மதுரை வாயில் காப்புக்களங்கள்
மதுரை மாநகரின் கோட்டை வாயிலைக் கடந்து மாதரி தன் இல்லம் செல்கிறாள். இதனைக் கூறும் சிலப்பதிகாரம் மதுரைக் கோட்டை வாயிலில் இருந்த படைத்தளங்களை அடுக்கிக் கூறுகிறது. [1]
- மிளை என்னும் காவல்-காடு
- கிடங்கு என்னும் அகழி
- திருட்டுத்தனமாக நுழைபவர்களை எய்து தாக்கும் வில்-பொறி
- திருடர்களைத் தாக்கும் ஊகக் குரங்கு
- கல் வீசித் தாக்கும் கவண்-பொறி
- தண்டிக்கத் தலையில் ஊற்றும் சூடான நெய்
- தண்டிக்கத் தலையில் ஊற்றும் சூடான வெல்லப்பாகு
- இரும்பு வடிக்கும் உலைக்களம்
- வீசித் தாக்கக் வைக்கப்பட்டிருந்த கூடை
- தூக்கு மாட்டும் தூண்டில்
- தொலைவில் இருப்போரை மாட்டி இழுக்கும் தொடக்கு என்னும் தொரட்டு வகை (வாங்கறுவாள்)
- ஆணின் தலை போல் உருவம் கொண்ட அடுப்பு. (தண்டனை வழங்க உயிருடன் எரிக்கும் அடுப்பு)
- இரண்டு கால்களை இரண்டு கவட்டைகளில் கட்டித் தொங்கவிட்டுத் தண்டனை வழங்கும் கவை
- ஆள் குத்தப்பட நிறுத்திய கழு-மரம்
- அறியாமல் விழுந்து சாகும்படி பொய்யாக அமைக்கப்பட்ட புதைக்குழி
- உள்ளே நுழைந்தவர் வெளியில் வரமுடியாமல் செய்யும் புழைவாயில்
- கோட்டைக் கதவை அடைக்கும் ஐயவித் துலை-மரம்
- கையில் குத்தும் ஊசிகள்
- உசுப்பி விட்டால் தாக்கும் ‘சிரல்’ என்னும் பறவை, பழக்கப்படுத்தப்பட்ட பன்றிகள்
- முரசு
- எழு என்னும் ஈட்டி
- சீப்பு போல் பல்லுள்ள வாள்
- கணைகள் வைத்திருக்கும் கணைய அறை
- அடிக்கும் கோல்
- குந்தம் என்னும் ஈட்டி
- வேல்
முதலானவும் பிறவும் இருந்தன.
அடிக்குறிப்பு
தொகு- ↑
மிளையும், கிடங்கும், வளை வில் பொறியும்,
கரு விரல் ஊகமும், கல் உமிழ் கவணும்,
பரிவுறு வெந் நெயும், பாகு அடு குழிசியும்,
காய் பொன் உலையும், கல் இடு கூடையும்,
தூண்டிலும், தொடக்கும், ஆண்டலை அடுப்பும்,
கவையும், கழுவும், புதையும், புழையும்,
ஐயவித் துலாமும், கை பெயர் ஊசியும்,
சென்று எறி சிரலும், பன்றியும், பணையும்,
எழுவும், சீப்பும், முழு விறல் கணையமும்,
கோலும், குந்தமும், வேலும், பிறவும்,
ஞாயிலும், சிறந்து, நாள் கொடி நுடங்கும்
வாயில் கழிந்து; தன் மனை புக்கனளா (சிலப்பதிகாரம் 15 அடைக்கலக்காதை)