மத்தவிலாசம்
மத்தவிலாசம் (मत्तविलासप्रहसन, மத்தவிலாச பிரஹசனம்) கி.பி 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர் முதலாம் மகேந்திரவர்மரால் இயற்றப்பட்ட ஒரு சமற்கிருத அங்கத நாடகம். இதனைத் தவிர பகவதஜ்ஜூகம் என்ற நாடகத்தையும் மகேந்திரவர்ம பல்லவர் இயற்றியுள்ளார்.
ஒரு பகுதி நாடகமான மத்தவிலாசம் சைவப் பிரிவுகளான கபாலிகம், பாசுபதம் ஆகியவற்றின் பழக்க வழக்கங்களையும் புத்த துறவிகளையும் பகடி செய்கிறது. பல்லவப் பேரரசின் தலைநகரான காஞ்சிபுரத்தில் மது போதையில் நிதானமிழந்திருக்கும் கபாலிகன் சத்யசோமன் அவனது மனைவி தேவசோமா ஆகியோரின் செய்கைகளை விவரிக்கிறது. புத்த துறவி நாகசேனன், பாசுபத பிரிவைச் சேர்ந்த பாசுபதன் ஆகியோர் இந்நாடகத்தின் பிற முக்கிய கதை மாந்தர். சைவ, புத்த மதங்களை நையாண்டி செய்வதோடு, 7-ஆம் நூற்றாண்டு காஞ்சிபுரத்தின் தோற்றத்தைப் பற்றியும் இந்நாடகம் விரிவாகப் பேசுகிறது.