மரிபோசைட்டு

மரிபோசைட்டு (Mariposite) என்பது K(Al,Cr)2(Al,Si)4O10(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும்.[1] இது குரோமியம் நிறைந்த மைக்கா வகை கனிமமாகும். பொதுவாக காணப்படும் வெள்ளை டோலோமைட்டு பளிங்குப் பாறைக்கு இது கவர்ச்சிகரமான பச்சை நிறத்தை அளிக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மரிபோசாவில் கிடைத்த காரணத்தால் கனிமத்திற்கு மரிபோசைட்டு எனப் பெயரிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் சியேரா நிவாடா மலைத்தொடரிலும் பல இடங்களில் மரிபோசைட்டு கிடைக்கிறது. வாசிங்டன் மாநிலத்திலுள்ள மார்பிள்மவுண்ட்டு, கனடாவின் நியூஃபவுண்ட்லேண்டில் உள்ள சில இடங்கள், வடக்கு காசுகேடு போன்ற இடங்களிலும் ஐரோப்பாவிலும் மரிபோசைட்டு கிடைக்கிறது. இங்கெல்லாம் மரிபோசைட்டு கனிமம் வர்ச்சினைட்டு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

மரிபோசைட்டு கனிமம் கொண்ட பாறையின் குறுக்குவெட்டு
கலிபோர்னியா மாநிலம் மரிபோசா மாகாணத்தில் மரிபோசைட்டு கனிமம் பயன்படுத்தப்பட்ட ஒரு நினைவுச்சின்னம்.
நினைவுச்சின்னத்தில் உள்ள பாறைகளில் ஒன்றின் நெருக்கமான காட்சி

மரிபோசைட்டு அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்ட கனிமமல்ல. ஆனால் குரோமியம் நிறைந்த ஃபெங்கைட்டு வகை கனிமமாகும். அதிக சிலிக்கா வகை மசுகோவைட்டு என்றும் இது அறியப்படுகிறது. குரோமியம்தான் இதன் தனித்துவமான பச்சை நிறத்தை இதற்கு அளிக்கிறது.

மாரிபோசைட்டு என்ற சொல் பச்சை மைக்கா காணப்படும் கல்லையும் குறிக்கிறது. இந்த கல் ஓர் உருமாற்ற வகை பாறையாகும். இதில் பல்வேறு அளவுகளில் டோலமைட்டு மற்றும் குவார்ட்சு கனிமங்கள் கலந்துள்ளன. குவார்ட்சின் பெரிய அளவு விகிதங்கள் இதற்கு மிகவும் கவர்ச்சிகரமான, ஒளி ஊடுருவக்கூடிய தோற்றத்தை அளிக்கின்றன. இதனால் சுவர்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் பாலங்களில் அலங்கார கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது நகைகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Mariposite". Mindat.
  2. Mariposite by Hobart M. King, Geology.com

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரிபோசைட்டு&oldid=4171030" இலிருந்து மீள்விக்கப்பட்டது