மரியா கொரெற்றி

(மரிய கொரற்றி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புனித மரியா கொரெற்றி (Maria Goretti, அக்டோபர் 16, 1890 – சூலை 6, 1902) இத்தாலிய அர்பனிக்கப்பட்ட கன்னியரும் கத்தோலிக்க திருச்சபையின் மறைசாட்சியும், கத்தோலிக்க திருச்சபையில் அதிகார்ப்பூர்வமாய் புனிதர் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவரும் ஆவார். தன்னை வன்கலவியால் அடைய முனைந்தவனுக்கு மறுப்பு தெரிவித்ததால், அவனாலேயே கத்தியால் பல முறை குத்தப்பட்டு இவர் இறந்தார்.[1]

புனித மரியா கொரெற்றி
புனித மரியா கொரெற்றி
கன்னியர் மற்றும் மறைசாட்சி
பிறப்பு(1890-10-16)அக்டோபர் 16, 1890
இத்தாலிய பேரரசு
இறப்புசூலை 6, 1902(1902-07-06) (அகவை 11)
இத்தாலிய பேரரசு
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம்ஏப்ரல் 27, 1947[1], உரோமை by பன்னிரண்டாம் பயஸ்
புனிதர் பட்டம்ஜூன் 24, 1950, உரோமை by பன்னிரண்டாம் பயஸ்
திருவிழாஜூலை 6
சித்தரிக்கப்படும் வகை14 லில்லி மலர்கள்; ஏழை உழவர்களின் உடைகள்; கத்தி
பாதுகாவல்வன் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், இளம் பெண்கள், நவீனகால இளைஞர்கள்

வரலாறு

தொகு

கல்வி கற்குமளவுக்கு வசதி இல்லாத ஏழைகுடும்பத்தில் பிறந்தவர் மரியா. 12 வயதில் இவருக்குப் புது நன்மை கொடுக்கப்பட்டது. புது நன்மை வாங்கிய ஐந்து வாரங்களுக்கு பின், அலெக்சாண்ட்ரோ செரனெல்லா என்ற 18 வயது இளைஞன் வன்கலவியால் மரியாவை அடைய முனைந்தான். மரியா அதற்கிணங்க மறுத்ததால் அவரின் உடலைப் பலமுறை கத்தியால் குத்திக் கிழித்தான். "இது பாவம், இதற்காக நீ நரகத்திற்குப் போவாய்”, என்று மரியா அவனை எச்சரித்தும் பயனில்லை. குற்றுயிராய் விடப்பட்ட மரியா மருத்துவ மனையில் 24 மணி நேரம் கழித்து உயிர் நீத்தார் . “மன்னித்துவிட்டேன் அவரை”, என்று சொல்லிவிட்டு மரித்தார்.

கொலை செய்ததற்காக அலெக்சாண்ட்ரோவுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. பலகாலமாக மனந்திரும்ப மனமி்ல்லாதிருந்த அலெக்சாண்ட்ரோ, மரியா கொரற்றி விண்ணினின்று மலர்களை தன் கை நிறையக் கொடுத்ததாகக் கனவு கண்டதாகவும் அதனால் மனமாற்றம் அடைந்ததாகவும் அறிவித்தான். 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் சிறையிலிருந்து விடுதலை பெற்றான். அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்புக் கேட்டான். அலெக்சாண்ட்ரோ தம் இறுதி நாட்களில் கப்புச்சின் 3 ஆம் சபைத் துறவியாக வாழ்ந்து கி.பி. 1970 காலமானார்.

மரியா இறந்து 45 ஆண்டுகளுக்குள் மரியாவுக்கு திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் புனிதர் பட்டம் அளித்தார். இந்த நிகழ்வுக்கு மரியாவின் தாயும், இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரரும், அலெக்சாண்ட்ரோவும் வந்திருந்தனர். இவரது புனித பட்டமளிப்பு விழாவுக்கு உலகில் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 மக்கள் உரோமைக்கு வருகை தந்தனர்.

இவர் 20 ஆம் நூற்றாண்டின் புனித ஆக்னஸ் என அழைக்கப்படுகிறார். இவரின் விழா நாள் சூலை 6 ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Hoever, Rev. Hugo, ed. "Lives of the Saints, For Every Day of the Year", New York: Catholic Book Publishing Co., (1955) p. 259-60
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_கொரெற்றி&oldid=1400714" இலிருந்து மீள்விக்கப்பட்டது