மரியா எலிசபெத்தை சந்தித்தல்
மரியா எலிசபெத்தை சந்தித்தல் அல்லது மாதா எலிசபெத்தம்மாளை மினவுதல் என்பது லூக்கா நற்செய்தி 1:39–56இல் விவரிக்கப்படும் ஒரு நிகழ்வாகும். இயேசு பிறப்பின் முன்னறிவிப்பின் போது தனது உறவினராகிய எலிசபத்து கருவுற்றிருப்பதை கபிரியேல் தூதர் மூலம் மரியா அறிந்தார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட எலிசபெத்து தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார் எனவும் இது அவருக்கு ஆறாம் மாதம் எனவும் கபிரியேல் மரியாவுக்கு அறிவித்திருந்தார்.[1]
இதனால் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டில், 100 மைல் தொலைவில் உள்ள எலிசபத்தின் ஊருக்கு விரைந்து சென்றார். மரியா செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரலில், ' பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் ' என மரியாவை வாழ்த்தினார் என விவிலியம் விவரிக்கின்றது.
எலிசபத்தின் வாழ்த்துதலைக்கேட்ட மரியா கடவுளை போற்றி ஒரு பாடல் பாடினார். அப்பாடல் மரியாவின் பாடல் என அழைக்கப்படுகின்றது.
இன்நிகழ்வு மேற்கு கிறித்தவத்தில், குறிப்பாக கத்தோலிக்க திருச்சபையில் மே 31 அன்றும், கிழக்கு கிறித்தவத்தில் 30 மார்ச் அன்றும் கொண்டாடப்படுகின்றது. இன்நிகழ்வு நடந்த இடத்தில் இப்போது சந்தித்தல் ஆலயம் உள்ளது.
கத்தோலிக்க திருச்சபையில், மரியா எலிசபெத்தை சந்தித்த நிகழ்வு, செபமாலையின் மகிழ்ச்சி மறைபொருள்களின் இரண்டாம் மறைபொருள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு