மிங் கல்லறைகள்

கல்லறைகள்

மிங் கல்லறைகள் என்பன சீனாவின் மிங் வம்சப் பேரரசர்களால் கட்டப்பட்ட அரச கல்லறைகளின் தொகுதி ஆகும். முதல் மிங் பேரரசரின் கல்லறை, தலைநகரமான நான்சிங்குக்கு அண்மையில் அமைக்கப்பட்டது. இருந்தும், பெரும்பாலான மிங் கல்லறைகள் ஒரு தொகுதியாக பெய்சிங்குக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளன. இவை கூட்டாக மிங் வம்சத்தின் பதின்மூன்று கல்லறைகள் என அறியப்படுகின்றன. இவை பெய்சிங் நகர மையத்துக்கு வட-வடமேற்காக 42 கிலோமீட்டர்கள் (26 mi) தொலைவில் பெய்சிங் மாநகரசபையின் புறநகரப் பகுதியான சாங்பிங் மாவட்டத்தில் உள்ளன. தியான்சூ மலையின் தெற்குப் பக்கச் சரிவில் உள்ள இந்த இடம், மூன்றாவது மிங் பேரரசர் யொங்லு என்பவரால் ஃபெங் சுயிக் கொள்கைகளுக்கு அமைவாகத் தெரிவு செய்யப்பட்டது. 1420 ஆம் ஆண்டில் பேரரசு மாளிகை (தடுக்கப்பட்ட நகர்) கட்டப்பட்ட பின்னர் பேரரசர் யொங்லு தன்னைப் புதைப்பதற்கான இடத்தைத் தெரிவு செய்து தன்னுடைய சொந்தக் கல்லறையையும் உருவாக்கினார். பின் வந்த பேரரசர்களும் தமது கல்லறைகளை அவ்விடத்திலேயே அமைத்தனர்.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
மிங் கல்லறைகள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Standing in the spirit way at the Ming Tombs looking back towards the entry gate.
ஒப்பளவுi, ii, iii, iv, vi
உசாத்துணை1004
UNESCO regionஆசியா-பசிபிக்

பேரரசர் யொங்லு தொடக்கம் 13 பேரரசர்களை இப்பகுதியிலேயே புதைத்தனர். முதல் மிங் பேரரசர் ஒங்வூ பேரரசரின் சியாவோலிங் கல்லறை தலைநகரமான நான்சிங்குக்கு அண்மையில் அமைந்தது. இரண்டாவது பேரரசர் சியான்வென், பேரரசர் யொங்லுவால் பதவி நீக்கப்பட்டுத் தலைமறைவானார். இதனால் அவரது கல்லறை குறித்து எதுவும் தெரியவில்லை. "தற்காலிக"ப் பேரரசர் சிங்தாயையும் இங்கே புதைக்கவில்லை. பேரரசர் தியான்சுன் இவருக்குப் பேரரசுப் புதைப்பை ஏற்றுக்கொள்ளாததால் இவரை பெய்சிங்குக்கு மேற்கில் புதைத்தனர்.[1] இங்கே புதைக்கப்பட்ட கடைசிப் பேரரசர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட பேரரசர் சொங்சென் ஆவார். இவர் இவரது வைப்பாட்டியான தியானின் கல்லறையில் புதைக்கப்பட்டார். பின்னர் குறுகிய காலமே நிலைத்திருந்த சுன் வம்சத்துப் பேரரசர் லி சிசெங் இதை சி லிங் என்னும் பேரரசுக் கல்லறையாக அறிவித்தார். மிங் பேரரசர்களால் கட்டப்பட்ட பிற கல்லறைகளோடு ஒப்பிடுகையில் சி லிங் மிகவும் சிறியது.

மிங் வம்சக் காலத்தில் இக்கல்லறைகளுக்குச் செல்வதற்குப் பொதுமக்களுக்கு அனுமதி இருக்கவில்லை. 1644 இல் லி சிசெங்கின் படைகள் பெய்சிங்குக்கு முன்னேறிச் செல்வதற்கு முன்னர் அந்த ஆண்டு ஏப்ரலில் இக்கல்லறைகளைச் சூறையாடியதோடு பலவற்றுக்குத் தீயும் வைத்தனர்.

தற்போது, இந்த மிங் கல்லறைகள், உலக பாரம்பரியக் களம் என அறிவிக்கப்பட்ட "மிங், சிங் வம்சங்களின் பேரரசுக் கல்லறைகளின்" ஒரு கூறாக உள்ளன. மேற்குறித்த உலக பாரம்பரியக் களம் பெய்சிங்குக்கு அருகிலும், நான்சிங், ஏபெய், ஊபெய், லியாவோனிங் ஆகிய மாகாணங்களிலும் பரந்துள்ள கல்லறைகளை உள்ளடக்கியது.

அமைப்பு

தொகு

மிங் வம்சத்துக் கல்லறைகளின் அமைவிடம் ஃபெங் சுயிக் கோட்பாடுகளின் அடிப்படையில் கவனமாகத் தெரிவு செய்யப்பட்டது. குறித்த கோட்பாடுகளின்படி வடக்கிலிருந்து வரக்கூடிய தீய ஆவிகளும், கேடு விளைவிக்கும் காற்றுக்களும் தவிர்க்கப்படல் வேண்டும். இதற்கு உகந்ததாக, பெய்சிங்குக்கு வடக்கில் இருந்த சுண்டு மலைகளின் அடிவாரத்தில் அமைந்த வளைவான பள்ளத்தாக்குப் பகுதியை இதற்காகத் தெரிவுசெய்தனர். ஃபெங் சுயிக்கு அமைவாக தூய்மையையும், அமைதியையும், கடும் நிறத்தோடுகூடிய மண், தெளிந்த நீர் என்பவற்றோடு பிற தேவைகளையும் தன்னகத்தே கொண்டு மலைகளால் சூழப்பட்ட 40 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுடைய இப்பகுதி, மிங் வம்சத்தின் இடுகாடு ஆனது. மூன்று வளைவுகளைக் கொண்ட செந்நிறம் பூசப்பட்ட நுழைவாயிலில் தொடங்கும் ஏழு கிலோமீட்டர் நீளமான வீதியே இத்தொகுதிக்கான அணுகுவழி ஆகும். இவ்வீதியின் இருமருங்கும் காவல் விலங்குகளினதும், அதிகாரிகளினதும் சிலைகள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Eric N. Danielson, "[1]". CHINA HERITAGE QUARTERLY, No. 16, December 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிங்_கல்லறைகள்&oldid=2866411" இலிருந்து மீள்விக்கப்பட்டது