மார்ட்டின் லூதர்

செருமானிய மதகுரு, இறையியலாளர் மற்றும் எழுத்தாளர் (1483-1546)
(மார்டின் லூதர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மார்ட்டின் லூதர் (Martin Luther, நவம்பர் 10, 1483பெப்ரவரி 18, 1546) ஒரு கிறித்தவத் துறவியும் செருமனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது. கிறித்துவத்தின் முதலாவது சமயச் சீர்திருத்தச் சிந்தனையாளர் மார்ட்டின் லூதர் தான் என்று கூற இயலாது. இவருக்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பொகீமியாவில் ஜான் அஸ் என்பவரும், ஜான் வேக்கிளிஃப் என்ற ஆங்கிலேய அறிஞரும் தோன்றியிருந்தனர். இவருக்கு முன்னதாக, இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பீட்டர் வால்டர் என்ற பிரெஞ்சுக்காரரைத்தான் உண்மையில் முதலாவது சீர்திருத்தவாதி எனக் கூற வேண்டும். ஆனால், இவருக்கு முன்னர் தோன்றிய சீர்திருத்தங்கள் ஒரு குறிப்பிட்ட அளவோடு நின்று விட்டன.

மார்ட்டின் லூதர்
1529இல் லூதர், லூக்காஸ் கிரனாச்
பிறப்பு(1483-11-10)நவம்பர் 10, 1483
எயிஸ்லபென், புனித ரோமப் பேரரசு
இறப்புபெப்ரவரி 18, 1546(1546-02-18) (அகவை 62)
எயிஸ்லபென், புனித ரோமப் பேரரசு
பணிதுறவி, மதகுரு, இறையியலாளர்
சமயம்லூதரனியம்; முதலில் கத்தோலிக்கத் திருச்சபை
பெற்றோர்ஹான்ஸ் லூதர் (15ஆம் நூற்றாண்டு); மார்கரட் லூதர்
வாழ்க்கைத்
துணை
கத்தரீனா ஃபோன் போரா
பிள்ளைகள்ஹான்சு, எலிசபெத், மகதலேனா, மார்ட்டின், பவுல், மார்கரட்
கையொப்பம்

லூதருடைய இறையியல், மதஞ்சார்ந்த அதிகாரம் விவிலியம் மட்டுமே என்னும் அடிப்படையில், திருத்தந்தையின் அதிகாரத்துக்குச் சவால் விடுத்தது...

பிறப்பு மற்றும் கல்வி

தொகு

இவர் 1483 ஆம் ஆண்டில் செருமனியில் உள்ள ஐஸ்லிபென் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் ஹான்ஸ் லூதர் ஆவார். இவரின் தாயார் மார்க்ரெட்டா ஆவார். மார்ட்டின் லூதரின் தந்தையார் ஒரு வணிகர் ஆவார். மார்ட்டின் லூதர் சிறுவனாக இருக்கும் போதே லூதரின் குடும்பம் மான்ஸ்பெல்டுக்கு இடம் பெயர்ந்தது.[1] மார்ட்டின் லூதர் பல சகோதர, சகோதரிகளைக் கொண்டிருந்தார். அவர்களில் சேக்கப் என்பவர் மார்ட்டின் லூதருக்கு நெருக்கமானவராக இருந்தார்.[2] 1501 ஆம் ஆண்டில் தனது 17 ஆம் வயதில், மார்ட்டின் லூதர் எர்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார். இவர் பின்னாளில் இந்தப் பல்கலைக்கழகத்தை பீர் இல்லம் என்றும் விபச்சார விடுதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.[3] அவர் அங்கிருந்த கால கட்டத்தில் ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டார். இவ்வாறான நாட்களை அவர் "குருட்டு மனப்பாடம் செய்து கற்பதற்காகவும், சலித்துப்போகச்செய்யும் ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்வதற்காகவும் செலவழிக்கப்பட்ட நாட்கள்” என்று குறிப்பிடுகிறார்."[3] 1505 ஆம் ஆண்டு தனது முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.[4] தமது தந்தையின் வற்புறுத்தலின் காரணமாகச் சிறிது காலம் சட்டம் பயின்றார். ஆனால் சட்டக்கல்வியை இவர் முடிக்கவில்லை.[5] மாறாக, புனித அகஸ்டினியனைப் பின்பற்றும் கிறித்தவத் துறவியாக ஆனார். இவர் 1512 ஆம் ஆண்டில் ”டாக்டர்” பட்டம் பெற்றார்.[6]

துறவியாக மாறுதல்

தொகு

1505 ஆம் ஆண்டில் லூதர் தனது வாழ்வையே மாற்றியமைக்கும், துறவு வாழ்க்கை எனும் புதிய பயணத்தைத் தொடங்கப்போகும் ஒரு அனுபவத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் ஒரு கடுமையான இடி, மின்னல், புயலுடன் கூடிய மழையொன்றில் சிக்கிக்கொண்டார். அந்த நேரத்தில் தனது வாழ்வு குறித்த பயம் அவருக்கு ஏற்பட்டது. லூதர் புனித ஆன் அன்னையிடம் ”புனித ஆனே என்னைக் காப்பாற்று, நான் துறவுபூண்டு விடுகிறேன்” என்று அழுது வேண்டினார். புயல் அடங்கி அமைதி நிலை ஏற்பட்டது. லூதரின் வாழ்வு காப்பாற்றப்பட்டது. பல வரலாற்றாசிரியர்கள் இது தன்னிச்சையாக நடந்த சம்பவம் அல்ல என்றும், இது லூதரின் மனத்தில் முன்னதாகவே இருந்த எண்ணத்தின் விளைவு தான் என்றும் நம்புகின்றனர். இந்த முடிவானது மிகவும் கடினமானதாகவும், மார்ட்டின் லூதரின் தந்தைக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் அமைந்தது.[7]

ஞானமடைதல் மற்றும் சீர்திருத்த முயற்சிகள்

தொகு

லூதர் தேடிய இறையுணர்வு சார்ந்த ஞானம் கிடைக்கப்பெறாத காரணத்தால் துறவிகளுக்குரிய வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகள் கடினமானதாக இருந்தது. குரு ஒருவர் முதலில் ஞானத்தைத் தேடாமல் கிறித்துவையே தனது வாழ்நாளின் குறிக்கோளாகக் கொள்ளுமாறும், கிறித்துவானவர் அவர் தேடும் ஞானத்திற்கான வழியாக இருப்பார் என்றும் கூறி ஆற்றுப்படுத்தினார்.

இறுதியாக, மதம் சார்ந்த இலக்கியங்களை ஆய்ந்த படித்ததன் காரணமாக மார்ட்டின் லூதர் இறையுணர்வு சார்ந்த முழுமை நிலை அல்லது ஞானத்தைப் பெற்றார். 1513 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பிரசங்கத்திற்கான உரையைத் தயாரித்துக் கொண்டிருந்த போது, கிறித்துவானவர் தான் சிலுவையிலறையப்படும் போது கருணையை வேண்டிய அவரது இறைஞ்சுதலை வெளிப்படுத்தும் சங்கீதம் 22இன் முதல் வரியை வாசித்த போது இறை மற்றும் மதம் குறித்த தனது இறைஞ்சுதலுடன் அது ஒத்துப்போவதை உணர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உரோமானியர்களுக்காக புனித பவுலினால் எழுதப்பட்ட வழிபாட்டுக்கான சங்கீதப் பாடலைப் பற்றிய பிரசங்கத்திற்காக தயாரித்துக் கொண்டிருந்த போது அவர் ”விசுவாசம் மட்டுமே வாழ்வாகிறது” என்ற வரியை வாசித்தார். இந்த வரிகளை ஆழமாக வாசித்துக் கொண்டிருந்த போது, அவர் கடவுள் மீதான பயம் அல்லது மத போதனை மூலமாக அடிமைப்படுத்தப்படுதலின் மூலமாகவோ யாரும் ஆவிக்குரிய இரட்சிப்பானது நிகழாது என்பதை உணர்ந்தார். இறை மீதான நம்பிக்கை மட்டுமே ஆவிக்கான இரட்சிப்பிற்கான வழியாகும் என்று உணர்ந்தார். இந்தக் காலகட்டமே லூதரின் வாழ்வில் சீர்திருத்தத்தை நோக்கிய நகர்விற்கு வழிவகுத்த காலகட்டமாகக் குறிப்பிடப்படுகிறது.[7]

விவிலிய மொழிபெயர்ப்பு

தொகு

இளமைப்பருவத்திலிருந்தே கத்தோலிக்கத் திருச்சபையினருக்கு எதிரான மனக்குறைகள் இவரிடம் படிப்படியாக வளர்ந்தன. இவர் 1510 ஆம் ஆண்டில் ரோமாபுரி சென்றார். அங்கு ரோமானிய சமயக் குருமார்கள் கைக்கூலிக்கு எளிதில் ஆட்படுவதையும், சிற்றின்பக் கேளிக்கைகளில் ஈடுபடுவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.[6] இவர் அப்போதிருந்த பணம் பெற்றுக் கொண்டு பாவ மன்னிப்பு வழங்கும் முறையைக் கடுமையாக எதிர்த்தார். தமது புரட்சிகரமான கருத்துக்களால் அப்போதிருந்த போப்பாலும் (Pope Leo X), சக்கரவர்த்தி ஐந்தாம் சார்லசாலும் (Holy Roman Emperor Charles V) எதிர்க்கப்பட்டார்.[8] இந்தக் காரணங்களாலேயே இவர் கிறித்தவ சமய சீர்திருத்த இயக்கத்தை தோற்றுவித்தார்.

1522ஆம் ஆண்டு முதன்முதலாக புதிய ஏற்பாட்டைச் இடாய்ச்சு மொழியில் வெளியிட்டார். அவரும் அவரின் கூட்டணியாளரும் சேர்ந்து 1534ஆம் ஆண்டு பழைய ஏற்பாட்டை மொழிபெயர்த்து வெளியிட்டனர். லூதர் இம்மொழிப்பெயர்ப்புகளைத் தன் சித்தாந்தங்களுக்கு ஒத்துப்போகும்படி மாற்றி அமைத்தார். "மட்டும்" என்னும் சொல்லை "நம்பிக்கை" என்னும் சொல்லுக்குப் பின் சேர்த்து, உரோமையர் 3:28ஐ "நம்பிக்கையின் வாயிலாக மட்டுமே எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும்" என மொழிபெயர்த்தார்.[9]

இடாய்ச்சு மொழிப் பற்று அதிகமாய் இருந்த காலத்தில் இம்மொழிபெயர்ப்பு வெளிவந்ததாலும், பாமர மக்களும் புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்ததாலும் இது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

லூதரின் எழுத்துக்கள்

தொகு

மார்ட்டின் லூதரின் எழுத்துக்கள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. இருப்பினும் லூதரைப் பற்றியறிந்த கல்வியாளர்கள் அவரது படைப்புகளில் பெரும்பாலானவை பிலிப் மெலன்க்தான் போன்ற சில நல்ல நண்பர்களால் எழுதப்பட்டவை என்கின்றனர். லூதரின் புத்தகங்கள் வழிபாட்டின் போது வாசிக்கப்படும் புதிய ஏற்பாட்டுக் கடிதங்களின் அமைப்பினையும், விவிலியம் அல்லது விவிலியத்துடன் இணக்கம் கொண்டிருந்த புத்தகங்களைப் பற்றியதாகவும் இருந்தன. லூதர் தேவாலயங்களின் நிர்வாகம் மற்றும் கிறித்தவ இல்லங்கள் பற்றியும் அதிகம் எழுதியுள்ளார். லூதரின் படைப்புகளில் உள்ள வாசகங்களை வாசிக்கும் நவீன வாசகர்கள், அவரது எழுத்துக்கள் மிகவும் பண்படாதவையாக இருப்பதாகக் கருதக்கூடும். அவர் தனது மனவெழுச்சிகள் மற்றும் விரக்திகளை வெளிப்படுத்துவதில் மிகவும் வெளிப்படைத்தன்மை உடையவராக இருந்தார். ஒரு முறை அவரிடம் “நீங்கள் உண்மையாகவே கடவுளை நேசிக்கிறீர்களா?“ என்று வினவப்பட்ட போது, அவர் ”கடவுளை நேசிப்பதா? சில நேரங்களில் நான் அவரை வெறுக்கவும் செய்கிறேன்” என்று பதிலளித்தார். புத்திசாலித்தனமான இறையியலாளராகவும், தைரியமான சீர்திருத்தவாதியாகவும் இருந்தபோதும் கூட ஒருபோதும் அரசியலில் ஈடுபட விரும்பியதில்லை.[10]

திருச்சபைத் தொடர்புரிமை நீக்கமும், வோர்ம்ஸ் நகரின் உயர் அதிகார சபையும்

தொகு

1517 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாளில் சேக்சோனியில் விட்டென்பெர்க், சகல ஆன்மாக்களின் ஆலயத்தின் கதவில் மார்டின் லூதர் தனது 95 கோரிக்கைகளை ஆணி கொண்டு அடித்தார்.[11] லூதரின் 95 கோரிக்கைகள் நேரடியாக புனித உரோமையின் கத்தோலிக்கத் திருச்சபையின் மீது தாக்குதல்களை முன்வைத்தன. மார்ட்டின் லூதர் தொடர்ந்து தனது கோரிக்கை முழக்கங்களை எழுதியும் பேசியும் பரப்பி வந்தார். இதன் காரணமாக லூதரின் 95 கோரிக்கைகள் தடை செய்யப்பட்டன 1519 ஆம் ஆண்டு சூன் மற்றும் சூலை மாதங்களில் விவிலியம் அல்லது விவிலியத்தின் வசனங்களுக்கு விளக்கமளிப்பதற்கான அதிகாரம் தனிப்பட்ட முறையில் போப்பிற்கு மட்டுமே உரித்தானதல்ல என்றும் அவ்வாறான அதிகாரம் விவிலியத்தால் வழங்கப்படவில்லை என்றும் பேசியது, போப் ஆதிக்கத்தின் மீதான நேரடியான தாக்குதலாக இருந்தது. 1520 ஆம் ஆண்டு சூன் 15 ஆம் நாளில் போப், மார்ட்டின் லூதரை கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து விலக்கி வைக்கும் கடுமையான நடவடிக்கையை ஏன் எடுக்கக்கூடாது என்று விளக்கமளிக்க எச்சரிக்கப்பட்டார். அதே ஆண்டு திசம்பர் 12 ஆம் நாள், லூதர், இந்த உத்தரவைத் தாங்கிய கடிதத்தை, அனைவரும் அறியும்படி பொதுவான இடத்தில் எரித்தார். 1521 ஆம் ஆண்டு சனவரி 21 ஆம் நாள், லூதர் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டார்.[7]

1521 ஆம் ஆண்டு லூதர் வோர்ம்ஸ் நகரிலுள்ள உயரதிகார பொதுச்சபையின் முன் அழைக்கப்பட்டார். அப்போதும் அவர் தான் முன்பு கூறியவை எவற்றையும் திரும்பப்பெறப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். 1521 ஆம் ஆண்டு மே 8 ஆம் நாள், சபையானது லூதரின் எழுத்துக்களை தடை செய்தும், லூதரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாகவும் தெரிவித்து அதிகாரப்பூர்வ ஆணையை வெளியிட்டது.[12] இதன் காரணமாக அவர் தேடப்படும் குற்றவாளியானார். அவரின் நண்பர்கள் வார்ட்பர்க் கோட்டையில் தலைமறைவு வாழ்க்கையை வாழ உதவினர். இவ்வாறு, அவர் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் புதிய ஏற்பாட்டை செருமனி மொழியில் மொழிபெயர்த்தார். இதன் மூலம் சாமானிய மக்களும் கடவுளின் வார்த்தைகளை வாசித்தறியும் வாய்ப்பை நல்கினார்.[7]

லூதரின் மனைவி மற்றும் குழந்தைகள்

தொகு

1525 ஆம் ஆண்டு, மார்ட்டின் லூதர் கேத்தரினா வான் போரா என்ற பெண் துறவியர் மடத்திலிருந்து வெளியேறி விட்டன்பர்க்கில் தஞ்சமடைந்த முன்னாள் சந்நியாசினியை மணந்தார். அடுத்து வந்த பல ஆண்டுகள் இவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு 6 குழந்தைகள் பிறந்தனர்.[7]

இறுதிக்கட்ட வாழ்க்கை

தொகு

1533 முதல் 1546 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் மார்ட்டின் லூதர், விட்டர்ன்பர்க் பல்கலைக்கழகத்தில் இறையியல் துறையின் தலைவராக பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அவர் பலவிதமான நலக்குறைவுகளால் அல்லலுற்றார். மூட்டுவாதம், இதயக்கோளாறு மற்றும் செரிமான ஒழுங்கின்மை சார்ந்த பிரச்சனைகள் ஆகியவற்றால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். உடல் சார்ந்த வலி மற்றும் மனவெழுச்சி சார்ந்த அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக தப்பிக்கும் மனப்பாங்கு அவரின் எழுத்துக்களில் வெளிப்பட்டது.[7]

இறப்பு

தொகு

மார்ட்டின் லூதர் 1546 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் நாள் 62 வயதில் தனது சொந்த ஊரான ஐஸ்லிபென்னில் இறந்தார்.[13]

மேற்கோள்கள்

தொகு
  1. "Martin Luther and the 95 Theses". History.com. பார்க்கப்பட்ட நாள் 15 அக்டோபர் 2017.
  2. Marty, Martin. Martin Luther. Viking Penguin, 2004, p. 3.
  3. 3.0 3.1 Marty, Martin. Martin Luther. Viking Penguin, 2004, p. 4.
  4. Marty, Martin. Martin Luther. Viking Penguin, 2004, p. 5.
  5. Rupp, Ernst Gordon. "Martin Luther," Encyclopædia Britannica, accessed 2006.
  6. 6.0 6.1 Michael H. Hart (1992). The 100. New York: Kensington Publishing Corporation. p. 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8065-1350-0.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 "Martin Luther". Biography.com. பார்க்கப்பட்ட நாள் 21 அக்டோபர் 2017.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-02-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
  9. Mullett, 148.
  10. "Martin Luther". Greatsite.com. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2017.
  11. "Martin Luther and the 95 Theses". History.com. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2017.
  12. "Martin Luther (1483-1546)". BBC History. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2017.
  13. "Martin Luther (1483-1546)". BBC History. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டின்_லூதர்&oldid=3725873" இலிருந்து மீள்விக்கப்பட்டது