மாயன் மொழிகள்
மாயன் மொழிகள் இடையமெரிக்காவிலும், நடு அமெரிக்காவிலும் பேசப்படும் ஒரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் ஆகும். மாயன் மொழிகள் குறைந்தது 6 மில்லியன் தாயக மாயர்களால் பேசப்படுகிறது. இவர்கள் முக்கியமாக கௌதமாலா, மெக்சிக்கோ, பெலீசு, ஒண்டூராசு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். 1996 ஆம் ஆண்டில் கௌதமாலா 21 மாயன் மொழிகளைப் பெயர் குறித்து முறைப்படி அங்கீகரித்தது.[1] மெக்சிக்கோ அதன் பகுதியில் உள்ள மேலும் எட்டு மொழிகளை அங்கீகரித்தது.[2]
மாயன் மொழிக்குடும்பம் அமெரிக்காவில், மிகக் கூடுதலாக ஆய்வு செய்யப்பட்டதும், சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டதுமான ஒரு மொழிக்குடும்பம்.[3] தற்கால மாயன் மொழிகள், 5,000 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட ஒரு மொழியான முந்து மாயன் மொழியில் இருந்து உருவானவை. முந்து மாயன் மொழி ஒப்பியல் முறையைப் பயன்படுத்திப் பகுதியாக மீடுருவாக்கம் செய்யப்பட்டது.