மல்லி (ஊர்)
மல்லி என்பது சங்ககால ஊர்களில் ஒன்று.
இக்காலத்தில் சேலம் மாவட்டம் ஆத்துர் வட்டத்தில் மல்லியக்கரை என்னும் ஊர் உள்ளது. இந்த ஊரே சங்ககால மல்லி எனக் கொள்ளும் வகையில் பாடலின் குறிப்புகள் உள்ளன. இவ்வூர் வள்ளல் ஆதியிடம் பரிசில் பெறச் செல்வோர் இவ்வூர்ப் பகுதியில் ஆங்காங்கே உள்ள குன்றுகளில் களாப்பழங்களைப் பறித்துத் தின்றுகொண்டே செல்லலாமாம். களாப் பழத்தின் புளிப்பினிமை திவட்டிவிட்டால் அங்கு ஓடும் ஆற்றோரக்கரை நாவல் பழங்களை உண்ணலாமாம். இது இவ்வூரின் அமைதி.
இவ்வூரில் வாழ்ந்த மக்கள் எயினர் குடியினர். இவர்கள் குடவர்-குடி மக்களோடு உறவு பூண்டு வாழ்ந்தனர்.
இவ்வூரில் வாழ்ந்த வள்ளல் மல்லி கிழான் காரியாதி. ஆதி என்பது இவன் பெயர். இவனது தந்தை பெயர் காரி. இந்தக் காரி கடையெழு வள்ளல்களில் ஒருவனான மலையமான் திருமுடிக் காரியாகவும் இருக்கலாம்.
இந்த வள்ளலை ஆவூர் மூலங்கிழார் பாடியுள்ளார்.[1]
அடிக்குறிப்பு
தொகு- ↑ புறநானூறு 177