மார்க்கண்டு சுவாமிகள்

மார்க்கண்டு சுவாமிகள் (சனவரி 29, 1899 - மே 29, 1984) யாழ்ப்பாணம் கைதடியில் உறைந்தவர். யாழ்ப்பாணம் யோகசுவாமிகளது துறவுச் சீடர்களுள் தலையான இவர் ஒரு தன்னையுணர்ந்த ஞானியாவார். யோகசுவாமிகள் ”இவரை உங்களுக்கு ஒரு திசைகாட்டியாக வைத்துள்ளேன்” எனக் குறிப்பிடுவார்.

மார்க்கண்டு சுவாமி
பிறப்பு(1899-01-29)சனவரி 29, 1899
பிரான்பற்று (யாழ்ப்பாணம்),  இலங்கை
இறப்புமே 29, 1984(1984-05-29) (அகவை 85)
கைதடி, யாழ்ப்பாணம்,  இலங்கை

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் யாழ்ப்பாணத்திலுள்ள பிரான்பற்று என்னும் சிற்றூரில் 29-01-1899 இல் பிறந்தார். இவருடைய தந்தையார் சரவணமுத்து தினமும் மாட்டு வண்டியிற் சுண்ணாகம் சந்தைக்குச் சென்று வியாபாரம் செய்யும் சிறு வியாபாரியே.

கல்வி

தொகு

தனது ஆரம்பக் கல்வியை பிரான்பற்றுச் சிறுவர் பாடசாலையிலும், வடலியடைப்புச் சைவ வித்தியாலயத்திலும் பயின்றார். பின் கந்தரோடை இந்துக் கல்லூரியில் கற்று “கேம்பிரிச் சீனியர்“ தேர்விற் சித்தியடைந்தார்.

தொழில்

தொகு

பாடசாலைப் படிப்பு முடிந்த பின்னர் நில அளவைத் திணைக்களத்தில் எழுது வினைஞர் தொழில் கிடைத்தது. தியத்தலாவை, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இத்திணைக்களத்தில் பணியாற்றினார்.

 
மார்க்கண்டு சுவாமி

யோகசுவாமியுடனான தொடர்பு

தொகு

இவர் சிறுபராயம் தொடக்கம் ஆன்மீக நாட்டம் உடையவர். தமது இல்லத்தின் அருகாமையிலுள்ள முருகன் கோயிலை அவர் சிறு வயது முதலே வழிபட்டு வந்தார். இவ்வாறு ஆன்மீகத்தில் மிக ஈடுபாடுடையவராக இருந்த இவர் தான் தியத்தலாவையில் பணிபுரியும் போது யோகசுவாமிகளைத் தரிசிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். அன்று முதல் யோகசுவாமிகள் இவரைத் தனது ஆழுகைக்கு உட்படுத்தி இவருக்கு ஞான சாதனை பயிற்றத் தொடங்கினார். பின் தனது ஐம்பதாவது வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற்று யோகசுவாமிகளைப் பூரணமாகச் சரணடைந்தார்.

கைதடி ஆச்சிரமத்தை அடைதல்

தொகு

யோகசுவாமிகள் தனது முதன்மைச் சீடரைக் குடியமர்த்துவதற்கான இடம் எப்பவோ தேர்ந்தெடுக்கப்பட்டது என அவரது தொண்டர்கள் கூறுவர். 1938 ஆண்டு யோகசுவாமி கைதடிக்குச் சென்றபோது சின்னத்தம்பி என்பார் தனது வளவில் தனியாக ஒருவர் தங்கக் கூடிய குடிசை ஒன்றுள்ளது எனக்குறிப்பிட்டார். அப்போது சுவாமி ”பொறுத்திரு அதற்கு இன்னும் சில காலம் இருக்கின்றது” எனக் கூறினார். பின் சின்னத்தம்பி அவர்களின் மகனான திரு விசுவலிங்கம் அவர்களிடம் 1940 ஆம் ஆண்டளவில் அக்குடிசையை ஆயுத்தம் செய்து பால்காய்ச்சுமாறு குறிப்பிட்டார்.அவ்வாறு செய்ததும் சுவாமிகள் அதில் விளக்கேற்றி நற்சிந்தனை முதலியன பாராயணம் செய்யுமாறு குறிப்பிட்டார். பின் 1950 களில் ஒரு நாள் ”விசுவலிங்கம் உனக்கு இனிமேல் கைதடியில் இருக்க நல்ல சிநேகிதனைத் தருகிறேன். அவன் போகும் போது உங்களுக்கு எல்லாம் தந்துவிட்டுப்போவான். நான் நாளை அவனை கைதடிக்கு அழைத்து வருவேன்” எனச் சுவாமிகள் விசுவலிங்கம் என்பவரிடம் கூறினார். பின் மார்க்கண்டு சுவாமிகளை அழைத்துக்கொண்டு தேவையான பொருட்களையும் கொண்டு சென்று கைதடி ஆச்சிரமத்தில் குடியமர்த்தினார்.

சாதனை

தொகு

யோகசுவாமிகள் உணர்த்திய பிரதான சாதனை ”சும்மா இரு” என்பதுவே இவர் உண்மையயை உணருவதற்கான சாதனையாக இருந்தது. சும்மா இரு என்பது பேச்சு வழக்கு மொழியில் வேலை ஏதும் இன்றி ஓய்வாயிரு என்னும் பொருள்படும். ஆனால் ஞானசாதனையில் சும்மா இரு என்பது உடலால் வேலைசெய்யாதிருத்தலையன்றி மனத்தினால் சும்மா இருத்தலையே குறிக்கும். அதாவது மனத்தினை அங்குமிங்குமலையவிடாமல் அசைவின்றிப் பேணுவதே. மார்க்கண்டு சுவாமிக்கு யோகசுவாமிகள் கூறிய வாசம் ”வடதிசை காட்டும் கருவி” (Be like a compass) போல் இரு என்பதாகும். அதே போல் அவரும் எப்பொழுதுமே பரப்பிரமத்தை நோக்கிய வண்ணமே சாதனை செய்திருந்தார். இவரை ஆலயங்கள் தோறும் சென்று வணங்குதற்கும் யோகசுவாமிகள் அனுமதிக்கவில்லை. அருகிலிருக்கும் நல்லூருக்கும் செல்ல அனுமதிக்கவில்லை. மார்க்கண்டு சுவாமிகளின் உடம்பைக் காட்டி ”இது தான் நல்லூர், இது தான் தேர்” என அருளினார். குண்டலினி பயிற்சிக்கும் இவரை அனுமதிக்கவில்லை. ”குண்டலினியின் எழுச்சியைப் பற்றியும் சிரத்தை கொள்ளத் தேவையில்லை” எனவும் அருளினார். இவ்வாறு எவ்வெவ் துறைகளில் மனம் இலயக்குமே அவ்வக்கருமங்களில் மார்க்கண்டு சுவாமிகளைச் செல்ல விடாமல் சும்மா இருப்பதற்கே அவரைப் பழக்கினார். அதுவே அவரது ஞானசாதனையாகவும் ஆயது.

சமாதி

தொகு

இவர் இரத்தாசி வருடம் வைகாசி மாதம் 16ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (29-05-1984) நண்பகல் கார்த்திகை நட்சத்திரத்தில் சமாதிடைந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்கண்டு_சுவாமிகள்&oldid=2231412" இலிருந்து மீள்விக்கப்பட்டது