மாணாக்கர் (இலக்கணம்)

அனைவருக்கும் கல்வி என்பது உலகநெறி. இதன் அடிப்படையில் கல்வி வழங்கும் பொறுப்பினை இக்காலத்தில் அரசு மேற்கொண்டுள்ளது. இங்குக் கூறப்படுவது அதற்கு முந்தைய நிலை. ஆசிரியர், மாணாக்கர் பற்றிய செய்திகளைப் பண்டைய நூல்கள் தொகுத்துக் கூறுகின்றன.

நன்னூல் தொகு

மாணாக்கர் வரலாறு

  1. தன்மகன்,
  2. தன்னுடைய ஆசிரியருடைய மகன்,
  3. நாட்டையாளும் அரசனுடைய மகன்,
  4. பொருளை மிகுதியாக வாரிவழங்குபவன்,
  5. தன்னை வணங்கி வழிபடுபவன்,
  6. சொல்லும் பொருளை விரைந்து ஏற்றுக் கொள்ளும் திறனுடையோன்

ஆகிய அறுவருக்கே நூலைக் கற்பிக்க வேண்டும். இவர்களே மாணாக்கர் ஆவதற்கு தகுதியுள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. [1] மாணாக்கர் வகை [2]

  • தலை மாணாக்கர்
    • பால் கலந்த நீரில் பாலை மட்டும் உண்ணும் அன்னம் போன்றவர். [3]
    • ஈரம் கலந்த மண்ணில் சத்தை மட்டும் கொள்ளும் மரவேர் போன்றவர்
    • கிடைக்கும் புல்லை விரைந்து உண்டு அசை போடும் பசு போன்றவர்
  • இடை மாணாக்கர்
    • உழும் அளவுக்குப் பலன் தரும் மண் போன்றவர்.
    • சொன்னதை மட்டும் சொல்லும் கிளிப்பிள்ளை போன்றவர்
  • கடை மாணாக்கர்
    • ஓட்டைக் குடம் போல ஆசிரியர் சொன்னதையெல்லாம் மறப்பவர்.
    • செடிக்கொரு வாயாகக் கடித்து மேயும் ஆடு போன்றவர்
    • தெளிந்த நீரைக் கலக்கிக் குடிக்கும் எருமை போன்றவர்
    • பன்னாடை போல் சாற்றை வடிய விட்டுவிட்டுச் சக்கையைப் பற்றிக்கொள்பவர்

மாணாக்கர் ஆகாதவர் [4]

மாணாக்கர் ஆகாதவர் இலக்கணம் என்று மாணாக்கர் ஆவதற்குத் தகுதியில்லாதவர்களை நன்னூல் பட்டியலிட்டுக் காட்டுகிறது.
  1. கள்ளுண்டு களிப்பவன்,
  2. சோம்பல் உடையவன்,
  3. தன்னைத் தானே பெருமை பேசிக்கொள்பவன்,
  4. காமுகன்,
  5. கள்வன்,
  6. நோயாளி,
  7. அறிவில் ஏழையானவன்,
  8. குணம் மாறுபடப் பேசுபவன்,
  9. சினமுடையவன்,
  10. மிகுதியாக உறங்குபவன்,
  11. மந்த புத்திக்குச் சொந்தக்காரன்,
  12. தொன்னூல்களைக் கற்க அஞ்சுபவன்,
  13. அஞ்சவேண்டிய செயல்களுக்கு அஞ்சாதவன்,
  14. பாவத்தைச் செய்யும் இயல்பு கொண்டவன்,
  15. பொய் பேசுபவன்

ஆகிய 15 பேரும் மாணாக்கர் ஆவதற்குத் தகுதியற்றவர்கள் என்று பட்டியலில் காட்டப்பட்டுள்ளது.

சீவசம்போதனை தொகு

உயிர் வாழ்வதற்கு உரிய அறிவுரை கூறும் இந்த நூல் மாணாக்கராய் இருந்து நூல் கேட்பதற்கு உரியவர் இன்னின்னார் என்று குறிப்பிடுகிறது. [5]

  • அட்டைபோல் ஆசிரியரைத் துன்புறுத்திப் பெறுபவர்
  • கழுகு போல் ஆசிரியர் சுவடிகளைக் கவர்ந்து செல்வோர்

ஆகிய உவமைகள் இதில் புதுமையானவை.

அடிக்குறிப்புகள் தொகு

  1. நன்னூல் 37
  2. நன்னூல் 38
  3. நீரிலுள்ள காற்றை மட்டும் மூச்சாக்கிக்கொள்ளும் மீன் போல அக்கால அன்னம் பாலை மட்டும் பிரித்துண்ணும் உறுப்பினைப் பெற்றிருந்தது போலும்
  4. நன்னூல் 39
  5. அட்டைக் கிளி வெருகு ஆடு எருமை வல்லூறு
    குட்டற்குடம் கல்லொடு மண் - மட்டக்கள்
    நெய்வடிநார் போல்வாரை நீத்து அன்னமே போலும்
    மெய் உணர்வார் கேட்டல் விதி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணாக்கர்_(இலக்கணம்)&oldid=3302139" இலிருந்து மீள்விக்கப்பட்டது