மாவலி (கம்பன் காட்சி)
மாவலி என்பவன் வரலாற்றைக் கம்பராமாயணம் குறிப்பிடுகிறது. தன் வேள்விக்குத் துணை புரியுமாறு இராமனையும் இலக்குவனையும் அழைத்துக்கொண்டு விசுவாமித்திர முனிவன் சென்றான். வழியில் இருந்த சோலை ஒன்றினைப் பார்த்து அதனைப்பற்றி இராமன் முனிவரிடம் வினவினான். முனிவன் அந்தச் சோலையைப் பற்றிக் கூறும்போது மாவலி வரலாற்றைக் கூறுகிறான். [1] புராணங்களில் இவன் பெயர் பகாபலி என்று உள்ளது. கதைப்போக்கும் வேறாக உள்ளது.
மாவலி வரலாறு
தொகுமாவலி என்னும் மன்னன் உலகினைத் தூக்கும் ஆண்பன்றி போன்ற வலிமை படைத்தவன். [2] இவன் வானவர் வேள்வி செய்ய விடாமல் தடுத்தான். [3]
அதனால் தேவர்கள் திருமாலை வணங்கிக் காக்குமாறு வேண்டிக்கொண்டனர். [4]
திருமால் ஆலம் விதை போலக் குறள் வடிவம் கொண்டவராக, காசிபன் அதிதி ஆகியோரிக்கு மகனாகப் பிறந்தார். [5]
அந்தணன் கோலத்தில் மாவலியிடம் வந்தார். [6]
முகமன்
தொகுவாமணன் வந்தது கண்டு மாவலி எதிர் சென்று வரவேற்றான். “உன்னைக் காட்டிலும் சிறந்த அந்தணர் இல்லை; என்னைக் காட்டிலும் உயர்ந்தவர் இல்லை!” என்று வாமணனிடம் கூறினான். [7]
அதனைக் கேட்ட வாமணன் “நீண்ட கையை உடையவனே! உன்னிடம் ஏதாவது ஒன்றை விரும்பி வந்தவர் பெறாமல் திரும்பியது இல்லை” என்றான். [8]
மகிழ்ச்சி கொண்ட மாவலி “என்ன செய்யவேண்டும்” என வினவினான். “மூன்று அடி மண் இருக்குமானால் தருக” என்றான் வாமணன். உடனே வாமணன் “தந்தேன்” என்றான். [9]
அமைச்சன் எச்சரிக்கை
தொகுமாவலியின் அமைச்சன் சுக்கிராச்சாரியார் “இது வஞ்சகம்; வந்தவன் குறளன் அல்லன்; அண்டம் முற்றும் அகண்டு கிடப்பவன்; முன்பொரு காலத்தில் உலகையே விழுங்கியவன்” என்று கூறி மாவலியை எச்சரித்தார். [10]
மாவலியின் ஈகைக்குணம்
தொகு“கொடுக்க நிமிர்ந்த கை தாழாது. கொடுப்பதை விட எனக்கு என்ன நன்மை இருக்கிறது” என்று மாவலி கூறினான். [11]
என்னினும் உயர்ந்தவர் ஒருவர் என்னிடம் தானம் பெறுவாராயின் என்னைக் காட்டிலும் உயர்ந்தவர் யார் – என்றான் மாவலி [12]
உயிரைக் கேட்டாலும் கொடுப்பது நன்று; கொள்வதுதான் தீயது – என்றான். [13]
ஈந்தவரே மேலானவர். இந்த உலகில் நிலையாக இருந்தவர் யார்? என்று மாவலி வினவினான் [14]
தானம் கேட்டு வருபவர் பழி உண்டாக்குபவர் அல்லர். கொடுப்பவரைத் தடுப்பவரே பகைவர் என்றான் மாவலி. [15]
கையில் உள்ளபோதே கொடுத்தல் அறம். தடுப்பது உலோபம் என்று மேலும் கூறினான். [16]
ஈதல்
தொகுஇவ்வாறெல்லாம், அமைச்சன் கூற்றைத் தடுத்துக் கூறிய மாவலி, “உன் காலடிகளால் மூன்று அடி அளந்துகொள்க” என்று கூறிக்கொண்டு வாமணன் கையிலிருந்த கண்டிகை நீரை வாங்கித் தாரை வார்ந்தான். [17]
மாவலி தாரை வார்த்த நீர் கையில் பட்டதும் வாமணன் வியப்பும் அச்சமும் கொள்ளுமாறு வானளாவ உயர்ந்தான். உயர்ந்தவர்க்குச் செய்த உதவி பெரிதாவது போல உயர்ந்தான். [18]
அளக்க உயர்ந்த கால் வானுலகம் மண்ணுலகம் அனைத்தையும் இரண்டு தப்படிகளால் அளந்துவிட்டது. [19]
வானளாவ உயர்ந்த குறளன் மூன்றாவது தப்படிக்கு மாவலியின் தலைமேல் வைத்து அளந்துகொண்டான். [20]
மாவலி பிடுங்கிக்கொண்ட இந்தச் சோலையை இந்திரனுக்குக் கொடுத்துவிட்டுத் திருமால் பாற்கடலில் பள்ளிகொள்ளச் சென்றுவிட்டார். அவரது காலடிகளைத் திருமகளின் கைகள் சிவந்து காட்டுகின்றன. [21]
மேற்கோள்கள்
தொகுபாடல்கள் - கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
- ↑ கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
- ↑ ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண், ஏனம் எனும் திறல் மாவலி என்பான் - பாடல் 8)
- ↑
'செய்தபின், வானவரும் செயல் ஆற்றா
நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான்;
ஐயம் இல் சிந்தையர் அந்தணர் தம்பால்,
வையமும் யாவும் வழங்க, வலித்தான்; - 9 - ↑
'ஆயது அறிந்தனர் வானவர், அந் நாள்;
மாயனை வந்து வணங்கி இரந்தார்;
"தீயவன் வெந் தொழில் தீர்" என நின்றார்;
நாயகனும், அது செய்ய நயந்தான். - 10 - ↑
'காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வால்-அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய்,
நீல நிறத்து நெடுந்தகை வந்து, ஓர்
ஆல் அமர் வித்தின் அருங் குறள் ஆனான். 11 - ↑
'முப்புரிநூலினன், முஞ்சியன், விஞ்சை
கற்பது ஒர் நாவன், அனல் படு கையன்,
அற்புதன்,-அற்புதரே அறியும் தன்
சிற்பதம் ஒப்பது ஒர் மெய்க்கொடு-சென்றான். 12 - ↑
'அன்று அவன் வந்தது அறிந்து, உலகு எல்லாம்
வென்றவன், முந்தி வியந்து எதிர் கொண்டான்;
"நிந்தனின் அந்தணர் இல்லை; நிறைந்தோய்!
எந்தனின் உய்ந்தவர் யார் உளர்?" என்றான். - ↑
'ஆண்தகை அவ் உரை கூற, அறிந்தோன்,
"வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி,
நீண்ட கையாய்! இனி, நின்னுழை வந்தோர்
மாண்டவர்; அல்லவர் மாண்பு இலர்" என்றான். 14 - ↑
'சிந்தை உவந்து எதிர், "என் செய்?" என்றான்;
அந்தணன், "மூஅடி மண் அருள், உண்டேல்;
வெந் திறலாய்! இது வேண்டும்" எனா முன்,
"தந்தனென்" என்றனன்; வெள்ளி, தடுத்தான்: 15 - ↑
'"கண்ட திறத்து இது கைதவம்; ஐய!
கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்;
அண்டமும் முற்றும் அகண்டமும், மேல்நாள்,
உண்டவன் ஆம்; இது உணர்ந்துகொள்" என்றான். 16 - ↑
'"நினைக்கிலை; என் கை நிமிர்ந்திட வந்து,
தனக்கு இயலாவகை தாழ்வது, தாழ்வு இல்
கனக் கரியானது கைத்தலம் என்னின்,
எனக்கு இதன்மேல் நலம் யாது கொல்?" என்றான். 17 - ↑
'"துன்னினர் துன்னலர்" என்பது சொல்லார்,
முன்னிய நல் நெறி நூலவர்; 'முன்வந்து,
உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க'
என்னின், இவன் துணை யாவர் உயர்ந்தார்? - ↑
'"வெள்ளியை ஆதல் விளம்பினை, மேலோர்
வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்,
எள்ளுவ என் சில? இன் உயிரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால். 19 - ↑
'"மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர்;-எந்தாய்!-
வீந்தவர் என்பவர்; வீந்தவரேனும்,
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே? 20 - ↑
'"அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்;
கொடுப்பவர் முன்பு, 'கொடேல்' என நின்று,
தடுப்பவரே பகை; தம்மையும் அன்னார்
கெடுப்பவர்; அன்னது ஒர் கேடு இலை" என்றான். - ↑
'"கட்டுரையின், தம கைத்து உள போழ்தே
இட்டு, இசைகொண்டு, அறன் எய்த முயன்றோர்
உள் தெறு வெம் பகை ஆவது உலோபம்;
'விட்டிடல்' என்று விலக்கினர் தாமே." 22 - ↑
'முடிய இம் மொழி எலாம் மொழிந்து, மந்திரி,
"கொடியன்" என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன்;
"அடி ஒரு மூன்றும், நீ, அளந்து கொள்க" என,
நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான். 23 - ↑
'கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்,
பயந்தவர்களும் இகழ் குறளன், பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள, விசும்பின் ஓங்கினான் -
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே. 24 - ↑
'நின்ற கால் மண் எலாம் நிரப்பி, அப்புறம்
சென்று பாவிற்றிலை, சிறிது பார் எனா;
ஒன்ற, வானகம் எலாம் ஒடுக்கி, உம்பரை
வென்ற கால் மீண்டது, வெளி பெறாமையே. 25 - ↑
'உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
அலகு இலாது, அவ் அடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்,-
சிலை குலாம் தோளினாய்!-சிறியன் சாலவே! 26 - ↑
'"உரியது இந்திரற்கு இது" என்று, உலகம் ஈந்து போய்,
விரி திரைப் பாற்கடல் பள்ளி மேவினான்;
கரியவன், உலகு எலாம் கடந்த தாள் இணை
திருமகள் கரம் செக்கச் சிவந்து காட்டிற்றே! 27