மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்
மாஞ்சோலை தேயிலைத் தோட்டம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் 4,500 அடி உயரத்தில் 8,374 ஏக்கர் பரப்பளவில் அமைந்த தேயிலைத் தோட்டம் ஆகும். மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு மற்றும் குதிரை வெட்டி ஆகிய பகுதிகளில் தேயிலை தோட்டங்களும், தேயிலை தொழிற்சாலைகளும் உள்ளது. இங்கு 2,000க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்தனர்..
தமிழ்நாடு அரசு 8,374 ஏக்கர் இத்தேயிலைத் தோட்டத்தை களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் விரிவாக்கத்திற்கு பாதுகாக்கப்பட்ட காப்புக் காடாக மாற்றி அரசாணை வெளியிட்டதாலும், 28 பிப்ரவரி 2018 அன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திலிருந்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. [1]
இத்தேயிலைத் தோட்டத்தை பம்பாய்-பர்மா டிரேடிங் கம்பெனி நிர்வாகம், 1929ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாண அரசிடமிருந்து 99 ஆண்டுகால குத்தகைக்கு பெற்று, தேயிலைத் தோட்டம் பயிரிட்டு, தேயிலை தொழிற்சாலைகள் மூலம் பதப்படுத்தப்பட்ட தேயிலையை உற்பத்தி செய்து வருகிறது. இத்தேயிலைத் தோட்டத்தில் நான்கு தலைமுறை மக்கள் தோட்ட வேலை செய்து வருகின்றனர். தேயிலைத் தோட்டத்தின் குத்தகை காலம் பிப்ரவரி 2028ஆம் ஆண்டுடன் முடிகிறது. தற்போது இத்தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 700 பேர் உள்ளனர்.
இந்நிலையில் 19 செப்டம்பர் 2018 அன்று 8,374 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை, களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் விரிவாக்கத்திற்கு பாதுகாக்கப்பட்ட காப்புக் காடாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.[2]
இதனால் பிப்ரவரி 2028 உடன் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டம் மூடி வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதால், தேயிலைத் தோட்ட்டத் தொழிலாளர்கள் குடும்பத்துடன், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. [3] இதனால் மாஞ்சோலைத் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் எதிர்காலம் கேள்விக்குரியதாக உள்ளது. மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு மாற்று உறைவிடம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்து போராடுகின்றனர்.
இந்நிலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் ஏற்று நடத்தக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து தீர்ப்பு வழங்கியது.[4]மேலும் புலம் பெயர உள்ள 700 மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசுக்கு வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அவைகள் பின்வருமாறு:
- இடம்பெயர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நிதியுதவி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- கிராமப்புறங்களில் குடியேற விரும்பும் வீடற்ற தொழிலாளர்களுக்கு இலவசமாக பட்டா வழங்குதல் மற்றும் "கலைஞர் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் தனி நபர் வீடுகள் கட்ட நிதியுதவி வழங்குதல்.
- தகுதியுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் திறன் பயிற்சி வழங்குதல்.
- திறன் பயிற்சியை முடித்த தொழிலாளர்களுக்கு தனியார் துறையில் பொருத்தமான வேலை வாய்ப்புகளை வழங்க ஏற்பாடு செய்தல்.
- அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அவர்கள் விரும்பும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கும் மற்றும் அரசு விடுதிகளில் தங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிறப்பு முகாம்களை நடத்தி அவர்கள் குடியேற விரும்பும் முகவரிகளுக்கு குடும்ப அட்டைகள், ஆதார் அட்டைகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்கள் "கவனமாகச் செயல்படுத்தப்படுவதை" உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தவிப்பும் பின்புலமும்
- ↑ Manjolai Estate among 23,000 hectares in Tirunelveli district declared Reserve Forests
- ↑ மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை மூடிவிட்டு தொழிலாளர்களை வெளியேற சொல்வது ஏன்?
- ↑ Manjolai must be restored into a pristine forest, orders Madras High Court