மாமல்லபுரம் மும்மூர்த்தி குடைவரை

மாமல்லபுரம் மும்மூர்த்தி குடைவரை என்பது, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள பண்டைத் துறைமுக நகரான மகாபலிபுரத்தில் உள்ள பல குடைவரைக் கோயில்களுள் ஒன்று. இது பரமேசுவரவர்மனின் காலத்தைச் சேர்ந்தது எனக்கருதப்படுகிறது.

அமைப்பு

தொகு

பெரும்பாலான குடைவரைகளைப்போல் இக்குடைவரையில் மண்டபம் கிடையாது. தூண்களும் இல்லை. கருவறைகள் மூன்றும் வரிசையாக நேரடியாகவே பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. நடுவில் உள்ள கருவறை மற்ற இரண்டிலும் பார்க்கப் பெரியது. அத்துடன் இதன் முகப்பு ஏனைய இரண்டையும்விடச் சற்று முன்னோக்கி இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கருவறைக்கும் தனித்தனியாகப் படிகள் உள்ளன. கருவறைகளுக்குக் கீழே தாங்குதள அமைப்பு உண்டு. கருவறைகளுக்கு மேலே தளவரிசை, கூடுகள், சாலை போன்ற கூறுகளுடன் கூடிய ஒரு தளத்தைக் கொண்ட விமான அமைப்பும் காணப்படுகின்றது.[1]

சிற்பங்கள்

தொகு

இக்குடைவரை மும்மூர்த்திகளுக்காக அமைக்கப்பட்டது என நம்பப்படுகின்ற போதிலும், இங்குள்ள கருவறைகளில் நான்முகன் சிற்பம் இல்லை. அதற்குப் பதிலாக ஒரு குடைவரையில் நான்கு கைகளுடனும் ஒரு தலையுடனும் கூடிய புடைப்புச் சிற்பம் உள்ளது. இது முருகன் எனக் கருதப்படுகிறது. சில ஆய்வாளர்கள் இது பிரமசாஸ்தா என்று கருதுகின்றனர்.[2] இதன் வாயிலுக்கு இரு புறமும் சடைமுடியுடன் கூடிய வாயிற் காவலர்கள் உள்ளனர். நடுக் கருவறையின் பின்புறச் சுவரில் நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் சிவபிரானின் புடைப்புச் சிற்பமும், தென்புறக் கருவறையில் நான்கு கைகளுடன் அமைந்த திருமாலின் புடைப்புச் சிற்பமும் உள்ளன. கருவறைகளின் இரண்டு பக்கங்களிலும் வாயிற் காவலர் சிற்பங்கள் உள்ளன. இக்கருவறைகளுக்கு அண்மையில் கொற்றவையின் சிற்பம் ஒன்றும் உள்ளது.[3]

கல்வெட்டு

தொகு

இங்கு கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்ட கல்வெட்டுக்களும் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 80
  2. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 80
  3. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 81