மரத்தைக் கொண்டே இப்பெயரைப் பெற்றிருக்கிறது. ஏறாவூர் - இந்த ஊரின் பெயரோடு மட்டக்களப்புப் பகுதியில் வாழ்ந்த திமிலருக்கும், முக்குவருமிடையில் நிகழ்ந்த கலகங்கள் தொடர்புபட்டிருக்கின்றன. முக்குவர் வெற்றி பெறுவதற்காக பட்டாணியரைக் குடியேற்றித் திமிலரை மீண்டும் ஏற விடாமல் செய்ததனால் இப்பெயர் ஏற்பட்டதாகக் கதைகள் வழங்கி வருகின்றன.[4] இதையே சிங்கள மன்னர்களினால் குறிப்பிடப்படும் எகுலப்பற்று எனக் கொள்ள முடியும்.[5] பட்டாணியர் குடியேறிய பின்னரே அவ்வூருக்கு ஏறாவூர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆனால் 'ஏறா' என்ற சொல்லை எதிர்மறையாகக் கொள்பவர்களும் உள்ளனர். உடன்பாடாகக் கொள்வதே சிறப்புடையது. இதற்குத் தமிழிலக்கியங்கள் அரண் செய்கின்றன.[6] நிந்தவூர் - சொந்தமாகக் கொடுக்கப்பட்ட ஊர் எனப் பொருள்படும். இதனாலேதான் தமிழ் மொழியில் உறுதி எழுதுபவர்கள் 'சொந்தமும் நிந்தமும்'[7] என்னும் சொற்றொடரைப் பயன்படுத்துகின்றனர். மகிழூர் - என்பது மகிழ மரங்கள் நிறைந்த குடியிருப்பாக இருந்து இந்தப் பெயரைப் பெற்றிருத்தல் வேண்டும்.

குடி தொகு

மக்கள்தொகை பெருகி ஊரில் இடநெருக்கடி ஏற்பட்டதனால், ஊருக்கு அண்மித்த பகுதிகளில் இருந்த காடுகளை வெட்டி மக்கள் அங்கு குடியிருப்புக்களை அமைத்தனர். உறவு முறை கொண்ட பல குடியினர் சேர்ந்து வாழ்ந்த இடங்கள் குடியிருப்புக்களாகத் தோற்றம் பெற்றன. காத்தான் குடியிருப்பு, களுவாஞ்சிக் குடியிருப்பு, ஆறுமுகத்தான் குடியிருப்பு, சேனைக் குடியிருப்பு, கல்முனைக் குடியிருப்பு, குடியிருப்பு முனை, சிற்றாண்டிக் குடியிருப்பு, புதுக் குடியிருப்பு போன்றவை மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ளன. இவற்றில் காத்தான் குடியிருப்பு, களுவாஞ்சிக் குடியிருப்பு, சேனைக் குடியிருப்பு, கல்முனைக் குடியிருப்பு, சிற்றாண்டிக் குடியிருப்பு ஆகியவை தற்காலத்தில் அப்பெயர்களிலுள்ள ஈறு குறைந்து காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, சேனைக்குடி, கல்முனைக்குடி, சிற்றாண்டி என வழங்கி வருகின்றன. காத்தான் என்னும் வேடன் தனது குடிமக்களுடன், தற்போது 'சின்னப்பள்ளியடி' என வழங்கிவரும் இடத்தில் குடியேறி வாழ்ந்து வந்தான் எனவும், நாளடைவில் அவனின் பெயர்பட காத்தான்குடி என்று அழைக்கப்பட்டு வரலாயிற்று என்ற ஒரு பரம்பரைக் கதையையும் காத்தான்குடி என்னும் ஊர்ப்பெயரோடு அறிய முடிகிறது.[8]

பாண்டிருப்பு என்னும் பெயருள்ள ஊர் ஒன்று மட்டக்களப்புப் பகுதியிலே உண்டு. இங்கு பாண்டு வம்சத்தார் குடியிருப்புக்களை உண்டாக்கிய இடம் என்று பெயர்க் காரணம் கூறப்படுகிறது. இதை 'பாண்டுறுப்புமுனை' என 'மட்டக்களப்பு மான்மியம்' கூறுகிறது.[9] அதேபோல் பட்டிருப்பு என்றொரு கிராமமும் இங்குண்டு. கண்டியரசன் தனக்குரிய திறைகளை வன்னிமைகளிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த இடமே "பார்த்திருப்புவ" என்று சொல்லப்பட்டது. இந்தப் பெயரே திரிபடைந்து பட்டிருப்பு எனப் பெயர் பெற்றிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அக்காலத்தில் அரசாங்க அதிபராக இருந்து பாரிய சேவை செய்த 'கொட்றிங்ரன் பிரபு' தனது நூலில்[10] பின்வருமாறு கூறியுள்ளார். "PATTIRUPPUWA - An elevated or pavilion. e.g. the Octagon in Kandy, from which the king watched peraheras and other spectacles. The word is from Tamil - பார்த்திருப்பு - a place from which one sees"

கேணி தொகு

கேணி என்னும் ஈற்றையுடைய இடப்பெயர்கள் மட்டக்களப்புப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றன. மாங்கேணி, காயாங்கேணி, பனிச்சங்கேணி, தும்மங்கேணி, தாமரைக்கேணி, நாவற்கேணி, கருவேப்பங்கேணி, கறுவாக்கேணி, மீராங்கேணி, மீராலங்கேணி, களுவங்கேணி, ஐயங்கேணி, சுங்காங்கேணி என்பன இதில் அடங்கும். இவற்றுள் பெரும்பான்மை மரங்களின் பெயர்களையும், சிறுபான்மை தலைவன் பெயர்களையும் சார்ந்தே காணப்படுகின்றன.

முனை தொகு

கடலுக்குள் நீண்டிருக்கும் தரைப்பகுதி முனை என்று கூறப்படும். இத் தரைப்பகுதி கற்களாக இருந்தால் கல்முனை என்றும், மண்ணாக இருந்தால் மண்முனை என்றும் பெயர் பெற்றிருக்கின்றன. கல்முனை என்னும் பெயர் இலங்கையில் பல இடங்களில் காணப்படுகின்றது. வீச்சுக் கல்முனை, சொறிக்கல்முனை ஆகிய பெயர்கள் கல்முனையை விசேடித்துக் கூறப்படுவனவாகவுள்ளன. இவைபோலவே மருதமுனை, வீரமுனை, மகிழூர்முனை, நொச்சிமுனை, கல்லடிமுனை, நற்பிட்டிமுனை, மண்டுக்கோட்டைமுனை, கடுக்காமுனை, கோட்டைமுனை, பாலமுனை[11], குறிஞ்சாமுனை, தன்னாமுனை என்ற ஊர்ப் பெயர்களும் மட்டக்களப்புப் பகுதிகளில் உள்ளன.

கடலுக்குள் நீண்டிருக்கும் தரைப்பகுதி முனை என்று கூறப்படுவது போலவே "கோவளம்" என்றும் அழைக்கப்படும்.[12] சென்னை நகரத்திற்குத் தெற்கே கோவளம் என்றொரு ஊர் இருக்கின்றது. யாழ்ப்பாணம் காரைநகருக்கு மேற்காலுள்ள குறிச்சி ஒன்றுக்கும் கோவளம் எனப் பெயருண்டு. கற்கோவளம் என்றோர் இடம் பருத்தித்துறையில் இருக்கிறது. கல்முனை என்பதும் கற்கோவளம் என்பதும் ஒரே பொருளைக் கொடுப்பனவாகும்.

குடா தொகு

குடா என்பது கடல் தரைப்பகுதியினுள் உள்வாங்கிக் காணப்படுவதாகும். குடாக்கள் மீன்பிடிப் படகுகள் தங்கி நிற்பதற்கு ஏற்றனவாக அமைந்துள்ளன. இவை ஊர்களின் ஈற்றாக அமைந்திருக்கும் தாழங்குடா, புளியடிக்குடா, முதலைக்குடா, கல்குடா, பாசிக்குடா, கன்னங்குடா, புன்னைக்குடா, நெல்லிக்குடா, நாவற்குடா, காஞ்சிரங்குடா, சிரட்டையன்குடா, பாலக்குடா என்பன மட்டக்களப்புப் பிரதேசத்தில் உள்ளனவாகும்.

காடு தொகு

காடு என்ற ஈற்றுப் பெயர்கள் மட்டக்களப்புப் பிரதேசத்தில் பனங்காடு, நாவற்காடு, பலாக்காடு, மாங்காடு, முனைக்காடு, முனையக்காடு, பாலைக்காடு, வெட்டுக்காடு என்று வழங்கி வருகின்றன. யாழ்ப்பாணத்தில் நாவற்காடு, இடைக்காடு, சாவற்காடு, கட்டைக்காடு, புதுக்காடு. வெட்டுக்காடு என்ற ஊர்களும், மன்னார் பகுதியில் சூரியக்கட்டைக்காடு, கள்ளிக்கட்டைக்காடு என்ற ஊர்களும் உண்டு. தமிழகத்தில் மறைக்காடு, தலைச்சங்காடு, தலையாலங்காடு, சாய்க்காடு, கொள்ளிக்காடு, ஆலங்காடு, பனங்காடு, வெண்காடு முதலிய காடு ஈற்றுப் பெயர்களைத் தொகுத்து அப்பர் சுவாமிகள் பாடியுள்ளார்.[13]

தீவு தொகு

நாகவன்தீவு, கள்ளியந்தீவு, வவுணதீவு, திமிலதீவு, புளியந்தீவு, ஈச்சந்தீவு, கரையாக்கன்தீவு, மாந்தீவு, காரைதீவு, சல்லித்தீவு, மல்லிகைத்தீவு, மகிழடித்தீவு, கோயிற்போரதீவு, பெரிய போரதீவு, முனைத்தீவு, கருங்கொடித்தீவு ஆகிய ஈற்றுப் பெயர்களையுடைய இடப்பெயர்கள் மட்டக்களப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ளன.

காரைதீவு என்னும் ஊரின் பெயர் இலங்கையின் வேறு சில இடங்களிலும் காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் காரைதீவு காரைநகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.[14] இன்னும் ஒரு காரைதீவு புத்தளம் மாவட்டத்தில் உள்ளது. மட்டக்களப்பிற்குத் தெற்கே 36 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள காரைதீவு காரேறுதீவு[15], காரேறு சோலை[16] எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் காரைதீவு என்னும் பெயரே பிரபலமாக உள்ளது. சுவாமி விபுலாநந்தர் பிறந்த ஊரும் இதுதான். இவ்வூர் காரைதீவு எனப் பெயர் பெற்றிருந்தாலும் தீவல்ல. ஒரு காலத்தில் தீவாக இருந்திருக்கலாம். 'காரேறு மூதூர்' எனக் கொண்டு "கார் காத்த வேளாளரின் தீவு" எனவும் வழங்குவர்.[17]

திமிலதீவு என்பது ஆதிகாலத்தில் தென்னிந்தியாவிலே மீன் பிடிப்பதைத் தொழிலாகக் கொண்ட ஒரு வகுப்பார் வாழ்ந்தனர். அவர்கள் மட்டக்களப்புப் பிரதேசத்தில் குடியேறி, தமது மீன் பிடித்தல் தொழிலுக்கு வாய்ப்பாக இருந்த இடத்திலே வசித்தனர். அவர்கள் வாழ்ந்த இடமே திமிலதீவு என அழைக்கப்படுகிறது.[18] "திமில்"[19] என வழங்கப்பட்ட தோணிகளை வைத்து அவர்கள் மீன் பிடித்தனர்.

புளியந்தீவு என்னும் சிறிய தீவு மட்டக்களப்பில் வரலாற்றுச் சம்பவங்கள் பொருந்தியதாகக் காணப்படுகின்றது. அதிகளவான புளியமரங்களைக் கொண்டிருப்பதால் இப்பெயரைப்[20] பெற்றதாகவும், புலியன் என்னும் வேடர்குலத் தலைவன் இங்கிருந்து ஆட்சி செய்ததனால் அவனுடைய பெயரினால் 'புலியன்தீவு' என அழைக்கப்பட்டு, பின்னர் மொழிச்சிதைவினால் 'புளியன்தீவு' என்று மாறியதாவும் கொள்ள இடமுண்டு. இதுவே மட்டக்களப்பின் தலைநகராவும் விளங்கியது.

துறை தொகு

கடல் வாணிபத்துக்குச் சாதகமாக இருந்த இடங்கள் துறை என்ற ஈற்றுப் பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டு வந்தது போல மட்டக்களப்புப் பிரதேசத்திலும் சில ஊர்கள் அமைந்துள்ளன. சம்மாந்துறை, கண்டபாணத்துறை, மாவிலங்கத்துறை, அம்பிளாந்துறை, கொம்மாதுறை, திருப்பெருந்துறை, வேப்படித்துறை ஆகிய ஊர்களைக் காணலாம்.

'சம்பான்' எனற வகைத் தோணிகள் வந்து அடைந்த துறையே சம்மாந்துறை என அழைக்கப்படுகின்றது. சம்மாந்துறை முற்காலத்தில் மலேசிய வர்த்தகர்களின் பொருட்களை இறக்கும் ஒரு பிரசித்தி பெற்ற துறையாகவே இருந்திருக்கின்றது.[21] கண்டபாணத்துறை பற்றி கோவலனார் கதையில் கண்டபாணம் என்று கண்ணகி வழக்குரை கூறும்.[22],[23] அம்பிளாந்துறை முன்பு 'அம்பிலாந்துறை' என அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது.[24] 'பெருந்துறை' அல்லது பெரியதுறை என்னும் ஊர் மட்டக்களப்பு வாவியின் அந்தத்தில் அமைந்திருக்கின்றது. இத்துறையே மட்டக்களப்பின் பெரிய துறையாக இருந்திருத்தல் வேண்டும். இங்கே 1800 ம் ஆண்டளவில் பாடசாைலயொன்று இருந்ததாக அறிய முடிகிறது.[25] இப்பெருந்துறை முருகன் மீது 1882ம் ஆண்டு வித்துவான் ச. பூபாலபிள்ளை பதிகம் பாடியுள்ளார்.[26]

வெளி தொகு

வெளி என்னும் ஈற்றுப் பெயர்களைக் கொண்ட ஊர்களின் பெயர்களும் மட்டக்களப்புப் பிரதேசத்தில் தாண்டவன்வெளி, கதிரவெளி, சந்திவெளி, குளவெளி, புட்டுவெளி, நாவிதன்வெளி, குருமன்வெளி, வெல்லாவெளி, கந்தன்வெளி, பன்குடாவெளி, பண்டாரியாவெளி, வெட்டுக்காட்டுவெளி காணப்படுகின்றன. இந்த வெளி எனும் ஈற்றுப் பெயர்கள் திரிபுபட்டு வலை, வல, வளை,[27] வெல, வில் ஆகிய ஈற்றுக்களைக் கொண்ட ஒலுவில். கோளாவில், பொத்துவில், எருவில், தம்பிலுவில், களுதாவளை ஆகியவற்றையும் நோக்கலாம்.

ஏனைய ஈற்றுப் பெயர்களைக் கொண்ட இடப்பெயர்கள் தொகு

குளம் - கிரான்குளம், கொத்துக்குளம். ஒல்லிக்குளம்.

அடி - நாவலடி, அரசடி, கல்லடி, மாவடி, புளியடி, புளியங்கண்டடி, செங்கலடி, மடத்தடி, சவுக்கடி, மண்டபத்தடி, திண்ணையடி, கருங்கிண்ணையடி, ஓட்டமாவடி, கண்டலடி.

மடு - பாலமீன்மடு, கோரைக்கல்லிமடு, கொடுவாமடு, முடக்குமடு, பாலமடு, பாலையடிமடு, ஒல்லிமடு, வட்டிபோட்டமடு.

வெட்டுவான் - முள்ளிவெட்டுவான், மயிலவெட்டுவான், வேப்பவெட்டுவான், கொண்டவெட்டுவான்.

ஓடை - களியோடை, மாவடியோடை, மீராவோடை, காங்கேயனோடை.

பிட்டி - பட்டியடிப்பிட்டி. வளத்தாப்பிட்டி.

வத்தை - மல்வத்தை, தம்பலவத்தை, சின்னவத்தை, பாக்கியாவத்தை.

மலை - ஆயித்தியமலை, அன்னமலை, புல்லுமலை.

ஆறு - கரடியனாறு, பெரியகல்லாறு,கஞ்சிகுடிச்சாறு, கோட்டைக்கல்லாறு.

காமம் - பழுகாமம், இறக்காமம், சாகாமம், உறுகாமம்.

சேனை - வாழைச்சேனை, பாவக்கொடிச்செனை, பொன்னாங்கணிச்சேனை, பருத்திச்சேனை, குரக்கஞ்சேனை, மணற்சேனை, இலுப்பையடிச்சேனை, கூழாவடிச்சேனை, முறக்கட்டாஞ்சேனை, அட்டாளைச்சேனை, வரிப்பத்தான்சேனை.

இவற்றை விட ஆரையம்பதி, குருக்கள்மடம், ஓந்தாச்சிமடம், நீலாவணை, சாய்ந்தமருது, அட்டப்பள்ளம், பட்டிமேடு, ஆலையடிவேம்பு, செட்டிபாளையம், கரவெட்டி, கிட்டங்கி, சவளக்கடை போன்ற ஈற்றுப் பெயர்களைக் கொண்ட ஊர்களும் உண்டு.

மட்டக்களப்புக்கு அணித்தாக அமிர்தகழி என்னும் ஊர் உள்ளது. இதைப் பற்றி சுவாமி விபுலாநந்தர் அவர்கள்

"மட்டக் களப்பென்னும் மாநாடாந் நாட்டினிடைப்

பட்டினப் பாங்கர்ப் பரந்ததோ ணாமுகமாய்

ஐங்கரன் கோயில் அமிர்தகழிக் கணித்தாய்ப்

பொங்ககழி யுட்புகும் நீர்நிலை யொன்று..." என்று கூறியுள்ளார். இந்த ஊர் மட்டக்களப்பு வாவியின் கழிமுகத்தில் அமைந்திருப்பதனால் கழி என்னும் ஈறு கொண்டு முடிகிறது. இது "அமிர்தநதி" என்றும் அழைக்கப்படும். கழி என்னும் விகுதி ஆழமற்ற நீர்நிலை என்ற கருத்தைக் கொடுப்பதனால், அமிர்தநதி என்ற பெயரே அமிர்தகழி என்று வழங்கப்படுகிறது எனக் கருத இடமுண்டு. அதனை மாமாங்கம் என்றும், அங்குள்ள கோயிலில் வீற்றிருக்கும் பிள்ளையாரை "மாமாங்கேஸ்வரர்" என்றும் அழைப்பர். மாமாங்கம் என்பது மாகாமம் --- மாமகம் என்பதன் திரிபாகும். மட்டக்களப்பு மான்மியம் அதனை "மாமாகங்கை" என்று கூறியுள்ளது.[28]

ஊறணி என்றதொரு சிறிய கிராமம் மட்டக்களப்புக்கு அண்மையாக உள்ளது. இது ஊரார் உண்ணும் நீரையுடையதால் ஊருணி என்ற பெயரைப் பெற்று, பின்னர் ஊறணி என மருவியதாகக் கூறுவர். ஊர், உண். நீர் என்னும் சொற்கூட்டமே ஊறணியாக மாறியிருத்தல் வேண்டும். "ஊருணி நீர்நிறைந்தற்றே..." என்னும் திருக்குறள் மூலம் அச்சொல்லின் பழைமை விளங்கும்.

மட்டக்களப்புப் பிரதேசத்திலே திமிலருக்கும், முக்குவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் போது, திமிலரைத் துரத்தியடித்து விட்டுத் திரும்பி வந்த சந்தித்த இடம் சந்திவெளி என்றும், அவர்கள் அனைவரும் இளைப்பாறிய இடம் வந்தாறுமூலை என்றும், எதிரிகளைக் கொன்றழித்த இடம் சத்துருக்கொண்டான் என்றும் கூறப்பட்டுள்ளது.[29] இரண்டு தரப்பாரும் போர் புரிந்த இடம் போரதீவு எனவும் அழைக்கப்பட்டது.[30]

இன்னும் சில இடப்பெயர்கள் பற்றி மட்டக்களப்பு மான்மியம், தம்பட்டை என்பதை தம்பட்டார் ஊர் என்றும் , தம்பிலுவில் என்பதை தம்பதிவில் என்றும் , பாணமை(பாணகை)என்பதை பாலர் நகை என்றும் , சங்குமன்கண்டி என்பதை சங்குமங்கண்டு என்றும் , வீரமுனை என்பதை வீரர்முனை என்றும், நற்பிட்டிமுனை என்பதை நாப்புட்டிமுனை என்றும் கூறுகின்றது.

உன்னிச்சை என்பது ஒரு குளத்தின் பெயர். அது "வன்னிச்சை" என்றதொரு பெண்ணின் ஆட்சியின் கீழ் இருந்திருக்க வேண்டும். வன்னிச்சைக்குளம் என்பதே உன்னிச்சைக்குளம் எனத் திரிபடைந்திருக்கின்றது. அதேபோல் "வன்னிச்சங்கேணி" பணிச்சங்கேணியாக மாறியிருக்கின்றது. இங்கு வன்னிச்சையின் ஆட்சி நிலவியதற்குச் சான்றாக இங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களும், சாசனங்களும் இருக்கின்றன.

அம்பாறை என்பது அம்பாள் ஏரி என்பதன் மாற்றம் என எஸ்.ஓ.கனகரத்தினம் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்.[31] ஆனால் இன்று அழகிய பாறைகளையுடைய இடம் என்ற பொருளில் 'அம்பாற' என்று, தமிழ் பெயர் சிங்கள மாற்றம் பெற்று அழைக்கப்படுகின்றது.

கிழக்கிலங்கையிலே உள்ள பிரதான தலங்களில் ஒன்றான திருக்கோவில் முன்பு நாகர்முனை என்று அழைக்கப்பட்டது.[32] இதன் தலபுராணத்தில் " அசுரனை அழிப்பதற்கு முருகக்கடவுள் எறிந்த வேல், உக்கிரம் தாங்க முடியாது கடல் நோக்கி வரும் வழியில் மூன்று தடாகங்களை ஏற்படுத்தி, வாகூர மலையைப் பிளந்து சமுத்திரத்தில் மூழ்கியிருந்ததைக் கண்டு, வேடர்கள் அதனை ஆராதித்தனர் எனவும், தமிழரின் இரண்டாவது படைெயழுச்சிக் காலத்தில் இங்கு வந்திருந்த சோழ அரசர்கள் இந்தியாவிலிருந்து கற்களைக் கொண்டு வந்து திருக்கோயிலைக் கட்டி முடித்தார்கள் எனவும், அப்போது வடக்குத் திசையிலிருந்த வேல் கிழக்குத் திசைக்குத் திரும்பியதனால் திருக்கோவில் எனப் பெயர் பெற்றது." என்று கூறப்பட்டிருக்கிறது.[32] இது போலவே கொக்கட்டிச்சோலை கிராமத்தில் கோயில் கொண்டிருக்கும் "தான்தோன்றீஸ்வரர்" ஆலயத்துக்கும் பரம்பரைக் கதைெயான்று உண்டு.

எப்படியிருந்தபோதிலும், மட்டக்களப்புப் பிரதேசத்தின் ஊர்ப் பெயர்கள் இயற்கையை ஒட்டி அமைந்திருந்த போதிலும். அவற்றில் பெரும்பாலானவை பரம்பரைக் கதைகளையும் கொண்டுள்ளன என்பதையும் அவதானிக்க முடிகிறது. சில ஊர்ப் பெயர்கள் மட்டக்களப்பின் சரித்திரப் பின்ணணியுடன் தொடர்புடைய வரலாற்றுச் சம்பவங்களை அழிந்து போகாமல் பாதுகாக்கின்றன என்ற உண்மையைக் காண முடிகின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. யாழ்நூல் - விபுலாநந்தர் சுவாமி, பக்கம் 7. கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சாவூர் - 1947
  2. திருநாவுக்கரசர் தேவாரம்.-அடைவுத் திருத்தாண்டவம்-4 "பிறையூரும் சடைமுடியெம் பெருமா னாரூர்..."
  3. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - 37
  4. மட்டக்களப்பு மான்மியம் - வித்துவான் எப்.எக்ஸ்.நடராசா - பக்கம்-8
  5. மட்டக்களப்புத் தமிழகம் - வித்துவான் பண்டிதர் வி.சீ.கந்தையா - பக்கம்-400
  6. நாலடியார் 14 "தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா..."
  7. H.W.Codrington - Glossary of Native Foreign and Anglicized Words. P-40, Government Printer,Ceylon,Colombo (1924)
  8. "காத்தான்குடி", சிறிலங்கா - கே.எம்.எம்.நவவி - பக்கம் 27, அரசாங்க சமாச்சாரப்பகுதி வெளியீடு,கொழும்பு (1960)
  9. மட்டக்களப்பு மான்மியம் - வித்துவான் எப்.எக்ஸ்.நடராசா - பக்கம்-59
  10. H.W.Codrington - Glossary of Native Foreign and Anglicized Words. P-45, Government Printer,Ceylon,Colombo (1924)
  11. இப்பெயர் மட்டக்களப்பில் மூன்று ஊர்களுக்கு உண்டு.
  12. தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி.சேதுப்பிள்ளை - பக்கம் 46, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை (1956)
  13. திருநாவுக்கரசர் தேவாரம்.-அடைவுத் திருத்தாண்டவம்-6 "மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்..."
  14. காரைநகர் மான்மியம் - வித்துவான் எப்.எக்ஸ்.நடராசா - பக்கம்-35
  15. வசந்தன் கவி - சுவாமி விபுலாநந்தர் - 'லோகோபகாரி ஆண்டு மலர் - பக்கம்-49
  16. கண்ணகை அம்மன் குளுத்திப் பாடல் முதலிய நான்கு நூல்கள் - ஊர் சுற்றுக் காவியம்-27, வித்துவான் பண்டிதர் வி.சீ.கந்தையா
  17. Monograph of Batticaloa District of the Eastern Province, Ceylon - S.O.Canagaratnam - p.80
  18. மட்டக்களப்பு மான்மியம் - வித்துவான் எப்.எக்ஸ்.நடராசா - பக்கம்-5-6
  19. புறநானூறு - 24 "தின் திமில் வன் பரதவர்..."
  20. Monograph of Batticaloa District of the Eastern Province, Ceylon - S.O.Canagaratnam
  21. "Batticaloa Names", Ceylon Daily News - 29.01.1937 - Mrs. Rani Masilamani
  22. கோவலானர் கதை, பக்கம்-19, மா.சே.செல்லையா (பதிப்பாசிரியர்), கலாபவன அச்சகம், பருத்தித்துறை.
  23. கண்ணகி வழக்குரை, வித்துவான் பண்டிதர் வி.சீ.கந்தையா, பக்கம்-42, பாடல்-152
  24. மட்டக்களப்பு மான்மியம் - வித்துவான் எப்.எக்ஸ்.நடராசா - பக்கம்-21
  25. Buddhism in Ceylon under Christian Power, P-29-30, T.Vimalananda, M.D.Gunasena, Colombo (1963)
  26. பெரியதுறைத் திருமுருகர் பதிகம், வித்துவான்.ச.பூபாலபிள்ளை (1882)
  27. வடமாகாண இடப்பெயர்களின் வரலாறு, ச.குமாரசுவாமி, பக்கம்-43
  28. மட்டக்களப்பு மான்மியம் - வித்துவான் எப்.எக்ஸ்.நடராசா - பக்கம்-32
  29. மட்டக்களப்பு மான்மியம் - வித்துவான் எப்.எக்ஸ்.நடராசா - பக்கம்-7,8
  30. ஈழத்து ஊர்ப்பெயர்கள்(கிழக்கிலங்கை), புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை, பக்கம்-10
  31. Monograph of Batticaloa District, S.O.Canagaratnam.P.14
  32. 32.0 32.1 மட்டக்களப்பு மான்மியம் - வித்துவான் எப்.எக்ஸ்.நடராசா - பக்கம்-4,5,25