மம்மி வாட்டா

மம்மி வாட்டா (Mami Wata அல்லது Mammy Water) என்பது மேற்கு, மத்திய, தெற்கு ஆப்பிரிக்காவிலும், அவர்கள் குடியேறிய அமெரிக்கக் கண்டத்திலும் வணங்கப்படும் ஒரு தாய் தெய்வம், தண்ணீர் தெய்வம் ஆகும். இத்தெய்வம் பெரும்பாலும், பெண்தெய்வமாகவே வணங்கப்படுகிறது என்றாலும் சில இடங்களில் ஆண் தெய்வமாகவும் வணங்கப்படுகிறது. இயற்கையைத் தெய்வமாக வழிபடும் மரபு உலகம் முழுவதும் இருந்துள்ளது. கிறிஸ்துவம், இசுலாம், இந்து போன்ற பெரும் மதங்கள் தோன்றுவதற்கு முன்பு இருந்த நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் இயற்கையைக் குறிப்பவைதான். மம்மி வாட்டா அம்மாதிரியான தெய்வங்களுள் ஒன்று.[1]

மம்மி வாட்டா
ஜெர்மானிய ஓவியரால் வரையப்பட்ட மம்மி வாட்டாவின் சமகால ஓவியம் ("serpent priestess" - Schleisinger)
ஏற்கும் சபை/சமயங்கள்Haitian Vodou, நாட்டுப்புற கத்தோலிக்கம், யோருபா மதம், West African Vodun, லூசியானா பில்லி சூனியம்
சித்தரிக்கப்படும் வகைபாம்புகள், முத்துக்கள், தங்கம், இரத்தினங்கள்
பாதுகாவல்தண்ணீர், கடல், நல்லவன், சந்தை, கணிப்பு, உடல் நலம், நல்வாய்ப்பு, செல்வம், இசை

உருவம்

தொகு

இத்தெய்வத்தின் முடி நீண்டதாகவும், சுருண்டும், கறுத்தும் காணப்படுகிறது.[2][3] மம்மி வாட்டா உருவம் கலை ரீதியாக இன்றும் கொண்டாடப்படும் தொன்ம வடிவமாக உள்ளது. மம்மி வாட்டா சிலைகள் கி.பி. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனச் சொல்லப்படுகின்றன. இன்று கிடைக்கும் மம்மி வாட்டா ஓவியங்கள், மிகப் பிரம்மாண்டமாக காட்சி தருகின்றன. அடர்ந்த சுருள் கூந்தலை விரித்துப் போட்டிருக்கும் மம்மி வாட்டா தோளின் குறுக்காக மலைப்பாம்பை அணிந்திருப்பாள்.[4][5][6] பழமையான சிலைகளிலும் இந்த உருவமே செதுக்கப்பட்டிருக்கிறது; ஆடைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை. பிற்காலப் படங்கள் மம்மி வாட்டாவை ஆடையுடன் பிரம்மாண்டமாகச் சித்திரிக்கின்றன. மம்மி வாட்டா கோயில்கள் ‘மமஸ்ஸீ’ (mamaissii) என அழைக்கப்படுகின்றன. இந்தக் கோயில்களில் பெண்களே பூசாரிகளாக உள்ளனர். அவர்களும் ‘மமஸ்ஸீ’ என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார்கள். தமிழ்த் திராவிட வழிபாட்டுக்கும் மம்மி வாட்டா வழிபாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக விவியன் ஹண்டர் ஹிண்ரோவின் ஆய்வு முடிவு சொல்கிறது.

மிகப் பழமையான மம்மி வாட்டாவின் கரு எனச் சொல்லப்படும் ஒரு வழிபாட்டுச் சிற்பத்தைத் தமிழ் லிங்க வழிபாட்டுடன் ஒப்பிட்டு இந்த முடிவுக்கு ஹிண்ரோ வருகிறார். இந்தியாவிலும் தண்ணீரைப் பெண் தெய்வமாக வழிபடும் வழக்கம் இருக்கிறது. இங்குள்ள காளி வழிபாட்டுடனும் இதை ஒப்பிடுகிறார் அவர்.

வரலாறு

தொகு

மம்மி வாட்டா, பரவலாக ஆப்பிரிக்கா முழுவதும் வணங்கப்பட்டுவரும் பெண் தெய்வம். இதன் வரலாறு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு வரை செல்கிறது. மம்மி வாட்டா என்ற சொற்களின் அர்த்தம் ‘தண்ணீர்த் தாய்’ எனச் சொல்லப்படுகிறது. Water Mother என்னும் ஆங்கிலச் சொற்களில் இருந்து இந்தச் சொல் உருவானதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் பழமையான எகிப்திய மொழியில் இருந்து திரிந்த சொற்கள்தான் இவை எனத் தற்கால ஆய்வுகள் சொல்கின்றன. இந்தச் சான்றின் அடிப்படையில் மம்மி வாட்டா வழிபாடு முதலில் எகிப்தில் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது.

அருளும் துடியான தெய்வம்

தொகு

தமிழக நாட்டார் தெய்வங்களைப் போல மம்மி வாட்டா ஆப்பிரிக்க கண்டப் பகுதிகளில் துடியான தெய்வமாகப் போற்றப்படுகிறாள். சொல்லுக்கடங்காத சூரத்தனங்கள் கொண்டவளாகவும் மம்மி வாட்டா தொன்மக் கதைகளில் சித்திரிக்கப்படுகிறாள். அவளது ஆக்ரோஷத்தை வெள்ளப் பெருக்குக்கும் அவளது கருணையை நீரின் அமைதிக்கும் ஒப்பிடுகிறார்கள்.

துன்பங்களை, வலிகளை, பாவங்களை வாங்கிக்கொண்டு மக்களுக்கு மனசாந்தியை வழங்கக்கூடியவளாகவும் குழந்தையில்லாப் பெண்களுக்கு குழந்தைப் பேற்றை அருளக்கூடியவாளாகவும் மம்மி வாட்டா வணங்கப்படுகிறாள். இன்றைக்கு மம்மி வாட்டா வழிபாடு கியூபா, பிரேசில், நைஜீரியா, கானா, ஜமைக்கா, ஹெய்டி எனப் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கிறது.

மேற்கோள்

தொகு
  1. Drewal, Henry John (2008). "Introduction: Charting the Voyage". In Drewal, Henry John (ed.). Sacred Waters: Arts for Mami Wata and other divinities in Africa and the diaspora. Bloomington: Indiana University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-253-35156-2., p. 1.
  2. Van Stipriaan 325.
  3. Bastian, Misty L. "Nwaanyi Mara Mma: Mami Wata, the More Than Beautiful Woman". Department of Anthropology, Franklin & Marshall College. பரணிடப்பட்டது 2005-04-17 at the வந்தவழி இயந்திரம்
  4. Higgins 1836, p. 105-106,113, 117.
  5. Griaule 1997
  6. Winters 1985 p. 50-64
"https://ta.wikipedia.org/w/index.php?title=மம்மி_வாட்டா&oldid=4071883" இலிருந்து மீள்விக்கப்பட்டது